search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி சூடு"

    சம்பந்தப்பட்ட துப்பாக்கி உரிமம் பெற்றது என்றும் அது அபிஷேக்கின் தந்தையுடையது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    ரேவா:

    மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அம்பிகா பாண்டே. இவரது மகன் அபிஷேக் பாண்டேவும் இந்திய ராணுவத்தில் படை வீரராக பணிபுரிந்து வந்தார். ஆனால், அபிஷேக் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ராணுவத்தைவிட்டு தப்பி உள்ளார்.

    இதைக் கண்டித்த அபிஷேக்கின் பெற்றோர், ராணுவத்தில் மீண்டும் இணையுமாறு அவ்வப்போது வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், அபிஷேக் இது எனது தனிப்பட்ட விருப்பம் என்றும், என்னை வற்புறுத்த வேண்டாம் என்றும் கடுங்கோபத்துடன் கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில், ரேவா மாவட்ட தலைநகரில் இருந்து 55 கி.மீ தொலைவில் உள்ள லார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிடாரியா என்கிற கிராமத்தில் நேற்று இரவு 7 மணியவில் அபிஷேக் தனது பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், காலில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தப்பியோடிய அபிஷேக்கை சுற்றிவளைத்த போலீசார் கைது செய்தனர். பின் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.  சம்பந்தப்பட்ட துப்பாக்கி உரிமம் பெற்றது என்றும் அது அபிஷேக்கின் தந்தையுடையது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    லண்டனில் உள்ள செவன் கிங்ஸ் மசூதியில், ரமலான் தொழுகையின் போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. #London #RamadanPrayers #LondonMosqueFire
    லண்டன்:

    லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள இல்போர்டில் செவன் கிங்ஸ் மசூதி உள்ளது. இங்கு நேற்று இரவு முஸ்லீம்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். தொழுகை தொடங்கிய சிறிது நேரத்தில், முகமூடி அணிந்தபடி கைத்துப்பாக்கியுடன் வந்த ஒருவன், துப்பாக்கியால் சுட்டபடி உள்ளே மசூதிக்குள் நுழைய முயன்றுள்ளான்.

    துப்பாக்கி சத்தம் கேட்டு தொழுகையில் இருந்தவர்களில் சிலர் வெளியே ஓடிவந்து தைரியமாக அந்த நபரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவனைப் பிடிக்க முயற்சிக்கவே அவன் தப்பியோடியுள்ளான். தகவல் அறிந்து வந்த போலீசார், மசூதியை சுற்றிலும் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தப்பி ஓடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

    மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நள்ளிரவு வரை பதற்றம் நீடித்தது. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பு இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். #London #RamadanPrayers #LondonMosqueFire
    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.#CaliforniaShooting
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள போவே நகரில் யூதமத கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்த தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்தார்.  மேலும் காயமடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இளம்பெண் ஒருவரும் மற்றும் 2 ஆண்களும் அடங்குவர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர் ஜான் எர்னஸ்ட் (19) என தெரிய வந்துள்ளது.

    கடந்த 6 மாதத்துக்கு முன் பிட்ஸ்பர்க் நகரில் இதேபோல் யூதமத கோவிலில் நடந்த தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். #CaliforniaShooting
    டிக்-டாக் செயலிக்கான வீடியோ பதிவின்போது துப்பாக்கி வெடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Delhi #FilmingVideo
    புதுடெல்லி:

    டெல்லியின் ஜப்ராபாத் பகுதியை சேர்ந்த சல்மான் (வயது 19) என்ற கல்லூரி மாணவர், தனது நண்பர்களான அமிர், சொகைல் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு காரில் இந்தியா கேட் பகுதிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பும் வழியில் அவர்கள் துப்பாக்கியை உடலில் குறிவைப்பது போன்று டிக்-டாக் வீடியோ ஒன்றை பதிவு செய்ய முடிவு செய்தனர்.

    இதற்காக காரின் டிரைவர் இருக்கையில் இருந்த சல்மானின் கன்னத்தில், நாட்டுத்துப்பாக்கி ஒன்றின் முனையை வைத்தவாறு சொகைல் போஸ் கொடுத்தார். அப்போது திடீரென அந்த துப்பாக்கி வெடித்தது. இதில் குண்டுபாய்ந்ததால் படுகாயமடைந்த சல்மான், காரிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    இதனால் பதறிப்போன நண்பர்கள், உடனே அவரை தங்கள் உறவினர் ஒருவருடன் சேர்ந்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சல்மான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சல்மானின் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், சல்மானின் 2 நண்பர்கள் மற்றும் அவர்களின் உறவினரை போலீசார் கைது செய்தனர். டிக்-டாக் செயலிக்கான வீடியோ பதிவின்போது துப்பாக்கி வெடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    பாராளுமன்ற தேர்தல் பணிக்காக வந்த தேர்தல் பார்வையாளர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #LokSabhaElections2019 #Electionofficer

    அரியலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    மேலும் அதிகாரிகள் வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். வாக்குசாவடி மையங்களுக்கு மின்னணு எந்திரங்களை அனுப்பி வைப்பது மற்றும் பணப்பட்டு வாடாவை தடுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக வட மாநிலங்களை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர் தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பார்வையாளர்கள், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தி, உரிய அனுமதியின்றி எடுத்து செல்லும் பணம், நகை மற்றும் பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அரியலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக ஹரியானாவை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஹேமந்த் ஹல்க் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து தேர்தல் பணிகளை கவனித்து வந்தார்.

    இன்று காலை சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவர், துப்பாக்கி மூலம் வானத்தை நோக்கி 9 முறை சுட்டதாக பரபரப்பு தகவல் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் எஸ்.பி. (பொறுப்பு)திஷாமித்தல் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது ஹேமந்த் ஹல்க் இன்று அதிகாலை சுற்றுலா மாளிகை அறையில் இருந்து வெளியே வந்தததும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை கேட்டுள்ளார். உயர் அதிகாரி என்பதால் போலீஸ்காரரும் தன்னிடமிருந்த துப்பாக்கியை கொடுத்துள்ளார்.

    அதனை வாங்கிய ஹேமந்த் ஹல்க் திடீரென வானத்தை நோக்கி 9 முறை துப்பாக்கியால் சுட்டார். இதனால் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த மற்ற அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    அதன்பிறகு ஹேமந்த் ஹல்க் துப்பாக்கியுடன் தனது அறைக்கு சென்று அமர்ந்து கொண்டார். அவர் எதற்காக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    வேலைப்பளு காரணமாக அவர் இந்த செயலில் ஈடுபட்டாரா? அல்லது மன ரீதியாக ஏற்பட்ட பிரச்சினையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது பணப்பட்டுவாடா புகார் எழுந்த தன் காரணமாக அதனை தடுப்பதற்காக எச்சரிக்கை விடுக்கும் வகையில் சுட்டாரா? என்றும் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் தேர்தல் பார்வையாளர் ஹேமந்த் ஹல்க் குடிபோதையில் இருந்ததால் அவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் மீது அரியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

    ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், அரியலூர் தேர்தல் பார்வையாளர் குடிபோதையில் துப்பாக்கியால் சுட்டது அரசியல் கட்சியினர், வாக்காளர்கள், அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #LokSabhaElections2019 #Electionofficer

    மராட்டிய மாநிலத்தில் மனைவியை துப்பாக்கியால் சுட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்குமார் பக்வத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மும்பை:

    மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மங்கல்வேதா டவுன் மார்வாடே பகுதியில் வசித்துவந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்குமார் பக்வத்(வயது 57). இவரது மனைவி சேனாலி. இவரது வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்ததன்பேரில் போலீசார் சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது விஜய்குமார் பக்வத் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். அவரது மனைவி சேனாலி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார்.

    போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது விஜய்குமார் பக்வத் ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்தது. சேனாலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முதற்கட்ட விசாரணையில் விஜய்குமார் பக்வத் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. வீட்டில் அவர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 
    திருப்பதி அருகே செம்மரக் கடத்தல் கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஜவ்வாதுமலை பாலாம்பட்டை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். #RedSandalwood #Tirupati

    திருப்பதி:

    திருப்பதி அருகேயுள்ள சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள பாக்ராப்பேட்டை, எர்ரவாரி பாளையம் என்ற இடத்தில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று அதிகாலை 5 மணிக்கு ரோந்து சென்றனர்.

    அப்போது அடர்ந்த வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கும்பல் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். அவர்களை சரணடையுமாறு போலீசார் கூறினர். ஆனால் செம்மர கடத்தல் கும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் தற்பாதுகாப்புக்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் பயந்துபோன செம்மரக் கடத்தல் கும்பல் வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற போலீசார் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இதையடுத்து பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஜவ்வாதுமலை பாலாம்பட்டை சேர்ந்த செல்வராஜ் ( வயது 26) என தெரியவந்தது. செல்வராஜை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடத்தல் கும்பல் விட்டு சென்ற 13 செம்மரங்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். #RedSandalwood #Tirupati

    நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் டிராம் வண்டியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்த நிலையில் 3 பேர் பலியாகினர். #NetherlandShooting
    ஹாக்:

    நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் இன்று காலை வேலைக்கு செல்ல டிராம் வாகனத்தில் பலர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது, டிராம் வண்டிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். அதன்பின் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



    இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

    இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் 3 பேர் நிலைமை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்  உட்ரிச் நகர மேயர் ஜான் வான் ஜனேன் தெரிவித்துள்ளார்.  #NetherlandShooting
    நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 49 பேர் பலியாகினர். #MosqueShooting #NewZealandShooting
    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் இன்று ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த ஆசாமி, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர்.

    தாக்குதல் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆயுதப்படை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் அருகில் உள்ள மற்றொரு மசூதியிலும் ஒரு நபர் துப்பாக்கி சூடு நடத்தினான். 

    இரண்டு இடங்களிலும் நடந்த தாக்குதல்களில் 40 பேர் உயிரிழந்ததாக பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்ன் தெரிவித்தார். அதன்பின்னர் இரவு 9 மணி நிலவரப்படி (உள்ளூர் நேரப்படி) பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது. சுமார் 50 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    தாக்குதல் நடத்தியதை அந்த நபர்கள் பேஸ்புக்  தளத்தில் நேரலையாக ஒளிபரப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோவை சிலர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

    தாக்குதலைத் தொடர்ந்து நகரின் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தாக்குதல் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாக கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். #MosqueShooting #NewZealandShooting

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் கட்சி பிரமுகரான மொகமது இஸ்மாயில் வானி மீது பயங்கரவாதிகள் இன்று மாலை திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் வசித்து வருபவர் மொகமது இஸ்மாயில் வானி. தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவர்.

    இந்நிலையில், இன்று மாலை இஸ்மாயில் வானியை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீநகர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. #JammuKashmir
    கனடாவில் கடந்த 2017ம் ஆண்டு மசூதியில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #CanadaMosqueShooter
    கியூபெக் சிட்டி:

    கனடாவின் கியூபெக் சிட்டியில் உள்ள மசூதியில் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி மாலை தொழுகை நடைபெற்றபோது, ஒரு வாலிபர் துப்பாக்கியுடன் நுழைந்து, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில், தொழுகையில் ஈடுபட்டிருந்த 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

    துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் அலெக்சாண்டர் பிசோனெட் என்பது தெரியவந்தது.

    அவன் மீது கியூபெக் சிட்டி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில் அலெக்சாண்டர் பிசோனெட் (வயது 29) மீதான குற்றம் நிரூபணமானது. இதையடுத்து அவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன் 40 ஆண்டுகள் வரை பரோல் பெற முடியாது என்றும் உத்தரவிட்டார். #CanadaMosqueShooter

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. அதிகாரி சரவணன் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார். #Thoothukudifiring
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வரராவ் நாடு முழுவதும் சி.பி.ஐ. அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளார்.

    முக்கிய நகரங்களில் பணியாற்றி வந்த 20 உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னையில் சி.பி.ஐ. உயர் அதிகாரிகளில் ஒருவராக சரவணன் இருந்தார். இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் மும்பை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளார். மும்பையில் வங்கி முறைகேடுகள் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டு இருக்கிறார்.

    நிரவ்மோடி செய்துள்ள வங்கி மோசடியை விசாரிக்கும் பிரிவுக்கு தற்போது அவர் சென்றுள்ளார்.

    சரவணன் மும்பைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரத்தை தொடர்ந்து விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் உள்ள பணிகளை பார்த்துக்கொண்டே அவர் கூடுதலாக இந்த பணியையும் செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

    2ஜி ஊழல் வழக்கை விசாரித்து வந்த டெல்லி சி.பி.ஐ. அதிகாரி விவேக் பிரியதர்சி சண்டிகருக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றொரு சி.பி.ஐ. அதிகாரி கவுதமிடம் உள்ள பொறுப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே நாகேஸ்வர ராவ் சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து பிரபல வக்கீல் பிரசாந்த் பூ‌ஷன் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகினார்.

    இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி சிக்ரி தலைமையிலான பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. நாளை அந்த பெஞ்சில் நாகேஸ்வர ராவுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. #Thoothukudifiring
     
    ×