search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார் வாலிபர் கைது"

    திருப்பூரில் வங்காள தேச வாலிபர்களுக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த பீகார் வாலிபரை கைது செய்த போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூரில் வங்காள தேசத்தை சேர்ந்த சிலர் போலி ஆதார் அட்டையுடன் தங்கி இருப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது திருப்பூர் செவந்தாம் பாளையம் சாமந்த தோட்டத்தில் தங்கி இருந்த அலமின் (24), அஸ்ரபுல் இஸ்லாம் (31), பர்கத் உசேன் உள்பட 8 வங்காள தேச வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களுக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்து உதவியதாக ராம்சிஷ் வர்மா, சவரி முத்து, ரவிசங்கர் சிங் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் ராம்சிஷ் வர்மாவிடம் இருந்து லேப் டாப், கருவிழி, கைரேகை பதிவு செய்யக்கூடிய கருவி, 9 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இவர்களுக்கு உடந்தையாக இருந்த பீகார் வாலிபர் மிதுன்ஷா (27) தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் உமா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் இன்ஸ்பெக்டர் சந்திர மோகன் தலைமையில் இயங்கி வந்தனர். அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது மிதுன்ஷா பீகார் மாநிலம் நவதா மாவட்டம் சத்துவா பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து தனிப்படையினர் பீகார் சென்று மிதுன்ஷாவை கைது செய்தனர். அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்

    அப்போது மிதுன்ஷா ஏற்கனவே கைது செய்யப்பட்ட ராம்சிஷ் வர்மாவுடன் சேர்ந்து பீகாரில் போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்தது தெரிய வந்தது.

    பின்னர் அவினாசியில் 3 மாதம் தங்கி போலி ஆதார் அட்டை தயாரித்துள்ளார். அப்போது தான் இவரிடம் வங்காள தேச வாலிபர்கள் போலியாக ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.

    சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்து உள்ளதாக மிதுன்ஷா தெரிவித்து உள்ளார். அந்த தகவல்களை அவர் கம்ப்யூட்டரில் வைத்துள்ளார். அதற்கு பாஸ்வேர்டு போட்டு உள்ளார்.

    அதனை திறந்து பார்த்தால் தான் மிதுன்ஷா எத்தனை பேருக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்துள்ளார் என்பது தெளிவாக தெரியும் என போலீசார் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட மிதுன்ஷாவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே பெங்களூரு ஆதார் கார்டு வினியோகத்துக்கான மத்திய அரசின் மின்னணுவியல் துறை துணை இயக்குனர் அசோக் லெனினும் கைது செய்யப்பட்ட மிதுன்ஷாவிடம் விசாரணை நடத்த உள்ளார். #tamilnews
    ×