search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் மந்திரி விஜயகலா மகேஸ்வரன்"

    இலங்கையில் தமிழர்கள் அனுபவிக்கும் பிரச்சினையை எழுப்புவோரை, விடுதலைப்புலி ஆதரவாளர்களாக முத்திரை குத்துவதாக சமீபத்தில் பதவி விலகிய தமிழ் பெண் மந்திரி விஜயகலா மகேஸ்வரன் கூறினார். #SriLanka #LTTE #Vijayakala
    கொழும்பு:

    இலங்கை வடக்கு மாகாணத்தில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகலா மகேஸ்வரன் (வயது 45), குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தார். பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மந்திரி சபையில் இருந்த ஒரே தமிழ் பெண் மந்திரியான விஜயகலா கடந்த வாரம் கொழும்புவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

    அப்போது அவர், ‘வடக்கு மாகாணத்தில் தற்போது குற்ற செயல்கள் அதிகரித்து இருப்பதை பார்க்கும் போது, விடுதலைப்புலிகள் மீண்டும் வரவேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது’ என்று கூறியதாக தகவல் வெளியானது. இது இலங்கை அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.

    விஜயகலாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிங்கள எம்.பி.க்கள், அவர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்றத்தில் போர்க்கொடி தூக்கினர். மேலும் அவரது சொந்த கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது.

    எனவே இது குறித்து விசாரணை நடத்துமாறு கட்சித்தலைவரும், பிரதமருமான ரனில் விக்ரமசிங்கே கேட்டுக்கொண்டார். மேலும் விஜயகலாவின் கருத்து அரசியல் சாசனத்துக்கு எதிரானதா? என அட்டார்னி ஜெனரலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இவ்வாறு தனது கருத்துக்கு எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து விஜயகலா மகேஸ்வரன், கடந்த 5-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.



    ராஜினாமா நடவடிக்கைக்குப்பின் முதல் முறையாக, வடக்கு மாகாணத்தில் நேற்று முன்தினம் நடந்த கூட்டம் ஒன்றில் விஜயகலா பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஒருவர் பேசினால், அவரை விடுதலைப்புலியாக தெற்கு (சிங்களர்கள்) பார்க்கிறது. விடுதலைப்புலி ஆதரவாளராகவே அவர்களை முத்திரை குத்துகின்றனர். நான் வடக்கு மாகாண மக்களின் மனதில் இருப்பதைத்தான் பேசினேன். அவர்களுக்காகத்தான் எனது பதவியை ராஜினாமா செய்தேன்’ என்றார்.

    ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட தற்போது தமிழர்களின் நிலை மேம்பட்டு இருப்பதாக கூறிய விஜயகலா, தனது முயற்சிகளுக்கு எதிர்ப்பு வந்தாலும், மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் தெரிவித்தார். #SriLanka #LTTE #Vijayakala
    ×