search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய நீதிபதி"

    சென்னை ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக பி.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. #Pugalendhi #ChennaiHighCourt #ChiefJustice
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில், 59 நீதிபதிகள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர்.

    இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றி வரும் பி.புகழேந்தியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமித்து மத்திய அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள புகழேந்திக்கு வயது 51. இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் மேல ஆமாத்தூர் ஆகும். தற்போது, மதுரை நாராயணபுரம் விஸ்வசாந்தி நகரில் வசித்து வருகிறார்.

    இவரது தந்தை பாலகிருஷ்ணன், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வருவாய்துறையில் பணியாற்றி தாசில்தாராக பதவி உயர்வு பெற்று ஓய்வுபெற்று விட்டார்.

    இதன் காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை விருத்தாசலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புகழேந்தி படித்தார். இவரது தாயார் பெயர் வேலம்மாள். மனைவி பெயர் ஜெயபாரதி. இவர், மதுரையில் உள்ள கூட்டுறவு தணிக்கை துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

    புகழேந்தி, 1990-ம் ஆண்டு புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். அதே ஆண்டில் வக்கீலாக பதிவு செய்த அவர், 1993-ம் ஆண்டு வரை கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தனது சித்தப்பா பரமசிவத்திடம் ஜூனியராக இருந்தார்.

    அதன்பின்னர், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருந்து நீதிபதியாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்ற ராஜேஸ்வரனிடம் ஜூனியராக சேர்ந்து பணியாற்றினார்.

    சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு மின்சார வாரியம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், திருச்சியில் உள்ள தேசிய சட்டக்கல்லூரி, தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி ஆகியவற்றின் வக்கீலாக பணியாற்றி உள்ளார். மதுரை ஐகோர்ட்டு கிளை வக்கீல் சங்க (எம்.பி.எச்.ஏ.ஏ.) செயலாளராக இருந்துள்ளார். பல்வேறு முக்கிய கிரிமினல் வழக்குகளிலும், ரிட் மற்றும் வங்கி தொடர்பான வழக்குகளிலும் ஆஜராகி வாதாடி உள்ளார்.

    மதுரை ஐகோர்ட்டு கிளையில் சிறப்பு அரசு வக்கீலாக பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் தமிழக அரசுக்காக ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகளில் ஆஜராகி உள்ளார். 2.8.2016 முதல் மதுரை ஐகோர்ட்டு கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றி வருகிறார்.

    இவர் விரைவில் பதவியேற்க உள்ளார். இதன்மூலம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.  #Pugalendhi #ChennaiHighCourt #ChiefJustice
    ×