search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேராசிரியர் காலில் விழ வைத்த மாணவர் அமைப்பினர்"

    மத்தியபிரதேசத்தில் வகுப்புக்குள் கோ‌ஷம் எழுப்பியதை தடுத்த பேராசிரியரை பாஜக மாணவர் அமைப்பினர் காலில் விழ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #BJP #MPProfessor
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் மன்ட்சார் என்ற இடத்தில் ராஜீவ்காந்தி பட்டமேற்படிப்பு கல்லூரி உள்ளது. இங்கு தினேஷ் சந்திரகுப்தா என்ற பேராசிரியர் பணியாற்றி வருகிறார்.

    அந்த கல்லூரியில் பி.எஸ்.சி. தேர்வு முடிவு வெளியிட தாமதமானது. இதுதொடர்பாக பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரி‌ஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் மனு கொடுக்க கல்லூரிக்கு வந்தனர்.

    பேராசிரியர் தினேஷ் சந்திரகுப்தாவை சந்தித்து அவர்கள் மனு கொடுத்தனர். அப்போது வகுப்பறையிலேயே அவர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள். ‘பாரத் மாதாக்கி ஜே’ என்று தொடர்ந்து கோ‌ஷம் எழுப்பியபடியே இருந்தனர்.

    அதற்கு பேராசிரியர் நீங்கள் கோ‌ஷமிடுவதால் வகுப்புகள் பாதிக்கப்படுகின்றன. எனவே கோ‌ஷமிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

    இதனால் கோபம் அடைந்த தொண்டர்கள் பேராசிரியரிடம் தகராறு செய்தனர். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பேராசிரியரை தேச துரோகி என்று குற்றம் சாட்டியதுடன் அவர் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அவர் எவ்வளவோ சொல்லியும் சமாதானம் அடையாமல் தொடர்ந்து அவருக்கு நெருக்கடி கொடுத்தனர்.

    இதனால் வேறு வழி தெரியாத பேராசிரியர் திடீரென மாணவர்களின் காலை தொட்டு கும்பிட்டார். இதை அந்த அந்த மாணவர்களே எதிர் பார்க்கவில்லை. பேராசிரியர் தங்கள் காலில் விழுந்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள்.

    ஆனால் இதை யாரோ செல்போனில் படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இதன்பிறகு தான் இந்த வி‌ஷயம் வெளி உலகிற்கு தெரியவந்தது.

    இந்த சம்பவத்திற்கு பிறகு பேராசிரியர் விடுமுறை எடுத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்படவில்லை. அதனால் எந்த விசாரணையும் நடக்கவில்லை.

    இதுசம்பந்தமாக கல்லூரி முதல்வர் ரவீந்திரகுமார் சோகானியிடம் கேட்டபோது, பேராசிரியர் தினேஷ் சந்திரகுப்தா மூத்த பேராசிரியர் ஆவார். 15-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி உள்ளார். இதய நோய், ரத்த அழுத்த நோயாளி. அவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தி இருப்பது வேதனை அளிக்கிறது. இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது இல்லை என்று கூறினார்.

    அகில பாரத வித்யார்த்தி பரி‌ஷத் மாவட்ட தலைவர் பவான் சர்மாவிடம் கேட்ட போது, சம்பவம் நடந்தபோது நான் அந்த இடத்தில் இல்லை. நான் அங்கு சென்றபோது ஆசிரியர்களும், எங்கள் மாணவர்களும் விவாதித்து கொண்டிருந்தனர். நான் உடனே அதில் தலையிட்டு பேராசிரியரிடம் மன்னிப்பு கேட்டேன். அந்த பிரச்சனை அதோடு முடிந்து விட்டது. ஆசிரியர்களுக்கு நாங்கள் மிகுந்த மரியாதை அளிப்பவர்கள் என்று கூறினார்.

    2006-ம் ஆண்டு உஜ்ஜைனியில் கல்லூரி பேராசிரியர் சபர்வால் என்பவரை அகில பாரத வித்யார்த்தி பரி‌ஷத் இயக்கத்தினர் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு நாக்பூர் கோர்ட்டில் விசாரணை நடந்தது. பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    அதுபோன்று மோசமான சம்பவமாக இதுவும் கருதப்படுகிறது. #BJP #MPProfessor

    Video Courtesy: NDTV

    ×