search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமம் தத்தெடுப்பு"

    பிரதமர் நரேந்திர மோடி தற்போது கூடுதலாக மேலும் ஒரு கிராமத்தை மோடி தத்தெடுத்துள்ளார். இதற்காக வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள டோமாரி கிராமம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி பதவி ஏற்றதும் எம்.பி.க்கள் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

    அதன்படி எம்.பி.க்கள் குறைந்தது ஒரு கிராமத்தையாவது தத்தெடுத்து அந்த கிராமத்தின் வளர்ச்சி திட்ட பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.

    சமீபத்தில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், கிராம தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் தற்போது நாடு முழுவதும் 1448 கிராமங்கள் மட்டுமே எம்.பி.க்களால் தத்தெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இங்கும் வளர்ச்சித் திட்டப் பணிகள் திருப்திகரமாக செயல்படுத்தப்படவில்லை என்று உயர் அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

    அடுத்து வருகிற மார்ச் மாதத்துக்குள் 2,370 கிராமங்களை தத்தெடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இரு சபைகளின் 790 எம்.பி.க்களும் கூடுதலாக கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.

    இந்த தகவல் பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அவர் தனது வாரணாசி தொகுதியில் ஜெயநகர், நாகாபூர், ககார்கியா ஆகிய 3 கிராமங்களை தத்து எடுத்து உள்ளார்.

    தற்போது கூடுதலாக மேலும் ஒரு கிராமத்தை பிரதமர் மோடி தத்தெடுத்துள்ளார். இதற்காக வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள டோமாரி கிராமம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    இங்கு கங்கை நதியில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்து அனுப்புவது உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது.

    பிரதமர் மோடி கூடுதலாக ஒரு கிராமத்தை தேர்வு செய்து இருப்பது போல் மற்ற எம்.பி.க்களும் கூடுதலாக கிராமத்தை தத்தெடுக்க முன்வர வேண்டும் என்று முத்த அரசு அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இப்போதைய நிலவரப்படி 790 எம்.பி.க்களில் 202 பேர் மட்டுமே தலா 3 கிராமங்களை தத்தெடுத்து உள்ளனர். இவர்களில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மந்திரிகள் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஸ்மிருதிஇரானி, சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர், ராம் விலாஸ் பஸ்வான், ஹர்சிம் ரத்கவுர் பாதல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

    காங்கிரஸ் தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, மோதிலால் வோரா ஆகியோர் தலா 3 கிராமங்களையும், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தலா 3 கிராமங்களையும் தத்தெடுத்துள்ளனர்.

    இதே போல் மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற்ற பா.ஜனதா எம்.பி.க்களும் தலா 3 கிராமங்களை தத்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  #PMModi
    ×