search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்னமராவதி கலவர வழக்கு"

    பொன்னமராவதி கலவரம் தொடர்பாக 30 பேரை நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்.
    பொன்னமராவதி:

    தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவரது சமூகம் தொடர்பாக 2 பேர் அவதூறாக பேசிய ஆடியோ பதிவு ஒன்று கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதனை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வசித்து வரும் அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த மாதம் 19-ந்தேதி பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென போலீஸ் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கலவரம் தொடர்பாக 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட நபர்களையும் கைது செய்தனர். இதில் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த சிலரை, போலீசார் சொந்த ஊருக்கு வரவழைத்து கைது செய்தனர். பாராளுமன்ற தேர்தலில் சமுதாய வாக்குகளை பெறும் நோக்கத்தில் வாட்ஸ்அப்பில் அவதூறு கருத்துக்களை பரப்பியது தெரியவந்தது.

    இதனிடையே வழக்குப்பதிவு செய்யப்பட்ட 1,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் காரணமாக போலீசார் கைது நடவடிக்கையை ஒத்தி வைத்திருந்தனர்.

    தற்போது தேர்தல் முடிவடைந்துள்ளதால் கலவரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளை போலீசார் தொடங்கியுள்ளனர். அதன் படி நேற்றிரவு வழக்குப்பதிவு செய்யப்பட்ட சிலரை கைது செய்வதற்காக பொன்னமராவதி பகுதியில் உள்ள வீடுகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் குறிப்பிட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×