search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.குரு மரணம்"

    வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணமடைந்ததையடுத்து அரியலூர் மாவட்டம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. 9 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    பா.ம.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்க தலை வரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ஜெ. குரு நுரையீரல் காற்றுப்பை திசு பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு குருவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் அவர் மரணம் அடைந்தார்.

    மரணம் அடைந்த ஜெ. குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள காடுவெட்டிக்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. ஜெ.குருவின் உடலுக்கு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மரணம் அடைந்த ஜெ.குரு 2001ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தொகுதியில் இருந்தும், 2011ம் ஆண்டு ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    காடுவெட்டி குரு மரணமடைந்ததையடுத்து அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன் சுருட்டி, அரியலூர், உடையார் பாளையம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. நேற்றிரவு பொன்னேரி, கல்லாத்தூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் 9 அரசு பஸ்கள் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று அரியலூர் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன்கள் இயங்கவில்லை. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் பிறந்தவர் குரு. இதனால் அவரது கிராமத்தின் பெயராலேயே காடுவெட்டிகுரு என அழைக்கப்பட்டார். அவருக்கு ஹேமலதா என்ற மனைவியும், விருதாம்பிகை என்ற மகளும், கனல் அரசு என்ற மகனும் உள்ளனர்.

    குருவின் உடலுக்கு இன்று காலை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். நாளை காலை வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    அரியலூர் மாவட்டம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டதாலும், அரசு பஸ்கள் இயங்காததாலும் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய பஜார்கள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    ×