search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்வையாளர்கள் அனுமதி ரத்து"

    குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். #RepublicDay #ChennaiAirport
    சென்னை:

    நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது.

    பள்ளி-கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை சீர் குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், எனவே நாடு முழுவதும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். அந்தந்த மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி அறிவுறுத்தலின்படி போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்த உத்தரவில், ‘தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சூப்பிரண்டுகள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

    எனவே குடியரசு தின விழாவையொட்டி மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    சென்னை சென்டிரல், எழும்பூர் உள்பட முக்கிய ரெயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

    பஸ்நிலையங்களிலும் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வழிபாட்டு தலங்கள், கடற்கரை, திரையரங்குகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

    சென்னை நகரில் போலீசார் இரவு ரோந்து மற்றும் வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

    தமிழகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியான முறையில் நடப்பதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நேற்று நள்ளிரவில் இருந்து வருகிற 31-ந் தேதி நள்ளிரவு வரை பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் பாதுகாப்பு கருதி விமான நிலையம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    விமான நிலையம் வரும் வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். விமான நிலையத்தில் சோதனை பலப்படுத்தப்பட்டு இருப்பதால் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையம் வந்து சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
    ×