search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் ரெயில்வே"

    பாகிஸ்தானில் கடுமையான நிதி பற்றாக்குறையால் தள்ளாட்டம் போடும் ரெயில்வே துறையை நிர்வகிப்பதற்காக சில நிலங்களை விற்க பிரதமர் இம்ரான் கான் தீர்மானித்துள்ளார். #PakistanRailways #PakistansellRailwaysland
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஆடம்பரமான பிரதமர் மாளிகையில் தங்காமல் தனது சொந்த வருமானத்தில் கட்டிய வீட்டில் வாழ்ந்துவரும் இம்ரான் கான், மந்திரிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பயன்படுத்தி வந்த சொகுசு கார்களை விற்று அந்த பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

    வெளிநாடுகளில் இருந்து உயர்ரக கார்கள், செல்போன் மற்றும் அழகு சாதனங்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

    முன்னாள் பிரதமர் அப்பாசியின் தவறான திட்டங்களாலும் வைத்துச் சென்ற கடன் சுமையாலும் அரசு நிர்வாகத்தை நடத்த பணம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக இம்ரான் கான்தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சுமார் 3700  கோடி ரூபாய் நிதி பற்றாக்குறையில் அந்நாட்டு ரெயில்வே துறை நிர்வாகம் சிக்கி தவிக்கிறது. புதிய ரெயில்கள் மற்றும் சம்பள செலவினங்களால் பல ஆண்டுகளாக இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    எனவே, பாகிஸ்தான் முழுவதும் தனியாரிடம் சிக்கியுள்ள ரெயில்வே நிலங்களை மீட்டு, அவற்றில் முக்கிய பகுதியில் உள்ள நிலங்களை விற்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாடின் ரெயில்வே மந்திரி ஷேக் ரஷீத் அஹமத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவசர சட்டம் இயற்றுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ள இம்ரான் கான், நாட்டிலுள்ள முக்கிய பெருநகரங்களில் ரெயில்வே துறைக்கு சொந்தமான, பயம்படுத்தப்படாத காலி நிலங்கள் தொடர்பான பட்டியலை இன்னும் 15 நாட்களில் தயாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக ஷேக் ரஷீத் அஹமத் குறிப்பிட்டுள்ளார்.

    ரெயில்வே நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் வேளையில் ரெயில் பாதைகளின் ஓரங்களில் வாழும் ஏழை, எளிய மக்களின் குடிசைகள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு இம்ரான் கான் அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். #PakistanRailways #PakistansellRailwaysland
    ×