search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிஎஸ்டி வரி குறைப்பு"

    ஜி.எஸ்.டி. குறைப்பை தொடர்ந்து பொட்டல பொருட்களை விலை குறைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. #TNGovernment
    சென்னை:

    ஜி.எஸ்.டி. குறைப்பை தொடர்ந்து பொட்டல பொருட்களை விலை குறைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    21.7.2018 அன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில், முடிவு செய்யப்பட்டபடி, 27.7.2018 முதல் பெயிண்ட், வார்னிஷ், குளிர்சாதன பெட்டி, வாசிங்மிஷின், தொலைக்காட்சி பெட்டி, கிரைண்டர், மிக்ஸி, வாசனை திரவியங்கள் உள்ளிட்ட சில இனங்களுக்கு ஜி.எஸ்.டி விகிதத்தை 28, 18, 12, 5 சதவீதத்தில் இருந்து வரியைக் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி. குறைப்பு காரணமாக குறைக்கப்பட்ட வரி விகிதத்தின் பயனை நுகர்வோர் பெறும் வகையில், மத்திய அரசு நுகர்வோர் பாதுகாப்பு துறை (சட்டமுறை எடையளவு பிரிவு) அறிவுரை வழங்கியது.

    அதன்படி, பொட்டல பொருட்களில் ஜி.எஸ்.டி குறைப்பு காரணமாக குறைக்கப்பட வேண்டிய தொகையை பொட்டல பொருட்களில் தனியாக ஸ்டிக்கர் ஒட்டியும், முத்திரை அல்லது ஆன்லைன் பிரிண்டிங் மூலமாக அறிவிப்பு செய்ய வேண்டும். மேலும், ஏற்கனவே உள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை விலை அருகிலேயே புதிய ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்ய வேண்டும் என்று உற்பத்தியாளர், பொட்டலமிடுபவர்கள், இறக்குமதி செய்து பொட்டலமிடுபவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



    ஜி.எஸ்.டி குறைப்பு காரணமாக குறைக்கப்பட்ட விலையில் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யும் அனுமதி, இருப்பில் உள்ள விற்கப்படாத உற்பத்தி செய்யப்பட்ட அல்லது பொட்டலமிடப்பட்ட அல்லது இறக்குமதி செய்து பொட்டலமிடப்பட்ட இனங்களுக்கும் பொருந்தும். இந்த பொருட்களை 31.12.2018 வரை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

    மேலும், ஏற்கனவே எம்.ஆர்.பி. குறித்து ஒட்டப்பட்ட ஸ்டிக்கரில் திருத்தம் செய்யவோ, அடிக்கப்படவோ, சுரண்டப்படவோ கூடாது என்ற விவரம் தெரிவிக்கப்பட வேண்டும். ஜி.எஸ்.டி குறைப்பு காரணமாக நுகர்வோர் பயனடையும் வகையில் பொட்டல பொருட்களில் குறைக்கப்பட்ட விலையை அறிவிப்பு செய்யாத தயாரிப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஜி.எஸ்.டி குறைப்பினால் பொட்டல பொருட்களின் மீது குறைக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலையில் விற்பனை செய்யாதது தொடர்பாக புகார்கள் ஏதுவும் இருந்தால் நுகர்வோர்கள் TN - LM-C-TS என்ற கைபேசி செயலியை (ஆப்) பதிவிறக்கம் செய்து அதன் மூலமாகவோ அல்லது செல்போன் எண் 9445398770 மூலமோ தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNGovernment
    ஜி.எஸ்.டியால் அதிக வரி வருவாய் கிடைத்திருப்பதால் அது மக்களுக்கு பயனடையும் வகையில் வரியை குறைக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. #GST #GSTDay

    புதுடெல்லி:

    இந்தியாவில் இதற்கு முன்பு உற்பத்தி பொருள் மற்றும் விற்பனை செய்யும் பொருட்களுக்கு மத்திய- மாநில அரசுகள் தனித்தனியாக வரி விகிதங்களை வைத்திருந்தன.

    அதை நாடு முழுவதும் ஒரே வரியாக்கி சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. வரி முறை கொண்டு வரப்பட்டது.

    ஜி.எஸ்.டி. வரி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி அமலுக்கு வந்தது. இன்றுடன் இந்த வரி முறை அமலுக்கு வந்து ஒரு ஆண்டு ஆகிறது.

    ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட போது, 4 விகிதங்களில் வரி முறை கொண்டு வரப்பட்டது. இதன்படி 28 சதவீதம், 18 சதவீதம், 12 சதவீதம், 5 சதவீதம் என 4 அளவீடுகளில் வரி விதிக்கப்பட்டது.

    இவற்றில் சில பொருட்களுக்கு வரிகளை குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டதால் சுமார் 320 பொருட்களுக்கு வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன.

    ஜி.எஸ்.டி. மூலம் ஒரு ஆண்டில் ரூ.12 லட்சம் கோடி வருமானம் வரும் என்று இலக்கு நிர்ணயித்து இருந்தனர். ஆனால், அதை விட அதிகமாகவே வருவாய் வந்துள்ளது. அதாவது ஒரு ஆண்டு முடிவில் ரூ.13 லட்சம் கோடி வருவாய் கிடைத்திருக்கிறது.

    எதிர்பார்த்ததை விட ரூ.1 லட்சம் கோடி அதிக வருவாய் கிடைத்துள்ளது.

    கடந்த ஜூலை மாதம் ரூ.94 ஆயிரத்து 63 கோடியும், ஆகஸ்டு மாதம் ரூ.93 ஆயிரத்து 590 கோடியும், செப்டம்பர் மாதம் ரூ.93 ஆயிரத்து 29 கோடியும், அக்டோபர் மாதம் ரூ.95 ஆயிரத்து 132 கோடியும், நவம்பர் மாதம் ரூ.85 ஆயிரத்து 931 கோடியும், டிசம்பர் மாதம் ரூ.83 ஆயிரத்து 716 கோடியும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.88 ஆயிரத்து 929 கோடியும், பிப்ரவரி மாதம் ரூ.88 ஆயிரத்து 47 கோடியும், மார்ச் மாதம் ரூ.89 ஆயிரத்து 264 கோடியும், ஏப்ரல் மாதம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 458 கோடியும், மே மாதம் ரூ.94 ஆயிரத்து 16 கோடியும், வசூல் ஆகி உள்ளன.

    அதாவது ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்ததை விட அதிக வரி வசூல் கிடைத்துள்ளது.

    அதிக வரி கிடைத்திருப்பதால் அது மக்களுக்கு பயனடையும் வகையில் வரியை குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இது சம்பந்தமாக மத்திய நிதித்துறை பொறுப்பு மந்திரியாக இருக்கும் பியூஸ் கோயல் கூறும் போது, வரி வருவாய் அதிகரிக்கும் போது, அந்த வருவாய் நுகர்வோருக்கு சென்றடையும் வகையில் வழி ஏற்படுத்தப்படும்.

    அதிக வருவாய் கிடைக்கும் போது மத்திய பட்ஜெட்டில் பற்றாக்குறை குறையும். எனவே, அவை அடிப்படை கட்டுமானங்களுக்கு செலவிடப்படும். மேலும் வரி வருவாய் விகிதங்களை குறைப்பதற்கும் அது வழி வகுக்கும் என்றும் அவர் கூறினார்.

    இப்போது வரி வருவாய் எதிர்பார்த்ததை விட ரூ.1 லட்சம் கோடி அதிகமாக வந்திருப்பதால் வரியை குறைக்க உள்ளனர்.

    குறிப்பாக 28 சதவீதம் வரை வரி உள்ள பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     


    கட்டுமான பொருட்களான சிமெண்டு, பெயிண்டு உள்ளிட்டவைகளுக்கு வரி குறைப்பு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    இன்னும் 11 மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, மக்களை கவரும் வகையில் இந்த வரி குறைப்பு இருக்கும்.

    விரைவில் நிதி மந்திரி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடை பெறும். அதில் எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைப்பு செய்வது என முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிய வந்துள்ளது.

    ஏற்கனவே மத்திய நிதி மந்திரி அருண்ஜேட்லி சில பொருட்களுக்கு வரி குறைப்பு செய்வது சம்பந்தமாக ஆலோசனை நடத்தி இருந்தார். இப்போது வரி வருவாய் அதிகமாக இருப்பதால் அதற்கான சாத்தியம் உருவாகி உள்ளது.

    மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியமும் ஜி.எஸ்.டி. வரிகளை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

    குறிப்பாக கார், புகையிலை பொருள், குளிர்பானங்கள் உள்ளிட்ட லக்சரி பொருட்களுக்கு 28 சதவீதம் வரி இருப்பதை சற்று குறைக்க வேண்டும் என்று அவர் கூறி இருக்கிறார்.

    சீரான வரி விகிதம் இவற்றில் இருக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை சொல்லி இருக்கிறார். எனவே, அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுள்ள பல பொருட்களின் வரி குறைய வாய்ப்பு உள்ளது.

    மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறும்போது, மக்கள் எந்த பொருட்களை வாங்கினாலும் அதற்கு ரசீது கேட்டு வாங்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் ஏமாற்ற முடியாது. அதே நேரத்தில் வருவாய் அதிகரித்து அதன் மூலம் மக்களுக்கு வரி குறைப்பு செய்ய முடியும் என்று கூறினார்.

    ஜி.எஸ்.டி. வரி வருவாய் அதிகரித்து இருப்பது குறித்து ஜி.எஸ்.டி. சேர்மன் அஜய்பூ‌ஷன் பாண்டே கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரி திட்டம் செயல்பாடுகள் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்து உள்ளது. அதன் நடைமுறைகள் சிறப்பாக உள்ளன. ஒவ்வொரு மாதமும் ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கல் அதிகரித்து வருகிறது.

    மாதத்துக்கு சராசரியாக ரூ.90 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. ஏப்ரல் மாதம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி இருக்கிறது.

    ஒவ்வொரு மாதமும் 1 கோடி கணக்கு தாக்கல்கள் நடைபெறுகின்றன. இதுவரை 12 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 380 கோடி கணக்கு வழக்குகள் அதில் இடம்பெற்றுள்ளன.

    ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கலில் இருந்த பிழைகள் இப்போது குறைந்து வருகிறது.

    இதுவரை 1 கோடியே 12 லட்சத்து 15 ஆயிரத்து 693 பேர் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோர் பட்டியலில் சேர்ந்து பதிவு செய்துள்ளனர். இது, ஏற்கனவே வரி செலுத்துவோர் எண்ணிக்கையை விட 48 லட்சத்து 38 ஆயிரத்து 726 அதிகமாகும்.

    இதற்கு முன்பு 35 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒவ்வொரு முறையான வரி விகிதங்கள் இருந்தன. மாநிலத்துக்கு மாநிலம் மதிப்பு கூட்டு வரி மாறுபட்டு இருந்தது.

    இப்போது ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டதால் அனைத்து மாநிலங்களிலும் ஒரே விகித வரி முறை வந்துள்ளது. மேலும் இதற்கு முன்பு 37 வகையான கணக்கு வழக்கு பாரங்களை தாக்கல் செய்ய வேண்டி இருந்தது. ஜி.எஸ்.டி. மூலம் அவற்றையும் எளிமையாக்கி ஒரே பாரத்தை தாக்கல் செய்யும் விகிதத்தில் கொண்டு வந்துள்ளோம்.

    இதில், இன்னும் எளிமையை கொண்டு வரப்போகிறோம். வருமான வரி தாக்கலுக்கு எவ்வாறு ஒரே பாரத்தில் எல்லா தகவல்களும் இருக்கின்றனவோ அதேபோல் ஜி.எஸ்.டி.யிலும் ஒரே பாரத்தை தாக்கல் செய்யும் வகையில் எளிமைப்படுத்த உள்ளோம்.

    மேலும் இந்த வரிமுறைகள் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால் அது, வியாபாரிகளுக்கு எளிமையாக அமைகிறது. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மேலும் இது சம்பந்தமாக விரிவாக ஆலோசனை நடத்தி இன்னும் எளிமைப்படுத்துவதற்கான நடைமுறைகள் உருவாக்கப்படும்.

    ஜி.எஸ்.டி. வரி முறைகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுவதால் இதில், வரி ஏய்ப்பு செய்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. எங்கேனும் தவறுகள் நடைபெறுகிறதா? என்பதை கண்டறிவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, யாரும் ஏமாற்ற முடியாது.

    சிறு வியாபாரிகளும் எளிமையாக கணக்கை தாக்கல் செய்யும் வகையில் எல்லா வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு விளக்கங்களும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

    சிறு வியாபாரிகளுக்கு உதவும் வகையில் புதிய சாப்ட்வேர்களும் உருவாக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #GST #GSTDay

    ×