search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி முறைகேடு புகார்"

    நிதி முறைகேடு புகார் தொடர்பாக உள்துறை அனுமதி பெற்று கவர்னர் மீது விசாரணை நடத்தப்படும் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Narayanasamy #Governor
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமூக பங்களிப்பு நிதிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து தொழிற்சாலைகளிடம் வசூல் செய்யப்பட்டதாக நான் குற்றம்சாட்டியிருந்தேன். அதற்கு கவர்னர் நாங்கள் யாரிடம் இருந்தும் சமூக பங்களிப்பு நிதி வசூலிக்கவில்லை. யாரிடமிருந்தும் பணம் பெறவில்லை என்று கூறியுள்ளார்.

    கவர்னருக்கான பணிகள் என்ன என்று அரசியலமைப்பு சட்டத்திலும், யூனியன் பிரதேச சட்டத்திலும் கூறப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் அதிகாரம், பணிகள் என்ன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. புதுவை அரசு சார்பில் தொழிற்சாலைகளிடம் இருந்து சமூக பங்களிப்பு நிதி பெற ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு தலைவராக முதல்-அமைச்சர் உள்ளார். உறுப்பினர்களாக தலைமை செயலாளர், தொழிலாளர் துறை அதிகாரி, 4 அரசு செயலர்கள் இடம் பெற்றுள்ளனர். சமூக பங்களிப்பு நிதி வழங்க வேண்டும் என விரும்பினால் இந்த குழுவிடம்தான் வழங்க வேண்டும்.

    இந்த குழு நிதியை காசோலையாகவோ, டிராப்ட்டாகவோ, பணமாகவோ பெற்றுக்கொண்டு அதற்கான அத்தாட்சி ரசீதை வழங்கும். இந்த குழுவே அந்த நிதியின் கீழ் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும். திட்டம் முறையாக நிறைவேற்றப்படுகிறதா? என கண்காணிப்பும் செய்யும். இதுதான் சமூக பங்களிப்பு நிதி பெறுவதற்கும், செயல் படுத்துவதற்குமான நடைமுறைகளாகும்.

    ஆனால் கவர்னர் எனது கவனத்திற்கு வராமலேயே கடந்த 24.9.2018 அன்று தொழிற்சாலைகளிடம் இருந்து சமூக பங்களிப்பு நிதி பெற ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். கவர்னர் மாளிகை அதிகாரி ஆஷாகுப்தா, குறைதீர்ப்பு அதிகாரியான போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் ஆகியோர் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்கள் போன்மூலம் பல தொழிலதிபர்களை, தொழிற்சாலைகளை தொடர்புகொண்டு பணம் கேட்டுள்ளனர். இதன்மூலம் சில திட்டங்களை நேரடியாக செயல்படுத்தியுள்ளனர். இதற்கு கவர்னர் மாளிகையே ஒப்பந்ததாரர்களுடன் இணைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கவர்னர் தான் பணம் எதுவும் பெறவில்லை என உண்மைக்கு புறம்பான தகவலை கூறியுள்ளார்.

    அதேநேரத்தில் பாகூரில் ஒரு திட்டத்திற்கு ரூ. ஒரு கோடி வசூலாகும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் ரூ.80 லட்சம் மட்டுமே வசூலாகியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

    சமூக பங்களிப்பு நிதியை பெற கவர்னருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஒருவர் சமூக பங்களிப்புக்கு நிதி அளித்தால் அவர் வரி கட்டியுள்ளாரா? குற்ற பின்னணி உடையவரா? என்பதை ஆராய்ந்துதான் நிதி பெறுகிறோம். இன்னும் சிலர் அரசிடம் சலுகை பெற இத்தகைய நிதியை தருவார்கள். இதையும் ஆராய்ந்தே நிதி பெற வேண்டும்.

    யார் கொடுத்தாலும் பெற்றுக்கொள்வது நடைமுறைக்கு முரண்பாடானது.

    அரசு கொறடா தொகுதியில் உள்ள ஒரு பள்ளியிலிருந்து ரூ.7 லட்சம் நிதி கவர்னர் மாளிகை பெற்றுள்ளது. இதுபோல எங்கு, எவ்வளவு நிதி பெறப்பட்டது என கவர்னர் மாளிகை தெரிவிக்க வேண்டும். அவர்கள் இதை வெளிப்படையாக தெரிவிப்பார்கள் என நம்புகிறோம்.



    புதுவையின் நீர் ஆதாரத்தை பெருக்கியுள்ளதாக கவர்னர் கூறியுள்ளார். என் மீது முதல்-அமைச்சருக்கு பொறாமை என்றும் கூறியுள்ளார். அவர் மீது நான் பொறாமைப்பட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. இதுவரை ரூ.85 லட்சம் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளது. யாரிடம், எங்கு பெற்றார்கள் என தெரிவிக்க வேண்டும். இந்த பணிகளுக்கு எந்த அடிப்படையில் ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்? யாருக்கு டெண்டர் கொடுத்தீர்கள்? என தெரிவிக்க வேண்டும்.

    புதுவை அரசின் பொதுப்பணித்துறை ஒரே ஒரு பணியை செய்தததாக தெரிவித்துள்ளனர். மற்ற பணிகளுக்கும், பொதுப் பணித்துறைக்கும் தொடர்பில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு இலவசமாக உணவு வழங்க கவர்னர் மாளிகையில் இருந்து போன் செல்கிறது. இதுபோல 100 பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்க 3 ஓட்டல்களுக்கு கவர்னர் மாளிகை உத்தரவு சென்றுள்ளது. ஒரு ஓட்டல் 100 பேருக்கு சாப்பாடு கொடுத்து விட்டனர். மீதமுள்ள 2 ஓட்டல்களில் இருந்து பணம் பெற்றுள்ளனர்.

    இதுபோல கவர்னர் மாளிகை பண வசூல் செய்யும் மையமாக மாறியுள்ளது. கவர்னர் மீது தன்னிச்சையாக எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால் உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று கவர்னர் மீது விசாரணை நடத்தவுள்ளோம். இதற்காக உள்துறை அமைச்சகத்திற்கு நான் கடிதம் அனுப்ப உள்ளேன்.

    ஓய்வுபெற்ற அதிகாரி தேவநீதிதாசை தன் ஆலோசகராக நியமிக்க உள்துறைக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் உள்துறை அமைச்சகம் கன்சல்டன்சியாக நியமிக்க கூறியது. இதை மீறி சிறப்பு அதிகாரியாக தேவநீதிதாசை பணி நியமனம் செய்துள்ளார். இதற்கு மத்திய உள்துறை எந்த அனுமதயும் தரவில்லை.

    ஓய்வுபெற்ற அதிகாரி அரசு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்த முடியாது. அவர்களுக்கு உத்தரவிட முடியாது. ஆனால் தேவநீதிதாஸ் தொடர்ந்து இந்த பணிகளை செய்து வருகிறார். ஆரம்ப காலம் முதல் கவர்னர் மாளிகை விதிகளை மீறி செயல்படுகிறது என கூறி வருகிறோம். தொடர்ந்து விதிகளை மீறியே வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன் ஆகியோர் உடனிருந்தனர். #Narayanasamy #Governor
    ×