search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட் தேர்வு முடிவு"

    நீட் தேர்வில் 56.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் அகில இந்திய அளவில் பீகார் மாணவி கல்பனா குமாரி முதலிடம் பிடித்தார். தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா 12-ம் இடத்தை பிடித்தார். #NeetResult #NEETResult2018 #NEETexam
    சென்னை:

    மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. சார்பில் ‘நீட்’ தேர்வு கடந்த மே மாதம் 6-ந்தேதி நடந்தது. இதில் 12 லட்சத்து 69 ஆயிரத்து 922 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

    cbs-e-r-esults.nic.in,

    www.cbs-e-n-eet.nic.in,

    www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவு வெளியானது.

    ‘நீட்’ தேர்வில் 56.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் ஆண்கள் 3 லட்சத்து 12 ஆயிரத்து 399 பேரும், பெண்கள் 4 லட்சத்து 2 ஆயிரத்து 162 பேரும், திருநங்கை ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இவர்களில் பிற்படுத்தப்பட்டோர் 3 லட்சத்து 27 ஆயிரத்து 575 பேர். ஆதிதிராவிடர்கள் 87 ஆயிரத்து 311 பேர். பழங்குடியினர் 31 ஆயிரத்து 360 பேர். பொதுப்பிரிவினர் 2 லட்சத்து 68 ஆயிரத்து 316 பேர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். மொத்தத்தில் 12 லட்சத்து 69 ஆயிரத்து 922 பேர் எழுதியதில், 7 லட்சத்து 14 ஆயிரத்து 562 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    பொதுப்பிரிவினருக்கு 119 மதிப்பெண்களும், இதர பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் பிரிவினருக்கு 96 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்கள் ஆகும்.

    இந்தியாவில் நீட் தேர்வில் கல்பனா குமாரி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 720-க்கு 691 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு அடுத்தபடியாக 2-ம் இடத்தை ரோகன் புரோகித் என்ற மாணவர் பெற்றுள்ளார். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அவர் 690 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 3-ம் இடத்தை டெல்லியை சேர்ந்த ஹிமான்ஷு சர்மா என்ற மாணவர் பிடித்துள்ளார்.

    ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் கேரளா, தெலுங்கானா, பஞ்சாப், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 60 சதவீதத்துக்கு மேலானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ரேங்க் பட்டியலில் முதல் 50 இடத்துக்குள் மாணவர்களே அதிகம் பேர் இடம்பெற்று உள்ளனர். முதல் 50 இடங்களில் 8 இடங்களை டெல்லி கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக குஜராத் 7 இடங்களையும், ஆந்திரா 5 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் 518 பேர் நீட் தேர்வு எழுதினர். அவர்களில் 324 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தமிழகத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்தார்கள். அவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 602 பேர் எழுதினார்கள். இதில் 45 ஆயிரத்து 336 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 39.56 ஆகும்.

    புதுச்சேரியில் இருந்து 4 ஆயிரத்து 573 பேர் விண்ணப்பித்தனர். 4 ஆயிரத்து 462 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 1,768 பேர் தகுதி பெற்றனர். இது 39.62 சதவீதம் ஆகும்.

    சென்னை மாணவி கே.கீர்த்தனா தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 12-வது இடத்தை பெற்றுள்ளார். அவர் எடுத்த மதிப்பெண்கள் 676.

    மருத்துவ படிப்புக்கான இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போய்விடும். 85 சதவீத இடங்களுக்கு அந்தந்த மாநிலங்கள் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர கலந்தாய்வு நடத்தும். மேலும் விவரங்களுக்கு www.mcc.nic.in எனும் இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். #NeetResult #NEETResult2018 #NEETexam
    ×