என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழ்நாடு சத்துணவு ஊழியர் போராட்டம்"
சென்னை:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.
சம்பள உயர்வு, குடும்ப ஓய்வதியம், பணிக்கொடை ஆகியவற்றை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.
சென்னையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர் கேசவன் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர். சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதில் பாதிப்பு ஏற்படாமல தடுக்க அரசு முன் ஏற்பாடுகளை செய்திருந்தது.
அங்கன்வாடி பணியாளர்கள், 100 நாள் திட்டத்தில் வேலை செய்பவர்கள், ஊராட்சி செயலர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சத்துணவு தயாரிக்கப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
வேலைநிறுத்தம் குறித்து மாநில தலைவர் சுந்தரம்மாள் கூறியதாவது:-
சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையினை நிறைவேற்றக்கோரி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. திண்டுக்கல், விருதுநகர், கோவை, மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் போராட்டம் தீவிரமாக இருக்கிறது. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு கடந்த வியாழக்கிழமை சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 113 பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சமையல் செய்து அங்கேயே உண்டு உறங்கி போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டத் தலைவர் சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைமணி, மாநிலத் தலைவர் சுந்தரம் மாள், மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், மாநிலச் செயலாளர் ஆண்டாள், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இளங் கோவன், மாவட்டச் செயலாளர் காந்திமதிநாதன், உள்ளிட்ட பங்கேற்றனர்.
அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் அந்தந்த தலைமை ஆசிரியர்களைக் கொண்டு தற்காலிக ஊழியர்களை நியமித்து சத்துணவு செய்யும் பணிகள் நடைபெற்றது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 1070 அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலான்கேட் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 4 நாட்கள் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டனர்.
இதில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 3 ஆயிரம் சத்துணவு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பள்ளிகளில் சத்துணவு சமைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சமையல் உதவியாளர்கள், குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள், மகளிர் குழுக்கள் மூலம் சத்துணவு சமைக்கப்பட்டது. போராட்டத்தால் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் பாதிப்பு ஏற்பட வில்லை என சத்துணவு திட்ட அதிகாரிகள் கூறினர்.
திருவண்ணா மலை மாவட்டத்திலும் சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் பாதிப்பு இல்லாதவாறு அதிகாரிகள் மாற்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அவர்கள் சமையல் செய்து சாப்பிட்டு, அங்கேயே படுத்து உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சத்துணவு ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து தலைமை தாங்கினார்.
சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தால் பள்ளிகளில் மதிய சாப்பாடு பாதிக்கப்படுமா? என மாவட்ட கல்வி அதிகாரி அய்யண்ணனிடம் கேட்ட போது, பள்ளிகளில் மாற்று ஏற்பாடு செய்து வழக்கம் போல சத்துணவு தயாரிக்க தலைமைஆசிரியர்களிடம் கூறி இருக்கிறோம். எனவே மாணவ, மாணவிகளுக்கு சத்துணவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் பழைய கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் கடந்த 4 நாட்களாக சாமி யானா அமைத்து சத்துணவு ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருச்சி மாவட்டத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் 1,568 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சத்துணவு மைய ஊழியர், உதவியாளர், சமையலர் என ஒரு மையத்திற்கு 3 ஊழியர்கள் சமையல் பணியில் ஈடுபட்டு மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கி வருகிறார்கள்.
கடந்த 4 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பெண் சத்துணவு ஊழியர்கள் சுமார் 300 பேர் வரை ஈடுபட்டு வந்தாலும் சத்துணவு வழங்கும் பணி பாதிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும் சத்துணவு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 5-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் அவர்கள் பகுதி வாரியாக போராட்டத்தில் பங்கேற்று வருவதால் மாணவர்களுக்கு சத்துணவு சமைக்கும் பணியில் பாதிப்பு எதுவும் இல்லை. சத்துணவு உதவியாளர்கள் மூலம் சமையல் செய்து தரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தில் 2 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள சத்துணவு ஊழியர்கள், உதவியாளர்கள், அமைப்பாளர்களை கொண்டு அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் சத்துணவு சமைத்து வழங்கப்படுவதால் மதிய உணவு வழங்குவதில் பாதிப்பு எதுவும் இல்லை.
சேலம் மாவட்டத்தில் உள்ள சத்துணைவு மைய ஊழியர்களும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என கருதி அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் சேலம் மாவட்ட சத்துணவு ஊழியர்கள் நாளை முதல் பணியை புறக்கணித்து மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களும் இன்று வழக்கம் போல செயல்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று ஈரோடு தாலுகா அலுவலகம் முன் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
சத்துணவு ஊழியர்களின் மறியலால் இன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவு கொடுப்பது பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மகளிர் சுய உதவிக்குழு மூலம் சத்துணவு சமைத்து வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுடிருந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அத்தனை பள்ளிகளிலும் இன்று மகளிர் சுய உதவி குழுவினர் சத்துணவு சமைத்து வழங்கினார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட வில்லை.
மாவட்டத்தில் உள்ள 17 ஒன்றியங்களில் 1000-க்கும் அதிகமான சத்துணவு அமைப்பாளர்களும், சமையலர், உதவியாளர்களும் உள்ளனர். இவர்கள் யாரும் பணிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலான சத்துணவு மையங்களில் உணவு வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் 1126 சத் துணவு மையங்கள் உள்ளன. போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கவில்லை. இதனால் சத்துணவு வழங்குவதில் பெருமளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
மதுரை மாவட்டத்தில் 2 ஆயிரம் சத்துணவு கூடங்கள் உள்ளன. ஊழியர்கள் போராட்டம் காரணமாக சத்துணவு வழங்குவதில் பாதிப்பு ஏற்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி ஊழியர்கள் ஒத்துழைப்புடன் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள 1200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் இன்று பணிக்கு செல்லவில்லை.
மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், விளாத்திகுளம், கயத்தாறு உள்ளிட்ட 5 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். #Nutritionstaff #Nutritionstaffstruggle
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்