search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா முழு அடைப்பு போராட்டம்"

    சபரிமலையில் பெண் பக்தர்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக நிலக்கல் பகுதியில் நடந்த வன்முறையில் 30-க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. #Sabarimala #SabarimalaProtests
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண் பக்தர்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு கேரளாவில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சபரிமலையில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஆச்சாரங்களை மீறக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா, காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 17-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சபரிமலை கோவிலுக்கு 50 வயதிற்குட்பட்ட பெண் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றால் அவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி நிலக்கல், பம்பை, பத்தனம் திட்டா போன்ற பகுதிகளில் திரண்ட போராட்டக்காரர்கள் பல பெண் பக்தர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் போலீஸ் வாகனங்கள், அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது.

    நிலக்கல் பகுதியில் நடந்த வன்முறையில் 30-க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. மேலும் 10-க்கும் மேற்பட்ட பக்தர்களின் வாகனங்களும் கல்வீச்சில் உடைந்தன. இது தொடர்பாக 300 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச இந்து பரி‌ஷத் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நேற்று நடை பெற்றது. இதனால் அங்கு கடைகள் அடைக்கப்பட்டன, பஸ்களும் ஓடவில்லை. நேற்றும் சபரிமலைக்கு வந்த பெண் பக்தர்களை தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பினார்கள்.

    பம்பையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சபரிமலை கோவிலுக்கு செல்லும் பாதையில் பந்தளம் ராஜ குடும்ப கட்டிடம் முன்பு சரண கோ‌ஷ போராட்டம் நடைபெற்றது. சபரிமலை ஆச்சாரத்தை மீறக்கூடாது என்று அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    சபரிமலை கோவில் தந்திரி ராகுல் ஈஸ்வரர் மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து போராட்டம் நடத்திய மன்னர் குடும்பத்தினர் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சபரிமலை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நிலக்கல், பம்பை, இலவங்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 30 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு வருகிற 22-ந்தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.

    தொடர்ந்து சபரிமலை பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு இன்றும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.  #Sabarimala #SabarimalaProtests



    ×