search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள மாணவர்"

    ‘5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் இடத்தையே இருப்பிடமாக கருத முடியும்’ என்று கூறி மருத்துவ படிப்பில் சேர்க்கை வழங்கக்கோரிய கேரளாவில் வசித்து வரும் தமிழக மாணவரின் கோரிக்கையை நிராகரித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கேரள மாநிலம் கோட்டயத்தில் வசித்து வரும் மாணவர் கவுதம், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘நான், கடந்த 2000-ம் ஆண்டு கரூரில் பிறந்தேன். கோட்டயத்தில் உள்ள பள்ளியில் படிப்பை முடித்தேன். நீட் தேர்வில் 424 மதிப்பெண் பெற்றுள்ளேன். நான் தமிழகத்தில் பிறந்ததால் எனக்கு தமிழக அளவிலான அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்க்கை வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மனுதாரர் கவுதம், கரூரில் பிறந்தாலும் தனது பெற்றோருடன் கேரளாவில் வசித்து வந்துள்ளார். பிளஸ்-2 வரை கேரள மாநிலத்தில் படித்துள்ளார். ‘நீட்’ தேர்வையும் கேரளாவில் தான் எழுதி உள்ளார். படிப்புக்காக அவர் கேரளாவுக்கு செல்லவில்லை. மாறாக அங்கேயே வசித்து வந்துள்ளார்.

    அவர் தாக்கல் செய்துள்ள இருப்பிடச் சான்றிதழை கோட்டயம் கிராம நிர்வாக அதிகாரி வழங்கி உள்ளார். அதில், மனுதாரரின் பெற்றோர் தற்காலிகமாக 20 ஆண்டுகள் கேரளாவில் வசிப்பதாக கூறப்பட்டுள்ளது.

    ஒரு இடத்தில் 20 ஆண்டுகள் வாழ்வது தற்காலிகம் என்று கூறியிருப்பதே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்திருந்தால் அவர், அந்த இடத்தைச் சேர்ந்தவராகவே கருதப்பட வேண்டும் என்று குடிமக்கள் தொடர்பான சாசனத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே மனுதாரர், தமிழக ஒதுக்கீட்டில் மருத்துவ சேர்க்கை கோர முடியாது. மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

    இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
    ×