search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபால் ஊழியர்கள்"

    புதிய மென்பொருள் சேவையை சரிசெய்யக்கோரி தபால் ஊழியர்கள், திருப்பூர் தலைமை தபால் நிலைய அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.
    திருப்பூர்:

    இந்திய தபால்துறை அனைத்து தபால் நிலையங்களையும் கணினிமயமாக்கி ஒருங்கிணைந்த தபால் சேவைக்கு புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தியது. அந்த மென்பொருள் சரியாக வேலை செய்யாததால் தபால் ஊழியர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் பணம் கட்டமுடியாமலும், தங்கள் கணக்கில் உள்ள இருப்பை தெரிந்து கொள்ள முடியாமலும் அவதிப்பட்டனர்.

    இதே போல அனைத்து சேவைகளிலும் தொய்வு ஏற்பட்டதால் பல மணி நேரம் காத்திருந்தும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதனால் தபால் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுவந்தது. இது தொடர்பாக தினமும் 10-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தபால் அதிகாரியிடம் புகார் தெரிவித்து வந்தனர்.

    மேலும் ஊழியர்கள் தினசரி கணக்கு முடிப்பதில் அதிக குளறுபடிகள் ஏற்பட்டு வந்ததால் அவர்கள் இரவு 10 மணியானாலும் வீடு திரும்ப முடியாத நிலை உருவாகி உள்ளது.

    இதனால் புதிய மென்பொருள் சேவையை சரி செய்யக்கோரி ஊழியர்கள் தங்கள் நிலையை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். ஆனால் உயர் அதிகாரிகள் இந்த பிரச்சினையை தீர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உயர் அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்தும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் புதிய மென்பொருள் சேவையை சரி செய்யக்கோரியும், அகில இந்திய தபால் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் கடந்த 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    அந்த வகையில் திருப்பூர் தலைமை தபால்நிலைய வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், பழனிசாமி, கிராமிய தபால் ஊழியர் சங்க தலைவர் கிட்டுசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் உண்ணாவிரத போராட்டத்தில் திருப்பூர் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 
    ×