search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சையத் சுஜா"

    இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஹேக்கிங் செய்ய முடியும் என்று லண்டனில் நடைபெற்ற செய்முறை விளக்கம் தொடர்பாக டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகாரளித்துள்ளது. #ECI #DelhiPolice #SyedShuja
    புதுடெல்லி:

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து, பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்து விட்டதாக பிரபல மின்னணு தொழில்நுட்ப நிபுணரான சையத் சுஜா என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    உத்தரபிரதேசம், குஜராத், டெல்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்த தில்லுமுல்லு தொடர்ந்ததாகவும் தெரிவித்தார்.

    2009-2014 ஆண்டுகளுக்கிடையில் ‘இ.சி.ஐ.எல்.’ எனப்படும் இந்திய மின்னணு கழகத்தில் (எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) பணியாற்றியவர் சையத் சுஜா.

    வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான நான்  இந்த மோசடியை அம்பலப்படுத்தியதால் என்மீது தாக்குதல் நடத்தி பா.ஜ.கவினர் கொல்ல முயன்றனர் என்னும் ஒரு ‘பகீர்’ தகவலை சையத் சுஜா வெளியிட்டுள்ளார்.


    இந்த தில்லுமுல்லு தொடர்பாக விரிவாக ஆராய்ந்து கட்டுரை எழுத முயன்றதால்தான் கர்நாடக மாநிலத்தில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை தெரிந்து வைத்திருந்த மத்திய மந்திரி கோபிநாத் முன்டேவும் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரு கட்சி வேட்பாளருக்கு விழும் வாக்குகளை வேறொருவருக்கு விழுந்ததுபோல் பதிவாகச் செய்வது எப்படி? என்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி லண்டனில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் செயல்முறை விளக்கத்தையும் சையத் சுஜா நேற்று செய்து காட்டினார்.

    இந்த செயல்முறை விளக்கத்தின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் கபில் சிபல் அருகில் இருந்ததால் இந்த விவகாரம் தற்போது இந்திய அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளது.

    இந்நிலையில், இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்று லண்டனில் நடைபெற்ற செய்முறை விளக்கம் தொடர்பாக டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் இன்று புகாரளித்துள்ளது.

    இந்த புகாரின்மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சரியான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த புகார் மனுவில் தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது. #ECI #DelhiPolice #SyedShuja

    ×