என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதுவை கவர்னர்"
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார். 6 நாட்கள் அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு 20-ந் தேதி தான் புதுவை திரும்புவதாக இருந்தது.
புதுவையில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் கவர்னர் ஊரில் இல்லாமல் இருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
சபாநாயகர் வைத்திலிங்கம் மத்திய உள்துறை மந்திரிக்கு கடிதம் அனுப்பினார்.
அதில், புதுவையில் அசாதாரண சூழ்நிலை நிலவும்போது, இதை கண்டு கொள்ளாமல் ஊரை விட்டே கவர்னர் வெளியேறி விட்டார். எனவே, அவருக்கு பதிலாக இடைக்கால கவர்னரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
மேலும் காங்கிரஸ் மேலிட தலைவர்களும் டெல்லியில் உள்துறை மந்திரியை சந்தித்து இதுபற்றி புகார் கூறி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் புதுவையில் போராட்டம் மேலும் விரிவடைந்து உள்ளது. நிலைமை மோசமாகி வருகிறது.
இதனால் கவர்னர் கிரண்பேடி தனது டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு இன்றே புதுவை திரும்புகிறார்.
கவர்னர் அவசரமாக திரும்புவதால் அவர் முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, முதல்-அமைச்சரின் தர்ணா போராட்டம் இன்றே முடிவுக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கவர்னர் கிரண்பேடி மீண்டும் புதுவை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை தனது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றினார். #Narayanasamy #GovernorKiranbedi
புதுச்சேரி:
புதுவை கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி விட்டு செல்கின்றனர். அவ்வாறு வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பாறை குவியல்களுக்குள் சிக்கி கொள்கின்றன.
மேலும் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் (கேரி பேக்குகள்) காற்றில் அடித்து செல்லப்பட்டு கடலில் கலக்கிறது.
அதோடு கடற்கரை பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கலந்து அலங்கோலமாக காட்சி அளிப்பது அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. இதனால் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி நேற்று அதிகாலை கடற்கரை சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடற்கரை சாலை முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக துப்புரவு தொழிலாளர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களை வரவழைத்து துப்புரவு பணியில் ஈடுபட்டார்.
தொடர்ந்து 3 மணி நேரம் கவர்னர் கிரண்பேடி துப்புரவு தொழிலாளர்களுடன் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
இதுகுறித்து கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
புதுவையில் தூய்மை, பாதுகாப்பு, பராமரிப்புக்காக கடற்கரையில் இனி கூடுதலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரையில் கூடுதலாக ஸ்வட்ச் பாரத் துப்புரவு தொழிலாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்.
கடற்கரையில் குப்பைகளை வீசாமல் இருக்க, ரோந்து செல்லும் போலீசார் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்வார்கள். அதனையும் மீறி குப்பைகளை வீசினாலோ, பொது இடத்தில் சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்க நேரிடும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார். #PondicherryGovernor #Kiranbedi
புதுவை கவர்னர் கிரண்பேடி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த வாரம் (சனிக்கிழமை) மாணவர்களுடன் சைக்கிளில் ராஜ்நிவாசில் இருந்து அரியாங்குப்பத்துக்கு பேரணியாக சென்றார்.
அதுபோல் இன்று காலை 7 மணிக்கு கவர்னர் கிரண்பேடி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் 50 பேருடன் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிளில் தவளக்குப்பத்துக்கு பேரணி சென்றார்.
பின்னர் அங்குள்ள அரவிந்தர் கண் ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் கிரண்பேடி பின்னர் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கலந்துரையாடினார்.
இதனைத்தொடர்ந்து வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த குமார் பேசும் போது, விபத்தில் உயிர் இழப்புகளை தடுக்க இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது அவசியமானதுதான்.
அதே வேளையில் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி பலர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுகிறார்களே. இதனை தடுக்கவும், முறைப்படுத்தவும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கவர்னரிடம் சரமாரி கேள்வி எழுப்பினார்.
ஆனால், இதற்கு கவர்னர் கிரண்பேடி பதில் ஏதும் கூறாமல் நிகழ்ச்சியை முடித்து கொண்டு மாணவர்களுடன் அங்கிருந்து ராஜ்நிவாசுக்கு திரும்பினார்.
இந்த நிகழ்ச்சியின் போது வணிகவரித்துறை ஆணையர் ஸ்ரீநிவாஸ், அரவிந்தர் கண் ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். #PondicherryGovernor #Kiranbedi
புதுவை நகர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் குறித்து வார இறுதி நாட்களில் கவர்னர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி இன்று (சனிக்கிழமை) கவர்னர் கிரண்பேடி உழவர்கரை நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பிரதமர் மோடி செய்வார்.
முப்படையை சேர்ந்த வீரர்கள் கேரளாவில் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாம் அனைவரும் கேரளாவை நேசிப்பதால் நம்மால் இயன்ற உதவிகளையும் செய்ய வேண்டும்.
இவ்வாறு கிரண்பேடி கூறினார்.
தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு கவர்னர் கிரண்பேடி பதிலளிக்கும் போது, புதுவையில் முதலில் போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியும் சட்டத்தை மதிக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இதன்மூலம் பொதுமக்களுக்கு தானாக விழிப்புணர்வு ஏற்படும் என்றார். #PuducherryGovernor #Kiranbedi
சென்னை:
தி.மு.க. கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“பா.ஜ.க.வின் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் புதுச்சேரி பட்ஜெட்டிற்கு அம்மா நில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.
குறிப்பாக துணை நிலை ஆளுனர் “மூன்று பாரதிய ஜனதா கட்சி நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஏழரை லட்சம் புதுச்சேரி மக்களின் நலனை புறக்கணிக்கும் வகையில் நிதி மசோதாவை நிறைவேற்றவிடாமல் இத்தனை நாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தார்” என்பதும், “இப்போது ஒப்புதல் அளிக்கும் போது கூட புதுச்சேரி சட்டமன்றத்திற்கே நிபந்தனை விதிப்பதும்” மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றத்தின் கண்ணியத்தை முற்றிலும் சீர்குலைக்கும் மிக மோசமான அரசியல் சட்ட விரோதச் செயலாகும்.
பாரதிய ஜனதா கட்சியில் உள்ள அதுவும் மூன்று பேரின் தனிமனித நலனுக்காக, புதுச்சேரிவாழ் ஏழரை லட்சம் மக்களின் பொது நலனை முடக்கி வைத்த துணை நிலை ஆளுநர் அந்தப் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதி இருக்கிறதா என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மதிப்பீடு செய்ய வேண்டும்.
இதுபோன்று திட்டமிட்டு உருவாக்கிய “நிதி நெருக்கடி”க்குப் பிறகு, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும்” என்று புதுச்சேரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
புதுச்சேரி மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் எதிரொலித்திருக்கிறது. “புதுச்சேரி மக்களின் நலனுக்காகவே பாடுபடுகிறேன்” என்று இதுவரை பேசி வந்த துணை நிலை ஆளுநரும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசும், “புதுச்சேரி மக்களின் திட்டங்களுக்கும், மாநில வளர்ச்சிக்கும் தேவையான” நிதி மசோதாவை பா.ஜ.க.வின் குறுகிய அரசியல் லாபத்திற்காக போட்டி போட்டுக்கொண்டு வேண்டுமென்றே தாமதம் செய்திருப்பது மக்களாட்சியின் மாண்பைச் சிதைக்கும் செயலாக அமைந்திருக்கிறது.
“புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் வளர்ச்சித் திட்டங்கள் அதிகாரக் குழப்பங்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும் உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும் என்றும், அது வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சரின் அதிகாரங்களில் குறுக்கிட்டுப் பிரவேசிப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு கண்டிப்பான அறிவுறுத்தல் வழங்கிடவேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MKStalin #PondicherryGovernor
புதுச்சேரி:
இன்று காலை 11.30 மணிக்கு சபாநாயகர் காலவரையின்றி சபையை ஒத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
துறைரீதியான நிதி ஒதுக்க மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். ஒட்டுமொத்த நிதி ஒதுக்க மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தோம்.
ஆனால், அவர் அதில் கையெழுத்திடவில்லை. இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலை ஏற்படும். அரசு கொடுத்த பணிகளை நான் முடித்துவிட்டேன். நிதி ஒதுக்க மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த பின்னர் மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி சபையின் ஒப்புதல் பெறப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #puducherryassembly
புதுச்சேரி:
புதுவை கவர்னர் மாளிகையில் இஸ்லாமியர்களுக்கு நேற்று மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனை கண்டித்து புதுவை மாநில இந்து முன்னணி சார்பில் நேரு வீதி- காந்தி வீதி சந்திப்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்துக்கு நகர தலைவர் சிவமுத்து தலைமை தாங்கினார். போராட்டத்தில் பொதுச் செயலாளர் முருகையன், புதுவை மாநில தலைவர் சனில்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்துக்களுக்கு தீபாவளி விருந்து, பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் விருந்து வழங்காமல் கவர்னர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டினர்.
அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே புதுவை கவர்னர் மாளிகையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் அசோக் ஆனந்த், சுகுமாறன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசுத்துறை செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இஸ்லாமியர்கள் 100 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவர்களில் 50-க்கும் குறைவானவர்களே பங்கேற்றனர். மற்றவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டனர்.
மேலும் அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்ட ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு துறைகளுக்கான இணை செயலாளரை நேரடியாக துறைகளுக்கு நியமிக்க நேற்றைய தினம் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.
துறை இணை செயலாளர் பதவிக்கு ஐ.ஏ.எஸ். தகுதி பெற்றவர்கள், பதவி உயர்வு மூலம் பல கட்டங்களில் பணியாற்றிய பிறகு இணை செயலாளராவது வழக்கம்.
ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றவர்கள் 20 ஆண்டுக்கு பின்னரே இணை செயலாளர் பதவியை அடைய முடியும். ஆனால், மத்திய அரசு வெளிமார்க்கெட்டிலிருந்து நேரடியாக இணை செயலாளர் பதவிக்கு நியமிக்க முடிவு செய்திருப்பது நிர்வாகத்தை சீர்குலைக்க செய்யும். அதிகாரிகளின் பாரம்பரியத்தையும் அழிப்பதாக அமையும்.
ஏற்கனவே மத்திய அரசு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சி பெறும் காலத்தில் பெறும் மதிப்பெண்ணையும் கணக்கிட்டு பணிகளை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது.
இதற்கு நாடு முழுவதும் உள்ள முதல்-அமைச்சர்களும், அதிகாரிகளும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இணை செயலாளர் பதவியில் இருப்பவர்கள் முதல்-அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் கோப்புகளை அனுப்பும் நிலையில் இருப்பர். அரசின் கொள்கை முடிவுகள் எடுக்க துணையாக இருப்பர்.
எனவே வெளி மார்க்கெட்டில் இருந்து நேரடியாக நியமனம் செய்வது ஏற்க முடியாதது. மத்திய பா.ஜனதா தொடர்ந்து அரசு அமைப்புகளை சீர்குலைவிற்கு ஆளாக்கும் செயலை செய்து வருகிறது. திட்ட கமிஷனை கலைத்து நிதி அயோக் அமைப்பை ஏற்படுத்தினர்.
அதேபோல மத்திய அரசின் திட்டங்களை முடக்கம் செய்தனர். சில திட்டங்களுக்கு பெயரை மாற்றி பயன்படுத்தினர். அரசு துறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கைப்பாவையாக கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சி.பி.ஐ., வங்கிகள், வருவாய்த்துறை ஆகியவற்றை தங்கள் கைக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் தற்போது இணை செயலாளர் பதவியை நேரடியாக நியமிக்க நினைப்பது மத்திய அரசு விதிமுறைகளுக்கு மீறிய செயல்.
ஏற்கனவே ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றவர்கள் பயிற்சியின்போது எடுக்கும் மதிப்பெண்ணையும் கணக்கிடும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.
தற்போது இணை செயலாளர் பதவியை நேரடியாக நியமிக்கவும் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதவுள்ளேன். இத்தகைய நிலைப்பாடு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். மகத்துவத்தை குறைத்துவிடும்.
வாட்ஸ்-அப், டுவிட்டர் போன்ற சமூகவலை தளங்களில் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது ஏற்கத்தக்கதல்ல. அந்த உத்தரவுகளுக்கு அதிகாரிகள் செயல்படக்கூடாது என ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி இருந்தோம்.
தற்போது மக்கள் வாட்ஸ்-அப் மூலம் புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் கூறியுள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல. கவர்னர் எழுத்துப்பூர்வமாக உத்தரவு அளித்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், துறை செயலர்கள், தலைமை செயலர், அமைச்சர், முதல்- அமைச்சர் ஒப்புதல் பெற்றே கவர்னருக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
இதுதான் மாநில நிர்வாகத்தில் நடை முறையாக உள்ளது. வாட்ஸ்-அப் அங்கீகரிக்கப்பட்டதல்ல. வாட்ஸ்அப்பில் பல தவறான தகவல்கள், வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் திருபுவனை கூட்டுறவு வங்கியில் கொள்ளை நடந்தததாக தகவல் வெளியானது.
இதுகுறித்து விசாரித்த போது வங்கி லாக்கரை உடைக்க முடியாமல் திருடர்கள் தப்பி சென்றதாக தகவல் கிடைத்தது. இத்தகைய தகவல்களை யார் அனுப்புகிறார் என கண்டுபிடிக்க முடிய வில்லை. என்னைப்பற்றியும் தவறான தகவல்கள் பரப்புகின்றனர்.
இதுதொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டால் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும் என்கின்றனர். ஏற்கனவே 19 முறை இதுதொடர்பாக கடிதம் மூலமாக கவர்னரிடம் எடுத்துக்கூறியுள்ளேன். கவர்னருக்கு எந்த விளக்கம் அளிக்கும் முன்பும் அமைச்சர்களிடம் ஆலோசனை பெற்றே அதிகாரிகள் விளக்கம் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளேன். இதை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Narayanasamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்