search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்"

    பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    பெரம்பலூர்:

    தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர், மங்களமேடு, பாடாலூர் ஆகிய பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மக்கள் தங்களது வீடுகளில் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படைத்து வழிபட்டனர். முன்னதாக பெண்கள் அவர்களது வீட்டின் முன்பு பெரிய அளவிலான வண்ண கோலமிட்டிருந்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

    அதனை தொடர்ந்து உழவுக்கு வித்திட்ட மாடுகளை அலங்கரிக்கும் விதமாக மாட்டு பொங்கல் மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது. கிராமப்புறங்களில் காலை நேரத்திலும், பெரம்பலூர் நகர் பகுதிகளில் மாலை நேரத்திலும் விவசாயிகள் தங்களது கால்நடைகளான பசுமாடு, கன்றுக்குட்டிகள், காளைகள் ஆகியவற்றை குளிப்பாட்டி மூக்கணாங் கயிறு, கழுத்து மணி, அந்த மாடுகளின் கொம்புகளில் கயிறு ஆகியவற்றை கட்டி அலங்கரித்தனர். பின்னர் அவற்றிற்கு பூஜை செய்து விவசாயிகள், கால்நடைகளை வளர்ப்போர் வழிபட்டனர்.

    மேலும் பொங்கல், மாட்டுபொங்கலையொட்டி பெரம்பலூர் பழைய பஸ்நிலைய பகுதிகளில் கரும்பு கட்டுகளின் விற்பனை நடந்தது. பொங்கல் அன்று மட்டும்தான் அதன் விற்பனை படுஜோராக இருந்தது. அப்போது கரும்பு ஒரு கட்டு ரூ.700 வரை விற்கப்பட்டது. கரும்புகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியதால், நேற்று கரும்பு கட்டின் விலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது என்றே கூறலாம். அந்த அளவுக்கு நேற்று முன்தினம் ரூ.700-ஆக இருந்த ஒரு கரும்பு கட்டு நேற்று ரூ.200-க்கு விற்பனையானது.

    ஆனால் அதனை மாட்டு பொங்கலிடுபவர் மட்டும் வாங்கினர். ஆனால் பொதுமக்கள் வாங்க ஆர்வப்படவில்லை. இதனால் வியாபாரிகள் கரும்புகளை கூவி, கூவி விற்பனை செய்ய ஆரம்பித்தனர். முதலில் ஒரு கரும்பின் கட்டின் விலை ரூ.200 என்று கூறியும், பொதுமக்கள் வாங்க முன்வராததால், ரூ.150-க்கும் விற்றனர். ஆனால் மஞ்சள் கொத்து, மண்பானைகள், வாழைத்தார், பூக்களும் பொங்கலன்று விற்பனையான விலையை விட மாட்டு பொங்கலன்று சற்று குறைந்து காணப்பட்டது.

    பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையடி வாரத்தில் உள்ள நளினியம்மன் சமேத காகன்னை ஈஸ்வரர் கோவிலில் பொங்கல் வைக்கப்பட்டது. மேலும் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றி வைக்கப்பட்டது. இதேபோல் வடக்கு மாதவி சமத்துவபுரம் அருகே உள்ள மகாலிங்க சுவாமி சித்தர் அதிர்ஷ்டானத்தில் பொங்கல் வைக்கப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தலையாட்டி சித்தர் ஆசிரமத்திலும் பொங்கலிடப்பட்டது. பெரம்பலூரிலுள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில், மதனகோபால சுவாமி கோவில், குரும்பலூர் பஞ்சநதீஸ்வரர் கோவில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அனைத்து கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியதால், அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததை காணமுடிந்தது.

    இதேபோல் மாட்டு பொங்கலன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள நந்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள நந்திகேசுவரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து காய், கனி, மலர்கள், ரூபாய் நோட்டுகள் மற்றும் இனிப்பு வகைகளால் சிறப்பு அலங்கார செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் முதலே பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் தனியார் அறக்கட்டளை மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் சார்பில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடு பட்டனர். 
    ×