search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறு வணிகம்"

    சிறு வணிகத்தை பாதுகாக்கும் வகையில் ஜி.எஸ்.டி. விலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்த்தப்படுவதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்தார். #TaxExemption #SmallBusiness #ArunJaitley #GST
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை செயல்படுத்தும் வகையில் பல்வேறு மறைமுக வரிகளுக்கு பதிலாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட்டது. இந்த வரி அமலாக்கம் குறித்த ஆலோசனை மற்றும் முடிவுகள் எடுப்பதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கவுன்சிலின் 32-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், சிறு வணிகத்தை பாதுகாப்பதற்காக அவற்றின் ஜி.எஸ்.டி.க்கான விலக்கு வரம்பை இரு மடங்காக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. இது வருகிற நிதியாண்டு (ஏப்ரல் 1-ந்தேதி) முதல் அமலுக்கு வருகிறது.



    தற்போது ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை விற்று முதல் கொண்ட சிறு வணிக நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில், இனிமேல் இந்த வரம்பை ரூ.40 லட்சமாக அதிகரிக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    வடகிழக்கு மாநிலங்களில் ரூ.10 லட்சமாக இருந்த இந்த விலக்கு வரம்பு, இனிமேல் ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5,200 கோடி வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டு இருக்கிறது.

    இதைப்போல ஜி.எஸ்.டி. கூட்டு திட்டத்துக்கான ஆண்டு விற்று முதல் வரம்பும் ரூ.1 கோடியில் இருந்து ரூ.1½ கோடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. சிறு வணிகர்கள் தங்கள் விற்றுமுதலுக்கு ஏற்ப 1 சதவீத வரி செலுத்தினால் போதுமானது என அருண் ஜெட்லி கூறினார்.

    இதைப்போல ரூ.50 லட்சம் வரை விற்று முதல் கொண்டிருக்கும் சேவை வழங்குவோர் மற்றும் வினியோகஸ்தர்கள் (சரக்கு மற்றும் சேவை) 6 சதவீத வரியுடன் ஜி.எஸ்.டி. கூட்டு திட்டத்தை தேர்வு செய்ய முடியும் என்று கூறிய அருண் ஜெட்லி, இந்த 2 திட்டங்கள் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளம் பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

    இதைத்தவிர ரியல் எஸ்டேட் மற்றும் லாட்டரி துறைகளை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு மந்திரிகள் கொண்ட 2 குழுக்கள் இந்த கவுன்சில் கூட்டத்தில் அமைக்கப்பட்டது. மேலும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மாநிலங்களுக்கு இடையேயான விற்பனைக்கு 2 ஆண்டுகள் வரை 1 சதவீத பேரிடர் வரி வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.  #TaxExemption #SmallBusiness #ArunJaitley #GST 
    ×