search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைவர்கள் தீர்மானம்"

    டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எல்லா வகையிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #Allpartyresolution #PulwamaAttack
    புதுடெல்லி:

    புல்வாமா தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு இன்று கூட்டியது. இதில் கலந்து கொள்ளுமாறு நாடு முழுவதும் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. நிதி மந்திரி அருண்ஜெட்லி  மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் புல்வாமா தாக்குதல் தொடர்பான விவரங்களை ராஜ்நாத் சிங் எடுத்துக் கூறினார். எந்த வகையில் பதிலடி கொடுக்கலாம்? என்பது குறித்து அனைத்து கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.

    பின்னர், இன்றைய கூட்டத்தில் எல்லா வகையிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
     
    ‘இந்திய எல்லையின் மறுபுறத்தில் உள்ள சக்திகளால் பயங்கரவாதம் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. பெரும் சவாலான இந்த பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியா நிலையான எதிர்நிலைப்பாட்டை கையாண்டு வருகிறது.



    இந்த சவால்களை எதிர்கொண்டு போராடி வெல்ல ஒட்டுமொத்த நாடும் ஒரே குரலில் சபதமேற்கிறோம். அனைத்து வகைகளிலான பயங்கரவாதம் மற்றும் எல்லையின் மறுபகுதியில் இருந்து பயங்கரவாதத்துக்கு அளிக்கப்படும் ஆதரவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் நமது பாதுகாப்பு படையினருக்கு நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, உறுதுணையாக நிற்போம்’ என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #allpartyresolution #PulwamaAttack
    ×