search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை தேர்தல் அதிகாரி"

    அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசு ஊழியர்களுக்கு ஜெயில் தண்டனை வழங்கப்படும் என புதுவை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் 10-03-2019 அன்று இந்திய லோக்சபா தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

    இந்த அறிவிப்பு வெளி வந்த தினத்திலிருந்து தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    தேர்தல் நெறிமுறைகளை செவ்வனே செயல்படுத்தவும், எதிர்வரும் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்திட அனைத்து முயற்சிகளும் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த தேர்தலின் போது மாநில மத்திய அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் ஆதரவாக தேர்தல் வேலைகளில் ஈடுபடுவதாக பல புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளது.

    எனவே அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றும் பொழுது நடுநிலையோடு செயல்பட வேண்டும். தேர்தல் நடக்கும் காலத்தில் ஊழியர்கள் நடுநிலையோடு செயல்படுவது மக்களுக்கு தெரிய வேண்டும். அவ்வாறு தெரிந்தால் தான் தேர்தல் நியாயமான, சுதந்திரமான ஒரு நல்ல சூழலில் நடக்கிறது என்று பொதுமக்களுக்கு உணரப்படும்.

    எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது வேட்பாளருக்கும் ஆதரவாக அரசு ஊழியர்கள் செயல்படக்கூடாது. மீறுவோர் மீது மத்திய அரசு பணிநடத்தை விதிகள் 1961-ல் உள்ள விதிகள் கீழ் மற்றும் அனைத்திந்திய பணியில் இருப்போருக்கான விதிகளின் கீழும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊழியர்கள், வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதையும் மற்றும் ஓட்டு பதிவின் போது தங்கள் செல்வாக்கை பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுபவர்கள் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தான் தண்டிக்கப்படுவார்கள்.

    இந்த சட்டத்தில் உள்ள பிரிவு 234-ன் கீழ் அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலக கடமைகளை மீறி செயல்படக்கூடாது.

    அவ்வாறு மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள். தேர்தலின் போது தேர்தல் முகவர்களாக, வாக்குச்சாவடி முகவர்களாக மற்றும் எண்ணுகை முகவர்களாக செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது.

    அரசு ஊழியர்கள் மேற்கூறிய நடத்தை விதிகளை கடைபிடிக்க வேண்டும். மீறுவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கைக்கு எடுத்து தண்டிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #tamilnews

    ×