search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள கல்லூரி மாணவி"

    கேரளாவில் குடும்ப வறுமையால் கல்லூரி மாணவி சீருடையுடன் மீன் விற்று படித்து வருவது போன்ற புகைப்படம் வெளியானதைப் பார்த்த தொழிலதிபர் உள்பட பலர் மாணவிக்கு உதவ முன்வந்துள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள தொடுபுழாவை சேர்ந்தவர் ஹனான் (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    மாணவி ஹனான் கல்லூரி முடிந்ததும் சீருடையுடன் அந்த பகுதியில் உள்ள சந்தையில் மீன் விற்பனை செய்து வந்தார். தனது குடும்பம் ஏழ்மையில் வாடுவதாகவும், தனது குடும்பத்தை காப்பாற்றவும், படிப்பு செலவுக்காகவும் தான் படிக்கும் நேரம் தவிர இதுபோல மீன் விற்பனை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

    ஹனான் பற்றிய இந்த செய்தி சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் வெளியானது. மாணவியின் ஏழ்மை நிலையை உணர்ந்த பலரும் அவருக்கு உதவ முன் வந்தனர். அதே சமயம் அந்த மாணவி பள்ளி சீருடையுடன் மீன் விற்பனை செய்வதற்கு எதிரான கருத்துக்களும் பரவின.

    ஏற்கனவே மாணவி ஹனான் சில மலையாள படங்களில் சிறிய வேடங்களில் நடித்து உள்ளார். மேலும் தற்போது அவருக்கு பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பிரனவ் நடிக்கும் புதிய படத்தில் ஒரு வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்த படத்தை பிரபலப்படுத்துவதற்காகவே ஹனான் இது போல மீன் விற்று நாடகமாடி பரபரப்பு ஏற்படுத்துவதாகவும் சிலர் கருத்துக்களை பதிவிட்டனர்.


    அதேசமயம் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் ஆகியோர் மாணவியின் மன உறுதியை, தன்னம்பிக்கையை பாராட்டினார்கள். மாணவி மீன் விற்கும் படத்தை பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு அவரை பாராட்டி பதிவும் செய்தார்.

    மேலும் மாணவி ஹனான் பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு பினராயி விஜயன் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மாணவி பற்றி அவதூறு பரப்பிய வயநாடு பகுதியை சேர்ந்த நூருதீன் ஷேக் என்பவரும் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் தன் மீது அவதூறு பரப்பியவர்கள் பற்றி மாணவி ஹனான் கூறும்போது நான் பொய் சொல்லி மீன் விற்று நாடகம் ஆடுவதாக கூறுவது தவறு. எனது 7 வயது முதல் குடும்ப வறுமை காரணமாக கஷ்டத்தில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இதனால் நான் பகுதிநேர வேலைகள் செய்தே படித்து வருகிறேன் என்று உருக்கமாக கூறியிருந்தார்.

    இந்த நிலையில் மாணவி ஹனான் ஏழ்மை நிலை பலரது மனதிலும் இரக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவருக்கு உதவிகளும் குவிகிறது. கேரள மாநிலத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் தொழில் அதிபர்களாக உள்ளனர். அவர்களில் 2 பேர் ஹனானுக்கு தலா 5 சென்ட் நிலம் வழங்குவதாக போன் மூலம் அவருக்கு உறுதி அளித்துள்ளனர்.

    திருச்சூரை சேர்ந்த ரோட்டரி சங்கம் இலவசமாக வீடு கட்டி கொடுப்பதாக கூறி உள்ளது. திருச்சூரில் நாளை இதற்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளதாகவும் மாணவிக்கு உதவ விரும்புபவர்கள் இதில் பங்கேற்கலாம் என்று அறிவித்துள்ளளனர். அந்த மாணவியின் படிப்பு செலவை முழுவதும் ஏற்பதாக கேரள தொழில் அதிபர் ஒருவர் கூறி உள்ளார்.

    கேரள காங்கிரஸ் தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலா அந்த மாணவியின் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தான் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
    ×