search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேய் விரட்டும் சடங்கு"

    பேய் விரட்டும் சடங்கு என்ற பெயரில் யாரையாவது துன்புறுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
    சென்னை:

    தர்மபுரியை சேர்ந்தவர்கள் சின்னபொண்ணு, சுசீலா, முத்தாயி, விஜயா. இவர்கள், தங்களுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்டேஷ் விசாரித்தார். பின்னர், அவர் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

    சின்னபொண்ணு தன் மகனின் மனைவிக்கு (மருமகளுக்கு) பேய் பிடித்துள்ளது என்று கூறி கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி தங்கள் ஊருக்கு அருகே உள்ள மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அவருடன், அவரது மகள்கள் சுசீலா, முத்தாயி, விஜயா உள்பட 15 பேர் சென்றுள்ளனர்.

    கோவிலில் வைத்து, அந்த பெண்ணின் ஆடைகளை களைந்துள்ளனர். தலைமுடியை வழித்து மொட்டை போட்டுள்ளனர். பின்னர், தீயில் பழுக்க காய்ந்த ஊசியை, அந்த பெண்ணின் நாக்கில் வைத்து சுட்டுள்ளனர்.

    பேய் விரட்டுகிறோம் என்ற பெயரில் இதுபோன்ற சடங்குகளை நடத்தி, ஒருவரை துன்புறுத்த யாருக்கும் உரிமை கிடையாது. ஆண்டாண்டு காலமாக இதுபோன்ற சடங்குகளை நடத்துகிறோம் என்று கூறி, இதுபோன்று கொடூரமாக துன்புறுத்துவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.

    சடங்கு என்ற பெயரில் ஒருவரது கண்ணியத்தை சிதைப்பது, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனிதாபிமானமற்ற செயல்களை ஜீரணிக்க முடியாது.

    இந்த வழக்கில் மனுதாரர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.500 அபராதமும் விதித்து தர்மபுரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தண்டனையை மாவட்ட செசன்சு கோர்ட்டும் உறுதி செய்துள்ளது.

    அதேநேரம், இந்த சம்பவம் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தண்டனை பெற்றவர்களுக்கு வயதாகிவிட்டது. எனவே, இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மாற்றி அமைக்கிறேன்.

    ஒரு ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்கிறேன். அதற்கு பதில், இந்த வழக்கில் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தையே தண்டனை காலமாக மாற்றுகிறேன். இதை தவிர, மனுதாரர்கள் 4 பேரும் தலா ரூ.15 ஆயிரத்தை தர்மபுரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் செலுத்த வேண்டும். இந்த தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
    ×