search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருத்த பணி"

    கரூரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை சிறப்பு அதிகாரி விஜயகுமார் ஆய்வு செய்தார்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்திற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கடம்பர்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மணத்தட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மாயனூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் கரூர் மாவட்டத்திற்கு என நியமிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குனருமான எம்.விஜயகுமார் நேற்று வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் விவரங்கள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் விளக்கி கூறினார்.

    அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்த பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் விஜயகுமார் தலைமையில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி, லியாகத், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் வருகிற 31-ந் தேதி வரை வைக்கப்படுகிறது. இன்றுடன் (நேற்று) சேர்த்து 3 ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதலுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று இருக்கிறது. தொடர்ந்து வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது.

    இதுவரை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் மொத்தம் 14,033 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெயர் சேர்த்தல் தொடர்பாக 10,453 மனுக்களும், பெயர் நீக்கல் தொடர்பாக 900 மனுக்களும், திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக 1,615 மனுக்களும், தொகுதிக்குள் முகவரி மாற்றம் தொடர்பாக 1,065 மனுக்களும் பெறப்பட்டுள்ளன. தேர்தல் குறித்த புகார்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 04324-257502 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ×