search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர்"

    காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் மீது தாக்குதல் நடத்தியவர்களை விரைவில் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தமிழ் தேசிய பேரியக்க தலைவரும், காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளருமான மணியரசன், சென்னை செல்வதற்காக தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு தனது நண்பர் சீனிவாசன் என்பவரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

    இரவு சுமார் 9.00 மணியளவில், வல்லம் சாலையிலுள்ள உணவு கிடங்கு அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் மணியரசன் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், மணியரசன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதை பயன்படுத்தி மணியரசனிடம் இருந்த கைப்பை ஒன்றை பறித்துக் கொண்டு அந்நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.


    கீழே விழுந்த மணியரசன் சிராய்ப்பு காயமடைந்ததால், அவர் உடனடியாக தஞ்சாவூர் விநோதகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்ற மணியரசனின் கைபையில் 700 ரூபாய் பணமும், இரண்டு ஏ.டி.எம் அட்டைகள், பான் கார்டு, கையடக்க கணினி, கைபேசி போன்றவை இருந்துள்ளது.
    இது தொடர்பாக மணியரசன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு (கு.எண்.301/2018, ச/பி 394 இதச) செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவ்வழக்கில் எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த உட்சுற்று கண்காணிப்பு தொலைக்காட்சி பதிவுகளை தனிப்படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    எதிரிகள் விரைவில் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்த பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். #TNAssembly #EdappadiPalanisamy
    ×