search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.என்.பி.எல். கிரிக்கெட்"

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த தூத்துக்குடி அணிக்கு அதிர்ச்சி அளித்து மதுரை அணி 2-வது வெற்றியை சுவைத்தது. #TNPL 2018 #NammaOoruNammaGethu
    நத்தம்:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் நத்தத்தில் நேற்று மாலை நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்சும், மதுரை பாந்தர்சும் மோதின. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணிக்கு குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ரன்வேகமும் சீராகவே நகர்ந்தது. கேப்டன் கவுசிக் காந்தி 11 ரன்னிலும், தினேஷ் 35 ரன்களிலும் வெளியேறினர்.

    இதைத் தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஆனந்தும் (44 ரன், 35 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), சீனிவாசனும் (42 ரன், 29 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இறுதிகட்டத்தில் மதுரை பவுலர்கள் சாமர்த்தியமாக பந்து வீசினர். அதாவது ஸ்டம்பை குறி வைக்காமல் ஆப்-சைடுக்கு சற்று அதிகமாக வெளியே வீசினர். அதை அடித்து ஆட முடியாமல் தூத்துக்குடி வீரர்கள் தடுமாறினர். மதுரை பவுலர்களின் இந்த யுக்தியை கடைசி ஓவரில் ஆல்-ரவுண்டர் சதீஷ் தகர்த்தார். இதே போன்று பவுலிங் செய்த கிரன் ஆகாஷின் பந்து வீச்சில் ஆப்-சைக்கு நகர்ந்து சென்று பந்தை இரண்டு முறை ‘பைன்லெக்’ பகுதியில் சிக்சருக்கு பறக்கவிட்டார். ஒரு பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்று காணாமல் போய் விட்டது. இன்னொரு முறையும் பந்தை சிக்சருக்கு தூக்கினார்.

    20 ஓவர் முடிவில் தூத்துக்குடி அணி 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. சதீஷ் 24 ரன்களுடன் (10 பந்து, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். மதுரை வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வர் 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    பின்னர் களம் புகுந்த மதுரை அணிக்கு அருண் கார்த்திக்கும், கேப்டன் ரோகித்தும் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தி வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் (8.2 ஓவர்) சேர்த்த நிலையில் பிரிந்தனர். ரசிகர்களுக்கு விருந்து படைத்த ரோகித் 28 ரன்களும், 6-வது அரைசதத்தை எட்டிய அருண் கார்த்திக் 59 ரன்களும் (42 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். அடுத்து வந்த சந்திரன் (29 ரன்), ஜே.கவுசிக் ஆகியோரும் ரன்ரேட்டை குறையாமல் பார்த்துக் கொண்டனர். தூத்துக்குடி கேப்டன் 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் மதுரை பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

    19-வது ஓவரில் பவுண்டரி, சிக்சருடன் ஜே.கவுசிக் இன்னிங்சை வெற்றிகரமாக முடித்து வைத்தார். மதுரை அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜே.கவுசிக் 38 ரன்களுடன் (22 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். தூத்துக்குடி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 3-வது ஆட்டத்தில் ஆடிய தூத்துக்குடி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

    அதே சமயம் 3-வது லீக்கில் விளையாடிய மதுரை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசையும் தோற்கடித்து இருந்தது. முதல் இரு ஆண்டில் எந்த ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெறாத மதுரை பாந்தர்ஸ் அணி, இந்த சீசனில் இந்நாள் சாம்பியனையும், முன்னாள் சாம்பியனையும் வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    மதுரை கேப்டன் ரோகித் கூறுகையில், ‘இரு சாம்பியன் அணிகளை வீழ்த்தி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் இத்துடன் திருப்திபட்டு விடமாட்டோம். மேலும் வெற்றிகளை குவிக்கும் வேட்கையில் இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டார். #TNPL 2018 #NammaOoruNammaGethu
    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் உள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, காரைக்குடி காளையுடன் மோதுகிறது. #NammaOoruNammaGethu #PattaiyaKelappu #CSG #TNPL2018
    சென்னை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.

    கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் அணியிடமும், 2-வது ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியிடமும் தோல்வி கண்டது. இன்றைய ஆட்டம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது. இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும்.

    அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணி முதலாவது லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் கோவை கிங்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. 2-வது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. இந்த வெற்றி உத்வேகத்தை தொடர காரைக்குடி காளை அணி தீவிரம் காட்டும். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இந்த ஆட்டம் குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி சென்னையில் நேற்று அளித்த பேட்டியில், ‘முந்தைய இரண்டு ஆட்டங்களும் வித்தியாசமானவையாகும். சென்னையில் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. நெல்லை ஆடுகளம் மெதுவாக இருந்தது. எங்களது முழு திறமைக்கு ஏற்ப நாங்கள் விளையாடவில்லை. நாங்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். வரும் ஆட்டங்களில் வெற்றியை எதிர்நோக்குகிறோம். நாங்கள் திறமையை வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறுவோம். அடுத்த ஆட்டத்தில் (இன்றைய ஆட்டம்) விஜய் சங்கர் விளையாட வாய்ப்பில்லை என்று நான் நினைக்கிறேன். அவர் இங்கிலாந்து தொடரில் இருந்து இன்னும் நாடு திரும்பவில்லை. தரமான சுழற்பந்து வீச்சாளரான எம்.அஸ்வின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்பது எனது எண்ணமாகும். பவர்பிளேயில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. அதேநேரத்தில் மற்ற அணிகள் பவர்பிளேயில் குறைந்தபட்சம் 45 முதல் 50 ரன்கள் எடுத்தனர். அந்த பகுதியில் கவனம் செலுத்தி அதிக ரன்களை எடுக்க முயற்சிப்போம்’ என்று தெரிவித்தார்.

    இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கோபிநாத் (கேப்டன்), கங்கா ஸ்ரீதர் ராஜூ, கார்த்திக், சசிதேவ், ராகுல், எம்.அஸ்வின், சன்னிகுமார் சிங், சிவகுமார், விஷால், சித்தார்த், அலெக்சாண்டர்.

    காரைக்குடி காளை: ஆதித்யா, அனிருதா (கேப்டன்), பாப்னா, சீனிவாசன், கவின், யோமகேஷ், ஷாஜகான், மோகன் பிரசாத், லட்சுமண், சுவாமிநாதன், ராஜ்குமார். #NammaOoruNammaGethu #PattaiyaKelappu #CSG #TNPL2018

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னையில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. #NammaOoruNammaGethu #PattaiyaKelappu #CSG #TNPL2018
    சென்னை:

    8 அணிகள் இடையிலான 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை, நத்தம், சென்னை ஆகிய 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (சனிக்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 3-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது.

    பாபா இந்திரஜித் தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் அணி, தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது. கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இந்த சீசனில் இது தான் முதல் ஆட்டமாகும்.

    இவ்விரு அணிகளும் கடந்த இரு ஆண்டுகளில் இரண்டு முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இரண்டு ஆட்டத்திலும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியே வென்று இருந்தது.

    இன்றைய ஆட்டம் குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘நாங்கள் நடப்பு சாம்பியன் அணி என்பது குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கவில்லை. இது புதிய சீசன், புதிய போட்டி. அதுமட்டுமல்லாமல் முந்தைய சீசனுடன் ஒப்பிடுகையில் இது வேறுபட்ட அணியாகும். இந்த போட்டியை வெற்றியுடன் தொடங்குவதை எதிர்நோக்கி உள்ளோம். விஜய் சங்கர் இந்திய ‘ஏ’ அணியில் இடம் பெற்று இருப்பதால் அவரால் தொடக்க கட்ட லீக் ஆட்டங்களில் விளையாட முடியாது என்பதை ஏற்கனவே அறிவோம்’ என்றார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கோபிநாத் கூறுகையில், ‘இந்த ஆடுகளம் சற்று மெதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் சுழற்பந்து வீச்சாளர்கள், குறிப்பாக இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். சென்னையில் நாங்கள் மூன்று ஆட்டங்களில் விளையாடுகிறோம். அதனை எங்களுக்கு சாதகமான அம்சமாக எடுத்து கொள்ள முடியாது. குறிப்பிட்ட நாளில் எந்த அணி அசத்துகிறது என்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும்’ என்றார்.



    திருச்சி வாரியர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹேமந்த் குமார் கூறுகையில் ‘முதல் ஆட்டம் எங்களுக்கு நன்றாக அமைந்தது. அந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்தை தொடர முயற்சிப்போம்’ என்றார்.

    இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கோபிநாத் (கேப்டன்), அலெக்சாண்டர், கார்த்திக், சசிதேவ், எம்.அஸ்வின், ஹரிஷ்குமார், கங்கா ஸ்ரீதர் ராஜூ, சன்னி குமார் சிங், சம்ருத் பாட், அருண்குமார், விஷால், ராகுல், சித்தார்த், அருண், ஆரிப், சிவக்குமார், மானவ் பாரக், சாய் சுதர்சன்.

    திருச்சி வாரியர்ஸ்: பாபா இந்திரஜித் (கேப்டன்), பரத் சங்கர், கே.விக்னேஷ், சஞ்சய், சோனு யாதவ், எம்.விஜய், கணபதி, எஸ்.சுரேஷ்குமார், வசந்த் சரவணன், அரவிந்த், லட்சுமி நாராயணன், எல்.விக்னேஷ், சந்திரசேகர், மணிபாரதி, அஸ்வின் கிறிஸ்ட், சரவணகுமார், கோவிந்தராஜன், திலக், வி.ஆகாஷ்.

    இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #NammaOoruNammaGethu #PattaiyaKelappu #CSG #TNPL2018
    8 அணிகள் இடையிலான டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. நெல்லையில் நடக்கும் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் -திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL2018 #NammaOoruNammaGethu
    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ‘டி.என்.பி.எல்.’ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நகரத்தை சேர்ந்த வீரர்கள் மட்டுமின்றி கிராமப்புறத்தில் உள்ள திறமையான வீரர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு நல்லதொரு அடித்தளம் அமைத்து கொடுக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன் அறிமுக போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், 2-வது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

    இந்த நிலையில் 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. ஆகஸ்டு 12-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திண்டுக்கல் அடுத்துள்ள நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது.

    கடந்த சீசனுடன் ஒப்பிடும் போது, காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் மாறி இருக்கிறார்கள். இதே போல் திருவள்ளூர் வீரன்ஸ் அணி, காஞ்சி வீரன்ஸ் என்று பெயரை மாற்றி இருக்கிறது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கிறது. நெல்லை மற்றும் திண்டுக்கல்லில் தலா 14 ஆட்டங்களும், சென்னையில் 4 ஆட்டங்களும் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 லீக் ஆட்டங்களும் (பிற்பகல் 3.15, இரவு 7.15 மணி), மற்ற நாட்களில் ஒரு லீக் ஆட்டமும் (இரவு 7.15 மணி) நடைபெறும். முதல் தகுதி சுற்று ஆட்டம் நெல்லையிலும், வெளியேற்றுதல் சுற்று மற்றும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் திண்டுக்கல்லிலும், இறுதிப்போட்டி சென்னையிலும் நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு பெரும்பாலான வீரர்கள் அணி மாறி இருக்கிறார்கள். அதனால் எந்த அணி வலுவானது என்பதை இப்போதே கணிக்க முடியாது. ஒவ்வொரு அணியிலும் முதல்முறையாக வெளிமாநில வீரர்கள் 2 பேர் விளையாட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்து இருந்தது. ஆனால் இதற்கு இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியினர் ஆட்சேபனை தெரிவித்து இருந்தனர். இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

    இங்கிலாந்து தொடரில் இடம் பெற்று இருந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக தாயகம் திரும்பிவிட்டார். தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் அவர் முதல் சில ஆட்டங்களில் ஆடுவது சந்தேகம் தான். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு வரை டி.என்.பி.எல். தொடரில் நீடிப்பார்.

    காரைக்குடி காளை அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இப்போது இந்திய அணியுடன் இங்கிலாந்தில் இருக்கிறார். இதனால் அவரும் தொடக்க கட்ட ஆட்டங்களில் விளையாட முடியாது. டெஸ்ட் அணியிலும் சேர்க்கப்பட்டால் அவர் டி.என்.பி.எல். போட்டியை முழுமையாக தவற விடுவார்.

    டி.என்.பி.எல். போட்டியின் தொடக்க விழா நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று மாலை 6.10 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. சூப்பர் சிங்கர் குழுவினரின் இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் கேப்டன்களும் உறுதிமொழி எடுப்பதுடன், பேட்டில் கையெழுத்திடுகின்றனர்.

    தொடக்க விழா முடிந்ததும் இரவு 7.15 மணிக்கு தொடங்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    திண்டுக்கல் டிராகன்ஸ்: ஆர்.அஸ்வின் (கேப்டன்), என்.ஜெகதீசன், ஆர்.விவேக், சதுர்வேத், ஹரி நிஷாந்த், அனிருத் சீதாராம், முகமது, ஆர்.ரோகித், ஆதித்யா அருண், அபினவ், சிலம்பரசன், திரிலோக் நாத், யாழ் அருண்மொழி, சுஜேந்திரன், கவுசிக், ராமகிருஷ்ணன், அரவிந்த், நிவேதன் ராதாகிருஷ்ணன், வருண் தோத்தாரி.

    திருச்சி வாரியர்ஸ்: பாபா இந்த்ராஜித் (கேப்டன்), பரத் சங்கர், கே.விக்னேஷ், சஞ்சய், சோனு யாதவ், எம்.விஜய் கணபதி சந்திரசேகர், எஸ்.சுரேஷ்குமார், வசந்த் சரவணன், அரவிந்த், லட்சுமி நாராயணன், எல்.விக்னேஷ், சந்திரசேகர், மணிபாரதி, அஸ்வின் கிறிஸ்ட், சரவணகுமார், கோவிந்தராஜன், திலக், வி.ஆகாஷ்.

    தொடக்க ஆட்டத்தில் விஜயின் அதிரடி பேட்டிங் மற்றும் அஸ்வினின் சுழல் தாக்குதலுக்கு இடையிலான மோதல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. #TNPL2018 #NammaOoruNammaGethu
    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க முதல்முறையாக வெளிமாநில வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    சென்னை:

    3-வது தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 11-ந்தேதி முதல் ஆகஸ்டு 12-ந்தேதி வரை சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய மூன்று நகரங்களில் நடைபெறுகிறது.

    8 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடரில் தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சும், திருச்சி வாரியர்சும் நெல்லையில் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்சை வருகிற 14-ந்தேதி சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது.

    இதையொட்டி ஏற்கனவே 8 அணிகளுக்கும் வீரர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டனர். இந்த சீசனில் முதல்முறையாக வெளிமாநில வீரர்களும் இடம் பெறுகிறார்கள். ஒரு அணியில் இரண்டு வெளிமாநில வீரர்கள் இடம்பிடித்து விளையாட முடியும். அந்த வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி இருக்கக்கூடாது. 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எந்த அணியிலும் இடம் பெற்று இருக்கக்கூடாது. மேலும் தங்கள் சொந்த மாநில கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்த போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத் உள்பட 13 மாநிலங்களில் இருந்து 112 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர்.

    இந்த நிலையில் விதிமுறைக்குட்பட்டு ஒவ்வொரு அணிக்கும் தலா 2 வெளிமாநில வீரர்கள் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



    இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு பரோடாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் கேதர் தேவ்தார், சவுராஷ்டிராவைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஷவ்ரியா சனந்தியா ஆகியோர் ஒதுக்கப்பட்டனர்.

    இதே போல் முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு ஷெல்டன் ஜாக்சன் (சவுராஷ்டிரா விக்கெட் கீப்பர்), சல்மான் நிசார் (கேரளா பேட்ஸ்மேன்), கோவை கிங்ஸ் அணிக்கு தர்மேந்திரா ஜடேஜா (சவுராஷ்டிரா ஆல்-ரவுண்டர்), ஷோரப் தலிவால் (மத்திய பிரதேச ஆல்-ரவுண்டர்), மதுரை பாந்தர்ஸ் அணிக்கு அமித் வர்மா (கர்நாடக ஆல்-ரவுண்டர்), ராய்பி வின்சென்ட் கோமெஸ் (கேரளா ஆல்-ரவுண்டர்), திருச்சி வாரியர்சுக்கு ஹிமாத் சிங் (டெல்லி பேட்ஸ்மேன்), லுக்மன் மெரிவாலா (பரோடா பவுலர்), காஞ்சி வீரன்ஸ் அணிக்கு ஸ்வப்னில் சிங் (பரோடா ஆல்-ரவுண்டர்), சந்தீப் வாரியர் (கேரளா பவுலர்), திண்டுக்கல் டிராகன்சுக்கு அர்பித் வசவதா (சவுராஷ்டிரா ஆல்-ரவுண்டர்), ஹனுமா விஹாரி (ஆந்திரா ஆல்-ரவுண்டர்), காரைக்குடி காளை அணிக்கு அதித் ஷேத் (பரோடா பவுலர்), உன்முக் சந்த் (டெல்லி ஆல்-ரவுண்டர்) ஆகியோர் ஒதுக்கப்பட்டனர்.

    பின்னர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணைச்செயலாளர் ஆர்.ஐ.பழனி கூறுகையில், ‘பிறமாநில வீரர்கள் இடம்பெறுவதன் மூலம் டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் தரமும், போட்டிக்குரிய சவாலும் அதிகரிக்கும். நமது மாநில வீரர்களின் திறமை மேலும் பட்டை தீட்டப்படும். ஆடும் லெவன் அணியில் இரண்டு வெளிமாநில வீரர்களையும் சேர்த்துக் கொள்ள அணி உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்றார். #TNPL2018 #NammaOoruNammaGethu
    ×