search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிமா டிக்கெட் விலை உயர்வு"

    கேரளாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில், சினிமா டிக்கெட் மற்றும் மதுபானங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பதால் அவற்றின் விலை உயருகிறது. #KeralaBudget #KeralaBudget2019
    திருவனந்தபுரம்:

    கேரள சட்டசபையில் இன்று நிதி மந்திரி தாமஸ் ஐசக், 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மேலும் 195 பொறியாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வனத்துறை மற்றும் வனத்துறை சார்ந்த திட்டங்களுக்காக ரூ.208 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    திரைத்துறை வளர்ச்சிக் கழகத்திற்கு ரூ.8 கோடி, உயிரியல் பூங்காக்களுக்கு ரூ.32 கோடி, மருத்துவமனைகளை நவீனமயமாக்குவதற்கு ரூ.788 கோடி, மலபார் புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.35 கோடி, கோச்சி புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.15 கோடி, சிறுபான்மை சமுதாயத்தினருக்கு ரூ.49 கோடி, தேவசம் போர்டுகளுக்கு ரூ.100 கோடி, மாற்றுத்திறனாளிகள் பென்சன் திட்டத்திற்காக ரூ.500 கோடி, சிறப்பு குழந்தைகள் நலனுக்காக ரூ.31 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.



    பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் நலத்திட்ட பணிகளுக்காக ரூ.114 கோடி, முன்னேறிய வகுப்பினரின் மேம்பாட்டுக்காக ரூ.42 கோடி ஒதுக்கப்படும். பெண்களுக்காக பிரத்யேகமாக ஹஜ் இல்லம் கட்டப்படும். வேளாண் துறைக்கு ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பயிர்க்காப்பீட்டுக்கு ரூ.20 கோடி ஒதுக்கப்படும்.

    மழை வெள்ளத்தால் பேரிழப்பை சந்தித்த கேரள மாநிலத்தை மீட்டெடுத்து, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 25 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த பணிகளை தொடங்குவதற்காக, 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    வருவாயை மேலும் உயர்த்துவதற்காக, ஐந்தாவது அட்டவணையின் கீழ் வரும் தங்கம், வெள்ளி, பிளாட்டின நகைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்கள் மீதும் 0.25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும்.

    பீர், ஒயின் உள்ளிட்ட அனைத்து வகை வெளிநாட்டு மதுபானங்களின் முதல் விற்பனை மீது 2 சதவீத வரி விதிக்கப்படும். இதன்மூலம் அரசுக்கு 180 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

    இதேபோல் சினிமா டிக்கெட்டுகள் மீது 10 சதவீத பொழுதுபோக்கு வரி விதிக்கப்படும். 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதால் சினிமா டிக்கெட் விலை உயரும். இதேபோல் புதிய மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் தனியார் சேவை வாகனங்களுக்கு ஒரு சதவீதம் (ஒரு முறை) வரி விதிக்கப்பட உள்ளது. இதன்மூலம் அரசுக்கு கூடுதலாக 200 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #KeralaBudget #KeralaBudget2019
    ×