search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபிஐ கோர்ட்"

    2009-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட வக்கீல்கள் நேரில் ஆஜராகும்படி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #CBI #ChennaiHighCourt
    சென்னை:

    இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

    இதை கண்டித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.

    இந்த போராட்டத்தின் போது, பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, ஐகோர்ட்டுக்கு வந்திருந்தார். அவர் மீது போராட்டக்காரர்கள் சிலர் அழுகிய முட்டையை வீசி தாக்குதல் நடத்தினர். ஐகோர்ட்டுக்குள் நீதிபதிகளின் கண் எதிரே இந்த சம்பவம் நடந்ததால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வைத்து வக்கீல்கள் சிலரை கைது செய்ய முயற்சித்தனர்.

    அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. ஐகோர்ட்டுக்குள் ஆயுதப்படை போலீசார் உள்ளே நுழைந்து நீதிபதிகள், வக்கீல்கள் உள்பட அனைவர் மீதும் தடியடி நடத்தினர். இதில் நீதிபதிகள் உள்பட ஏராளமான வக்கீல்கள் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவத்தால், சென்னை ஐகோர்ட்டு பல நாட்கள் இழுத்து மூடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அப்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி முகோபாத் தியாயா தலைமையிலான முதல் அமர்வு, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. பின்னர் இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்திய பின்னர், 30க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மீதும், 4 ஆயுதப்படை போலீசார் மீதும் குற்றம் சுமத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த புலன்விசாரணை பாரபட்சமாக உள்ளதாக கூறி, வக்கீல்கள் சிலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த குற்றப்பத்திரிகைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த தடை உத்தரவு கடந்த சில நாட்களுக்கு முன்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இதையடுத்து சி.பி.ஐ. போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்ட வக்கீல்களை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி. சென்னை சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த வக்கீல்கள் அனைவரும் வருகிற 28-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. #CBI #ChennaiHighCourt
    நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா மற்றும் இரண்டு அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. #CoalScam #DelhiCourt #CBIJudge
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் மேற்கு வங்காளத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் இரு பிரிவுகளை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா மற்றும் 5 பேர் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்ற விகாஸ் மெட்டல்ஸ் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனம் (விஎம்பிஎல்) மீது டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    நீதிபதி பரத் பராஷர் முன் நடந்த இந்த விசாரணையின் முடிவில் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் குற்றவாளிகளுக்கான தண்டனை தொடர்பான வாதம் நடைபெற்றது. அப்போது, குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதிக அளவில் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ. தரப்பு கோர்ட்டில் வாதிட்டது.


    70 வயது குப்தாவுக்கு பல்வேறு நோய்கள் இருப்பதால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அவரது வக்கீல் கோரிக்கை விடுத்தார். இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    அதன்படி குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா, மற்ற இரண்டு அதிகாரிகளான கே.எஸ்.கிரோபா, கே.சி.சம்ரியா ஆகியோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    மற்ற குற்றவாளிகளான விஎம்பிஎல் நிறுவன நிர்வாக இயக்குனர் விகாஸ் பன்டி, நிறுவனத்தின் சார்பில் கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட அதிகாரி ஆனந்த் மாலிக் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. விஎம்பிஎல் நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. #CoalScam #DelhiCourt #CBIJudge
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்த வழக்கில் முன்னாள் செயலாளர் உள்பட 5 பேர் குற்றவாளிகள் என சி.பி.ஐ. கோர்ட் அறிவித்தது. #CoalScam #Delhicourt #HCGupta
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் மோய்ரா மற்றும் மதுஜோரே ஆகிய பகுதிகளில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை விகாஸ் மெட்டல் அன்ட் பவர் என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில் சரியான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. முறைகேடாக இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் ஹெச்.சி. குப்தா உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்தது.

    இந்நிலையில், இவ்வழக்கில், குற்றச்சதி நடந்துள்ளதை இன்று உறுதிப்படுத்திய சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பாரத் பராஷார், முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் ஹெச்.சி.குப்தா, விகாஸ் மெட்டல் அன்ட் பவர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விகாஸ் பாட்னி, அதே நிறுவனத்தை சேர்ந்த ஆனந்த் மாலிக், ஓய்வுபெற்ற நிலக்கரித்துறை அதிகாரி கே.சி.சம்ரியா மற்றும் நிலக்கரித்துறை முன்னாள் இணை செயலாளர் கே.எஸ்.குரோப்பா ஆகியோரை இன்று குற்றவாளிகளாக அறிவித்துள்ளார்.

    இவர்களுக்கான தண்டனை விபரம் தொடர்பாக டிசம்பர் மூன்றாம் தேதி தீர்ப்பளிக்கப்படவுள்ள நிலையில் குற்றவாளிகள் அனைவரையும் இன்று சிறையில் அடைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். #CoalScam #Delhicourt #HCGupta  
    பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆண்மை நீக்க வழக்கில் ஜாமின் வழங்கி சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #GurmeetRamRahim
    அரியானா:

    தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

    இதனை அடுத்து,  அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டது. குர்மீத் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் ஏற்படுத்திய கலவரத்தில் சிக்கி 38-க்கும் அதிகமானோர் பலியாகினர். பொதுச்சொத்துக்களும் பெருமளவில் சேதமடைந்தது. 

    தனது ஆதரவாளர்கள் சுமார் 400 பேருக்கு கட்டாய ஆண்மை நீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் மீது ஒரு வழக்கு உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் அவர் ஜாமின் கோரி பஞ்ச்குலா சிபிஐ கோர்ட்டில் முறையிட்டிருந்தார்.

    அவரது மனு முதலில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜகதீப் சிங், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    ஜாமின் பெற்றாலும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளதால் அவர் சிறையில் இருந்து வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 
    கேரளாவில் போலீஸ் நிலைய காவலில் இருந்த விசாரணை கைதியை அடித்துக் கொன்றது தொடர்பான வழக்கில் 6 போலீசாருக்கு இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் தண்டனை அறிவிக்கப்படுகிறது. #KeralaPolice
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே கரமனை, நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாவதி. இவரது மகன் உதயகுமார், (வயது 30). திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள இரும்புக்கடையில் உதயகுமார் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி இரவில் உதயகுமாரும், அவரது நண்பர் சுரேஷ்குமார் என்பவரும் ஸ்ரீகண்டேஷ்வரம் பகுதியில் நடந்து சென்றனர்.

    அவர்களை கோட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். சுரேஷ்குமார் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    உதயகுமார் கையில் ரூ.4 ஆயிரம் பணம் இருந்தது. இதனால் அவரையும் போலீசார், போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் பணம் வைத்திருந்தது பற்றி கேட்டனர். அவர், ஓணம் பண்டிகைக்காக கடை உரிமையாளர் அளித்த போனஸ் பணம் என்று கூறினார்.

    இதை நம்ப மறுத்த போலீசார் அவரை அடித்து உதைத்தனர். மறுநாள் அவரை திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உதயகுமார் இறந்து போனார்.

    இந்த சம்பவம் குறித்து உதயகுமாரின் தாயார் போலீசில் புகார் செய்தார். போலீசார் மகனை அடித்து கொன்றுவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மனு கொடுத்தார்.


    அந்த மனு மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பிரபாவதி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த கோர்ட்டு உதயகுமார் மரணம் தொடர்பான மர்மத்தை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து உதயகுமார் சாவு குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது.

    சி.பி.ஐ. விசாரணையில் திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதில், சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் ஆகியோருக்கு வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாகவும், மற்றவர்கள் சதி திட்டம் தீட்டுதல், ஆதாரங்களை அழித்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதை சி.பி.ஐ. கண்டுபிடித்து சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை திருவனந்தபுரம் சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று அறிவித்தது. இதில், குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி நசீர் அறவித்தார்.

    இதில், ஏட்டு சோமன் இறந்துவிட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக கூறினார். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளார். நேற்று கோர்ட்டில் தீர்ப்பை கேட்பதற்காக ஜிதகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களை போலீசார் உடனடியாக கைது செய்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தனர்.

    மற்ற 3 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி கூறி உள்ளார்.அவர்களும் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டதும் கைது செய்யப்படுவார்கள்.

    கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாரபுழா போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஸ்ரீஜித் என்ற வாலிபர் மரணமடைந்தார். இவரும் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    மாநில மனித உரிமை கமி‌ஷனும், போலீசாரின் செயல்பாடுகள் குறித்து கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட சில போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மேலும் குற்ற செயல்களில் ஈடுபடும் போலீசார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா உத்தரவிட்டார். இதில், கொலை முயற்சி, பாலியல் புகார்கள், பணமோசடி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக 59 போலீசார் மீது குற்றம் சாட்டுக்கள் கூறப்பட்டது.

    இதில் 10 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் மீது விரைவில் நடவடிக்கை இருக்குமென்று தெரிகிறது. #KeralaPolice
    ×