search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழகத்தில்பாதிப்பு இல்லை"

    பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. #BharathBandh #PetrolDieselPriceHike
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.



    தமிழகத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகளான தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

    த.வெள்ளையன் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இந்த முழு அடைப்புக்கு ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளன. தொ.மு.ச. பேரவை, சி.ஐ.டி.யு., எ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி. உள்பட 10 தொழிற்சங்கங்களும் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. எனினும் தமிழகத்தில் இந்த முழு அடைப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    தொழிற்சங்கங்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படவில்லை.  லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கமும் இந்த போராட்டத்தில் பங்கேற்பதால் சுமார் 4½ லட்சம் லாரிகள் ஓடவில்லை.

    பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்குகின்றன. அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு அலுவலகம் முன்பு  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னையைப் பொருத்தவரையில் அரசு பஸ்களை தடையின்றி இயங்கும் வகையில் 38 டெப்போக்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. பணிக்கு வந்துள்ள தொழிலாளர்களை பொறுத்து அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோயம்பேடு பஸ் நிலையம், பிராட்வே பஸ் நிலையம், ரெயில் நிலையங்கள், காய்கறி மார்க்கெட், வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. சென்னையில் மட்டும் சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பால் விற்பனை நிலையம், மருந்தகம், பெட்ரோல் பங்குகள் இந்த முழு வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விதிவிலக்கு பெற்றுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் மருந்தகம், பால் விற்பனை நிலையம், பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. #BharathBandh #PetrolDieselPriceHike
    ×