search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருட்கள் பறிமுதல்"

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 3,500 கோடி மதிப்புக்கு பணமும், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.950 கோடி சிக்கியது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்றது. கடைசி கட்ட தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல இடங்களிலும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2-ம் கட்டமாக கடந்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின்போது, தமிழகத்தில் மட்டும் 227 கோடியே 95 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. 3,113 கிலோ தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் மதுபானங்கள், போதை பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.950 கோடியே 12 லட்சம் ஆகும்.

    3-ம் கட்ட தேர்தல் நடைபெற்ற குஜராத்தில் 552 கோடியே 72 லட்சம் பணமும், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இங்கு பணம் 9 லட்சத்து 53 ஆயிரம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. மதுபானங்கள் மற்றும் பிற போதை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.525 கோடி ஆகும்.

    இதற்கு அடுத்தபடியாக தலைநகர் டெல்லியில் ரூ.426 கோடி மதிப்பிலும், பஞ்சாபில் ரூ.284 கோடி மதிப்பிலும், ஆந்திராவில் ரூ.229 கோடி மதிப்பிலும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    நாடு முழுவதும் மொத்தம் 839 கோடியே 26 லட்சம் ரொக்கப்பணமும், ரூ.293 கோடியே 60 லட்சம் மதிப்புக்கு மதுபானங்கள், ரூ.1,269 கோடியே 63 லட்சம் மதிப்புக்கு போதை பொருட்கள், ரூ.986 கோடியே 73 லட்சம் மதிப்புக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள், ரூ.58 கோடியே 53 லட்சம் மதிப்புக்கு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றியதாக தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.

    நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 ஆயிரத்து 447 கோடியே 74 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களில் குறிப்பிட்ட அளவு, சம்பந்தப்பட்டவர்களால் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டு திரும்ப பெறப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    இலுப்பூர் மற்றும் பொன்னமராவதி பகுதிகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
    அன்னவாசல்:

    இலுப்பூர் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து கிடைத்த தகவலின் பேரில், இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இலுப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வணிக நிறுவனங்கள், உணவு விடுதி, இறைச்சி கடைகள், பழக்கடைகள், பூக்கடைகளில் திடீர் ஆய்வு செய்த அலுவலர்கள் அங்கிருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தேனூர் கோப்பைகள், பிளாஸ்டிக் தூக்கு பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

    இதேபோல் பொன்னமராவதியில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில், பேரூராட்சி செயல் அலுவலர் உத்தரவின்படி, பேரூராட்சி பணியாளர்கள் பஸ் நிலையம், சந்தை விதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. 
    கர்நாடக சட்டசபை தேர்தலில் இதுவரை மொத்தம் ரூ.182.39 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #KarnatakaElection2018
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் இதுவரை மொத்தம் ரூ.182.39 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 7 லட்சத்து 18 ஆயிரத்து 452 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் 2,622 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இதில் 217 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள். ராஜராஜேஸ்வரி நகர், ஜெயநகர் தொகுதிகளை தவிர்த்து மொத்தம் 57 ஆயிரத்து 416 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 64 ஆயிரத்து 297 வாக்கு எந்திரங்களும், 57 ஆயிரத்து 786 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 57 ஆயிரத்து 786 வி.வி.பேட்களும் பயன்படுத்தப்பட்டன.

    மொத்தம் 3 லட்சத்து 20 ஆயிரத்து 606 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். 82 ஆயிரத்து 157-க்கும் அதிகமான போலீசார் மற்றும் ஆயுதப்படை உள்பட பல்வேறு பாதுகாப்பு படை வீரர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். பெண்களின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் மாநிலம் முழுவதும் 600 ‘பிங்க்‘ வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

    கர்நாடகம் முழுவதும் தேர்தல் அமைதியாக நடந்தது. ஒரு சில இடங்களில் சிறு இடையூறுகள், தகராறுகள் நடந்தன. ஹாவேரி மாவட்டம் தேவகிரி கிராமத்தில் வாக்குச்சாவடி அருகே பரவா அக்காசாலி (வயது 58) என்பவர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாதது மற்றும் குடும்ப பிரச்சினையால் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அதிகாரிகள் சமாதானம் செய்து வாக்களிக்க வைத்தனர். வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்ததாக முன்னாள் கவுன்சிலர் மல்லேஷ் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    பெலகாவி மாவட்டம் சிக்கோடியில் உள்ள 280-வது எண் கொண்ட வாக்குச்சாவடியில் வைக்கப்பட்ட வாக்கு எந்திரத்தில் இருந்த ஒரு கட்சியின் சின்னத்தில் ‘மை‘யை கொட்டியது, பெங்களூரு ஹம்பிநகரில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தொண்டர்கள் பா.ஜனதா கவுன்சிலர் ஆனந்த் ஒசூரை தாக்கிய விவகாரங்கள் உடனடியாக சரிசெய்யப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவுகள் நடந்தன.

    சாமராஜா தொகுதியில் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த 100 பேரை வாக்களிக்க செய்தோம். கொப்பல் மாவட்டம் கங்காவதியில் காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் அன்சாரியின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து நித்தியானந்தா, பீர் அகமது ஆகியோரை கங்காவதி போலீசார் கைது செய்தனர்.

    தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த நாளில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.91.58 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.24.83 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.44.28 கோடி மதிப்பிலான தங்கம்- வெள்ளி பொருட்கள், ரூ.40.18 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள், ரூ.21.29 கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறாக நேற்று வரை மொத்தம் ரூ.182.39 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் விதிமீறியதாக மொத்தம் 1,388 வழக்குகள் பதிவாகி உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #KarnatakaElection2018
    ×