search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள போலீசார்"

    25 ஆயிரம் கேரள போலீசாரின் தபால் ஓட்டுகள் கள்ளத்தனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதாக புதிய சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. #LokSabhaElections2019

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடை பெற்றது.

    இந்த தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணிக்கும், எதிர்க் கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

    தேர்தலின்போது கேரளாவில் உள்ள பல வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுகள் பதிவானதாகவும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இதில் ஈடுபட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டது. மேலும் ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவின் போது வெப் கேமிரா மூலம் பதிவு செய்யப்பட்ட சில வீடியோ காட்சிகளும் வெளியானது.

    அந்த வீடியோ காட்சியில் பெண்கள் உள்பட சிலர் ஓட்டுப்போட்டவுடன் அடையாள மையை தலையில் தேய்த்து அழித்துவிட்டு மீண்டும் ஓட்டுப் போட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் நடத்திய விசாரணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் உள்பட 3 பெண்கள் கள்ள ஓட்டுப் போட்டது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் 25 ஆயிரம் கேரள போலீசாரின் தபால் ஓட்டுகள் கள்ளத்தனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதாக புதிய சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

    கேரளாவில் போலீசாருக்காக சங்கம் செயல்பட்டு வருகிறது. போலீசாரின் தபால் ஓட்டுகளை அந்தந்த போலீசாரின் முகவரிக்கு அனுப்பி வைப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர்தான் தபால் ஓட்டுகளை போலீசாரின் முகவரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆனால் இந்த தபால் ஓட்டுகள் மொத்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு சங்க தலைவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த ஓட்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர்களுக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் சில போலீசாரை மிரட்டி அவர்களது தபால் ஓட்டுகளை பெற்று அதையும் முறைகேடாக பயன்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.


     

    இந்த நிலையில் சமீபத்தில் போலீஸ் சங்கத்தை சேர்ந்த ஒரு போலீஸ்காரர் செல்போனில் மற்றொரு போலீஸ்காரருடன் பேசுவது போன்ற ஆடியோ வெளியானது. அவர் தனது பேச்சில் போலீசாரின் தபால் ஓட்டுகளை மொத்தமாக பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு அதை பதிவு செய்துவிட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த போலீஸ்காரர் பத்ம நாபபுரம் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருப்பதும் அவரது பேச்சின் மூலம் தெரியவந்தது.

    இதன் மூலம்போலீசாரின் தபால் ஓட்டுக்களில் தில்லு முல்லு நடந்து இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு மேலும் வலுப்பெற்றது. இந்த ஆடியோ வேகமாக பரவியதால் இது போலீசார் மத்தியிலும், கேரள அரசியல் கட்சியினரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா கவனத்திற்கு சென்றது அவர் இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி. வினோத் குமாருக்கு உத்தரவிட்டார். அவரும் விசாரணை நடத்தி அது தொடர்பான அறிக்கையை டி.ஜி.பி.க்கு தாக்கல் செய்தார்.

    அந்த அறிக்கையில் ‘கேரள போலீசாரின் தபால் ஓட்டுக்களை மொத்தமாக வாங்கி அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு போலீஸ் சங்கத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு அனுப்பி வைத்ததும் அந்த தபால் ஓட்டுகள் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதும் உண்மைதான்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த அறிக்கை டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா மூலம் கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து கேரளா தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். வருகிற 15-ந் தேதிக்குள் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டு உள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    போலீசாரின் தபால் ஓட்டுகளில் முறைகேடு நடந்தது தொடர்பான புகார் பற்றி விசாரணை நடத்தப்பட்டது. கேரளாவை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் இதில் முக்கியபங்காற்றியது தெரியவந்துள்ளது. அவர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த விவகாரத்தில் 4 போலீசாருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது. அவர்கள் பற்றியும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பான அனைத்து விவரங்களும் மாநில தலைமை தேர்தல் கமி‌ஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள போலீஸ்காரர், கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் முன்னாள் பாதுகாப்பு படை வீரர் ஆவார். அவர் பாதுகாப்பு பணியில் 5 மாதங்கள் பணியாற்றி உள்ளார்.

    இதற்கிடையில் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா, போலீசாரின் 25 ஆயிரம் தபால் ஓட்டுகள் கள்ளத்தனமாக கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் போலீசாரை மிரட்டி அவர்களது தபால் ஓட்டுகளை போலீஸ் சங்க தலைவர்கள் கைப்பற்றி அந்த ஓட்டுகளை கம்யூனிஸ்டு வேட்பாளர்களுக்கு அவர்கள் போட்டு உள்ளதாக போலீஸ் உளவுப்பிரிவு தலைவர் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது அதிர்ச்சியளிக்கிறது. போலீசாரின் தபால் ஓட்டுகளை முழுமையாக திரும்ப பெற்று அவர்கள் மீண்டும் ஓட்டுப்போட வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்த செயல் மாநில போலீஸ் துறைக்கே அவமானம் என்று கூறி உள்ளார். #LokSabhaElections2019

    சபரிமலையில் இதுவரை 10 பெண்கள் ஐயப்பனை தரிசித்துள்ளதாக கேரள போலீசார் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பக்தர்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் இளம்பெண்கள் பலரும் அணி, அணியாய் சபரிமலைக்கு சென்றனர்.

    இதனால் சபரிமலையில் பதட்டமான நிலை உருவானது. சன்னிதானம் வரை சென்ற பெண்கள் 18-ம்படி ஏறாமல் திரும்பும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து கேரள போலீசார் சபரிமலை செல்ல விரும்பிய பெண்களை ரகசியமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். அதன்படி, கடந்த 2-ந்தேதி பிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்கள் சபரிமலை சென்று 18-ம்படி ஏறாமல் பின்பக்க வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. முதன்முதலாக இளம்பெண்கள் ஐயப்பனை தரிசித்ததாகவும் கூறப்பட்டது.



    பிந்து, கனகதுர்காவை தொடர்ந்து நேற்று இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் சசிகலா என்பவரும் ஐயப்பனை தரிசித்ததாக தகவல் வெளியானது. இவர், 18-ம் படி ஏறி சென்றதாகவும் கூறப்பட்டது.

    இது உண்மைதான் என்று போலீசார் கூறினர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தந்திரிகள் தெரிவித்தனர். இந்த குழப்பத்தை போக்க சன்னிதானத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், பெண் ஒருவர் இருமுடி கட்டுடன் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த பெண் சசிகலாதானா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

    இதற்கிடையே இலங்கை பெண் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த தகவலை முதல்-மந்திரி பினராயி விஜயன் அலுவலகம் உறுதி செய்தது. இந்த தகவல் வெளியானதும் போலீசார் இன்னொரு தகவலை வெளியிட்டனர்.

    சசிகலா, சாமி தரிசனம் செய்ததை உடனடியாக தெரிவித்தால் அவரது பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்படும் என்பதாலேயே அவரை பத்திரமாக விமான நிலையத்தில் இறக்கிவிட்ட பின்பு இந்த தகவலை வெளியிட்டதாக தெரிவித்தனர்.

    கேரள போலீசார் மேலும் இதுபற்றி கூறும்போது, சபரிமலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலேசியாவைச் சேர்ந்த 25 பேர் கொண்ட குழுவினர் சபரிமலை வந்ததாகவும், அதிலும் 3 இளம்பெண்கள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

    இந்த இளம்பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசித்ததாக கூறினர். இவர்களையும் சேர்த்து இதுவரை 10 இளம்பெண்கள் ஐயப்பனை தரிசித்துள்ளதாகவும் கூறினர்.

    இளம்பெண்கள் பலரும் அடுத்தடுத்து சாமி தரிசனம் செய்து வரும் நிலையில் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர தயாராக இருக்கும் தகவலையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கு வருகிற 22-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சபரிமலையில் ஐயப்பனை தரிசித்த இளம்பெண்கள் குறித்த விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.

    அந்த அறிக்கையில் எத்தனை இளம்பெண்கள் இதுவரை தரிசித்துள்ளனர் மற்றும் அவர்கள் யார்? யார்? என்ற விவரமும் வெளியாகலாம் என்று தெரிகிறது. #SabarimalaTemple

    ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடும் கிகி சேலஞ்ச்சின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், இப்போது மிகவும் ஆபத்தான நில்லு நில்லு என்ற புதிய சேலஞ்ச் கேரளாவில் பரவி வருகிறது. #NilluNilluChallenge
    திருவனந்தபுரம்:

    வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் அதை பதிவேற்றம் செய்யும் செயல் தற்போது அதிகரித்து வருகிறது. இவற்றில் சில வீடியோக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ஆனால் பல வீடியோக்கள் விபரீதமாக இருப்பதுதான் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறது.

    அதிலும் வீடியோ பதிவு மூலம் மற்றவர்களுக்கு சவால் விடுவது தற்போது அதிகரித்து வருகிறது. பக்கெட்டில் உள்ள ஐஸ் கட்டிகளை தன்மீது ஊற்றிக் கொண்டு அதை வீடியோ எடுத்து மற்றவர்களையும் அதேபோல செய்யச் சொல்லி பதிவான ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ முதலில் சமூக வலைதளங்களில் அதிகளவு பரவியது.

    அதைத்தொடர்ந்து ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடும் ‘கிகி சேலஞ்ச்’ பிரபலமானது. சாதாரணமானவர்கள் முதல் நடிகர், நடிகைகள் வரை ‘கிகி’ நடன சேலஞ்சில் பங்கேற்றதால் இதை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமானது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடும்போது அவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளதால் இதை கைவிடும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்ட பிறகும் அது தொடர்ந்தது.

    இந்த நிலையில் தற்போது கேரளாவில் ‘நில்லு நில்லு சவால்’ என்ற புதிய நடனம் வேகமாக பரவி வருகிறது. சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து அதன் முன்பு ‘நில்லு நில்லு’ என்று பாட்டுப்பாடி வாலிபர்கள் நடனம் ஆடுகிறார்கள். அதன்பிறகு அதை தங்கள் செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டு மற்றவர்களையும் இந்த சவாலுக்கு அழைக்கிறார்கள்.

    இருசக்கர வாகனம் முன்பு நடனம் ஆடியவர்கள் தற்போது பஸ், கார், வேன் என்று அனைத்து வாகனங்களையும் வழிமறித்து விபரீத நடனம் ஆடுகிறார்கள். இதன் உச்சகட்டமாக போலீஸ் வாகனங்களையே சிலர் மறித்து நடனம் ஆடும் அளவுக்கு சென்றுவிட்டது.

    கடந்த 2004-ம் ஆண்டு ‘ரெயின் ரெயின் கம் அகைன்’ என்ற மலையாள படம் வெளியானது. இந்த படத்தில் பாடகர் ஜேசிகிப்ட் என்பவர் பாடிய ‘நில்லு நில்லு என்ட நீலக்குயிலே...’ என்ற பாடல் இடம்பெற்று இருந்தது. இந்த பாடல் அப்போது இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற பாடலாக திகழ்ந்தது.

    காலப் போக்கில் மறந்துபோன இந்த பாடல் தற்போது மீண்டும் பிரபலமானதற்கு காரணம் மலையாள நடிகர் விஷ்ணு உன்னி கிருஷ்ணன்தான். இவர் தனது புதிய மலையாள படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ‘நில்லு நில்லு என்ட நீலக்குயிலே...’ என்ற பாடலை பாடி தனது நண்பருடன் நடனம் ஆடி சமீபத்தில் அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.


    இதைத்தொடர்ந்தே இந்த பாடல் ‘நில்லு நில்லு சவால்’ என்ற பெயரில் தற்போது ஆபத்தான நடனமாக பரவி வருகிறது. வாகனத்தை மறித்து நடனம் ஆடும் வாலிபர்கள் சிலர் தங்கள் கைகளில் கம்பு மற்றும் இலை தழைகளை வைத்துக் கொண்டு வாகனங்களை வழிமறித்து ஆடுகிறார்கள்.

    திடீரென்று இவர்கள் வாகனங்களை மறிப்பதால் அதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் நிலைதடுமாறுகிறார்கள். நடனம் ஆடுபவர்கள் மீது வாகனங்கள் மோதும் அபாயமும் நிலவுகிறது. சில வாலிபர்கள் உச்சகட்டமாக ரெயில் தண்டவாளத்தில் ரெயில் வரும்போது இந்த நடனத்தை அரங்கேற்றுகிறார்கள். ரெயில் அருகில் வந்ததும் தண்டவாளத்தில் இருந்து குதிக்கிறார்கள். இதுவும் வீடியோவாக பரவி வருகிறது.

    இதுபற்றி கேரள சைபர் கிரைம் போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்ற வண்ணம் உள்ளது. போலீசார் ‘நில்லு நில்லு சவால்’ நடனம் ஆடும் வாலிபர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    இந்த நடனம் ஆடும் சிலர் தங்களை மற்றவர்கள் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க ஹெல்மெட்டும் அணிந்து கொண்டு ஆடுகிறார்கள். வீடியோ பதிவு மூலம் இதுபோன்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். #NilluNilluChallenge
    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலையில் அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து கூடலூரில் பா.ஜ.க.வினர் கேரள அரசு பஸ்சை சிறை பிடித்தனர். #Sabarimala #BJP

    கூடலூர்:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி அவரை காரில் செல்ல விடாமல் அவமதிப்பு செய்தார். மேலும் ஊர் திரும்பும் போதும் மத்திய மந்திரியின் காரை மறித்து போலீசார் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பா.ஜ.க.வினர் அதிருப்தியடைந்தனர். இதனால் குமரி மாவட்டத்தில் முழு அடைப்புக்கு அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

    இந்த நிலையில் கேரள போலீசை கண்டித்து பா.ஜ.க.வினர் தேனி மாவட்டம் கூடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக கம்பத்துக்கு வந்த கேரள அரசு பஸ்சை அவர்கள் சிறை பிடித்ததால் பதட்டம் ஏற்பட்டது. மேலும் கேரள போலீசாருக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர். சம்பவம் குறித்து அறிந்ததும் உத்தமபாளையம் டி.எஸ்.பி. சீமராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஷாஜகான், உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டம் செய்தவர்களை கலைந்து போக எச்சரித்தனர்.

    மேலும் இது தொடர்பாக கூடலூர் நகர பா.ஜனதா தலைவர் ஜெயக்குமார் நிர்வாகிகள் விஜயகுமார், பாண்டியன், ஜெயராம் முருகன், ரமேஷ்குமார், ராஜா, பெரியமருது ஆகியோரை கைது செய்து கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  #Sabarimala #BJP

    சபரிமலை சென்ற பொன். ராதாகிருஷ்ணன் கேரள போலீசாரால் போகும் போதும், திரும்பும்போதும் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு கேரள பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். #Sabarimala #PonRadhakrishnan #BJP
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் இளம்பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    சபரிமலையில் நடக்கும் போராட்டங்களை கட்டுப்படுத்த பக்தர்களுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன்படி, பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லில் நிறுத்தப்படும். அங்கிருந்து அரசு பஸ்சில்தான் பம்பை செல்ல வேண்டும்.

    சன்னிதானத்தில் சரண கோ‌ஷம் எழுப்பக்கூடாது. இரவு நடை அடைத்த பின்பு தங்கக்கூடாது என பக்தர்கள் வலியுறுத்தப்பட்டனர். மேலும் அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    இதனை கண்காணிக்க நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானம் பகுதியில் எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சபரிமலை வரும் முக்கிய பிரமுகர்களை சன்னிதானம் அழைத்துச் சென்று திருப்பி அனுப்பினர்.

    அதன்படி, நேற்று காலையில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றார். அவருடன் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் சென்றனர். இவர்களின் கார், நிலக்கல்லை அடைந்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.பி. யதீஸ்சந்திரா, மத்திய மந்திரியுடன் வந்தவர்கள் காரை தடுத்து நிறுத்தினார்.

    மந்திரியின் காரை தவிர மற்றவர்களின் வாகனங்கள் நிலக்கல் தாண்டி அனுமதிக்கப்படாது என்று கண்டிப்பாக கூறினார். இதனால் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனுக்கும், எஸ்.பி. யதீஸ்சந்திராவுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

    அதன் பின்னரும் பாரதிய ஜனதா நிர்வாகிகளின் கார்களை அனுமதிக்காததால் பொன். ராதாகிருஷ்ணன் நிலக்கல்லில் இருந்து அரசு பஸ்சில் பம்பை சென்றார்.

    சபரிமலையில் கண் கலங்கியபடி தரிசனம் செய்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்.

    பம்பையில் இருந்து சன்னிதானம் சென்ற பொன். ராதாகிருஷ்ணன் அங்கு அய்யப்பனை தரிசித்தார். அப்போது அவரது கண்கள் கலங்கின. அய்யப்பனை பார்த்து அவர், குலுங்கி அழுதார். கோவில் நடை அடைக்கும் வரை சன்னிதானத்தில் இருந்தார். பின்பு ஆதரவாளர்களுடன் பம்பை திரும்பினார். அங்கிருந்து தனியார் காரில் கோவை புறப்பட்டார்.

    பொன். ராதாகிருஷ்ணனுடன் பாரதிய ஜனதா நிர்வாகிகள் பலர் 3 கார்களில் அவரை பின் தொடர்ந்து சென்றனர். அதிகாலை 1 மணியளவில் பொன். ராதாகிருஷ்ணனுடன் சென்றவர்களின் கார்களை எஸ்.பி. ஹரிசங்கர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    தகவல் அறிந்ததும் பொன். ராதாகிருஷ்ணன் அங்கு விரைந்து வந்தார். ஆதரவாளர்களின் காரை தடுத்து நிறுத்தியது ஏன்? என்று எஸ்.பி.யிடம் விளக்கம் கேட்டார். அதற்கு எஸ்.பி. ஹரிசங்கர், சபரிமலை பகுதியில் அதிகாலை நேரத்தில் நடைபெறும் வழக்கமான வாகன பரிசோதனை. மத்திய மந்திரியுடன் வந்த கார் என எங்களுக்கு தெரியாது. போராட்டக்காரர்கள் யாரும் இருக்கிறார்களா? என்பதை கண்டறியவே வாகனத்தை நிறுத்தினோம். நீங்கள் செல்லலாம், என்றார்.

    எஸ்.பி. ஹரிசங்கரின் விளக்கத்தை ஏற்க மறுத்த பொன். ராதாகிருஷ்ணன், அதனை கடிதமாக எழுதித் தரும்படி கூறினார். இதையடுத்து எஸ்.பி. ஹரிசங்கர், சம்பவம் குறித்து விளக்கம் அளித்து கடிதம் கொடுத்தார்.

    விளக்க கடிதம் எழுதும் போலீசார்.

    சபரிமலை சென்ற பொன். ராதாகிருஷ்ணன் கேரள போலீசாரால் போகும் போதும், திரும்பும்போதும் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு கேரள பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட எஸ்.பி.க்கள் மீது போலீஸ் டி.ஜி.பி. நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் அவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடத்தினர்.  #Sabarimala #PonRadhakrishnan #BJP
    சபரிமலைக்கு ஆதரவாளர்களுடன் சென்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை கேரள போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Sabarimala #PonRadhakrishnan
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

    சபரிமலையில் நடைபெறும் போராட்டங்களை கட்டுப்படுத்த பக்தர்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் சபரிமலை செல்லும் முக்கிய பிரமுகர்களின் கார்கள் மட்டும் நிலக்கல்லில் இருந்து பம்பை செல்ல அனுமதிக்கப்படுகிறது. மற்றவர்களின் கார்கள் எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை.

    இந்த நிலையில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இருந்து ஆதரவாளர்களுடன் இருமுடி கட்டி சபரிமலை சென்றார். இன்று காலை அவர் பத்தினம் திட்டை சென்றடைந்தார். அங்கு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

    அதன்பின்பு அவர் ஆதரவாளர்களுடன் காரில் சபரிமலை புறப்பட்டார். நிலக்கல் பகுதியில் அவரது காரை கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    பொன். ராதாகிருஷ்ணனின் காரை மட்டும் நிலக்கல்லில் இருந்து பம்பை வரை அனுமதிப்பதாகவும், அவருடன் வந்தவர்கள் காரில் செல்ல அனுமதியில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். இதற்கு பொன். ராதாகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    பத்தினம் திட்டையில் கேரள மாநில பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன்.

    பொன். ராதாகிருஷ்ணனுடன் வந்தவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ் எஸ்.பி. யதீஷ் சந்திரா, மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனுடன் சமரச பேச்சு நடத்தினார்.

    பின்னர் பொன். ராதாகிருஷ்ணன், காரில் இருந்து இறங்கினார். ஆதரவாளர்களுடன் சேர்ந்து அவரும் அரசு பஸ்சிலேயே பம்பை செல்வதாக தெரிவித்தார். அதன்படி அவர்கள் அனைவரும் பஸ்சில் பம்பை சென்றனர்.

    இது பற்றி பொன். ராதாகிருஷ்ணன் கூறும்போது, அய்யப்ப பக்தர்களிடம் அரசு இந்த அளவுக்கு கெடுபிடி காட்டக்கூடாது, அரசு பஸ்சில் தான் பக்தர்கள் செல்ல வேண்டும் என்று அவர்களை வற்புறுத்த கூடாது என்றார். #Sabarimala #PonRadhakrishnan
    ×