search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தருமபுரி கொள்ளை"

    தருமபுரி அருகே அடுத்தடுத்து 2 கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த சேசம்பட்டியில் பழனி நகரில் பிரசித்தி பெற்ற சித்திபுத்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விழா முடிந்ததும் கோவிலின் உண்டியல் திறக்கவில்லை. விழாக்காலங்களில் மட்டுமே உண்டியலை கருவறையில் இருந்து வெளியே வைத்து விடுவார்கள். மற்ற நாட்களில் உண்டியலை கோவிலின் கருவறைக்குள் வைத்து பூட்டி செல்வார்கள்.

    இந்த நிலையில் நேற்று கோவிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்று இரவு நடைசாத்தப்பட்டது. நள்ளிரவில் மர்மநபர்கள் கோவிலின் உள்ளே புகுந்து கருவறையின் பூட்டை உடைக்கப்பட்டு அங்கிருந்த உண்டியலை பூட்டை உடைத்து பணத்தை எடுத்து சென்றுள்ளனர்.

    இன்று காலை கோவில் பூசாரி வழக்கமாக கோவிலை திறக்க வந்தபோது கருவறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போனது தெரியவந்தது. மர்ம நபர்கள் உண்டியலை உடைத்துவிட்டு பணத்தை கொள்ளையடித்து செல்லும்போது அதில் இருந்து 10 ரூபாயை விநாயகர் முன்பு உள்ள தட்டில் வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த சிவாடி கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக ஸ்ரீபெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் திருவிழா நடைபெற்றது. விழா முடிந்தும் இன்னும் உண்டியலை கோவில் நிர்வாகிகள் திறக்கவில்லை.

    மேலும் கோவிலின் முன்புறம் திருப்பணிகள் நடைபெறுவதால் அவ்வப்போது கோவில் திருப்பணிகளுக்கு தேவையான பணத்தை கோவில் உண்டியலில் இருந்து எடுத்து கொள்வார்கள். நேற்று இரவு வழக்கம்போல் கோவில் நடைசாத்தபட்டது.

    இன்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோவிலின் உள்ளே இருந்த உண்டியலை காணவில்லை. இந்த சம்பவம் குறித்து கோவில் பூசாரி ஊர் பொதுமக்களுக்கும், கோவில் நிர்வாகித்தினரிடம் தகவல் தெரிவித்தார்.

    இதுகுறித்து ஊர்பொது மக்கள் தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிலின் 500 அடி தூரத்தில் உண்டியல் கிடந்தது.

    கோவிலை நேற்று இரவு மூடியிருப்பதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு நள்ளிரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளனர். உள்ளே புகுந்து அவர்கள் உண்டியல் பூட்டை உடைக்க முயன்று உள்ளனர். ஆனால் அவர்களால் பூட்டை உடைக்க முடியாததால் உண்டியலை அப்படியே சிறிது துரம் தூக்கி சென்று அதில் இருந்து பணத்தை கொள்யைடித்து விட்டு உண்டியலை அங்கேயே வீசி சென்றுள்ளனர்.

    அடுத்தடுத்து தருமபுரி சுற்று வட்டாரத்தில் மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×