search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் நிறுவனம்"

    கொளத்தூர்-விருகம்பாக்கம் பகுதிகளில் தரமற்ற குடிநீர் கேன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் 19 தண்ணீர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
    போரூர்:

    சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீர் கேன்களை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனை பயன்படுத்தி தண்ணீர் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் குடிநீர் கேன்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட காலாவதியான குடிநீர் கேன்களை கடந்த சில நாட்களாக உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 1500 க்கும் மேற்பட்ட தரமற்ற குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சதாசிவம், ராமராஜ், ஜெபராஜ் ஆகியோர் தலைமையில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலை மற்றும் கொளத்தூர் ரெட்டேரி சிக்னல் ஆகிய 2 இடங்களில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 31 வாகனங்களில் வந்த 2868 குடிநீர் கேன்களை ஆய்வு செய்தனர்.

    இதில் உணவு பாதுகாப்பு துறையிடம் உரிய அனுமதி பெறாத நிறுவனங்கள் பெயரில் குடிநீர் கேன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் லேபிள் ஒட்டாமல் சுத்தமற்ற கேன்கள் மூலம் குடிநீர் அடைத்து விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது. உடனடியாக தரமற்ற 284 குடிநீர் கேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் கூறியதாவது :-

    பொதுமக்கள் குடிநீர் கேன்களில் தயாரிப்பு தேதி உள்ளதா என்பதை சரி பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.

    உணவு பாதுகாப்பு துறை விதிமுறைகளை மீறி காலாவதியான குடிநீரை தயாரிப்பு தேதி குறிப்பிடாமல் கேன்களில் அடைத்து விற்பனை செய்து வரும் தண்ணீர் நிறுவனங்களை அரசு தீவிரமாக கண்கானித்து வருகிறது.

    விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இன்று மட்டும் 19 தண்ணீர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×