search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயணைப்பு வசதி"

    தமிழகத்தில் 2,023 மருத்துவமனைகளில் சாய்தள பாதை வசதிகளும், 1,400 மருத்துவமனைகளில் தீயணைப்பு வசதிகளும் இல்லை என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
    சென்னை:

    அனைத்து மருத்துவமனைகளிலும் ஊனமுற்ற நோயாளிகள் சிகிச்சை பெற வசதியாக சாய்தள பாதை மற்றும் தீயணைப்பு சாதனங்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரி ஜவஹர் சண்முகம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு இதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-

    அரசு மருத்துவமனைகளில் தீயணைப்பு வசதிகளை செய்வதற்காக தமிழக அரசு ரூ.89 கோடியே 58 லட்சம் ஒதுக்கியுள்ளது. இதில் 34 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு தீயணைப்பு வசதிகளை செய்வதற்காக ரூ.37 கோடியே 3 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனைகளில் இந்த தீயணைப்பு வசதிகளை செய்ய ரூ.4 கோடியே 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு ரூ.2.9 கோடியும், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1.57 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவமனைகளில் சாய்தள பாதை வசதி அமைப்பதற்காக ரூ.16 கோடியே 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 19 அரசு மருத்துவமனைகளில் ரூ.27 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் ஜெனரேட்டர்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஐகோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்ட குழு தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் ஆய்வு செய்தது. இதில், 1,877 மருத்துவமனைகள் தீயணைப்பு உரிமம் பெற்றுள்ளன. 538 மருத்துவமனைகள் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளன. 1,400 மருத்துவமனைகளில் தீயணைப்பு வசதிகள் இல்லை என்று தெரியவந்துள்ளது.

    இதுதவிர 1,059 மருத்துவமனைகளில் சாய்தள பாதை வசதி உள்ளன. 2,023 மருத்துவமனைகளில் இந்த வசதி குறித்த திட்டமே இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் 30-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். 
    ×