search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி என்கவுண்டர்"

    மோடி குஜராத் முதல்வராக பதவி வகித்த போது அவரை கொல்ல வந்ததாக கூறி வாலிபர் ஒருவரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாக விசாரணை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்த போது என்கவுண்டர்கள் நடந்தன. குறிப்பாக 2002-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை 5 ஆண்டு இடைவெளியில் 17 என்கவுண்டர்கள் நடந்தன.

    இவை அனைத்தும் போலி என்கவுண்டர்கள் என்றும் இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எச்.எஸ்.பெடி தலைமையில் ஒரு நபர் கமி‌ஷன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    அவர் தனது 229 பக்க விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தார். மூடி சீல் வைக்கப்பட்ட அறிக்கை சுப்ரீம் கோர்ட்டின் தரை தளத்தில் உள்ள ஆவணங்கள் அறையில் வைக்கப்பட்டு இருந்தன.

    இதுபற்றி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான டிவி‌ஷன் பெஞ்ச் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் அறிக்கையை வெளியிடலாம் என்று அனுமதி அளித்து உள்ளார்.

    கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தின் அக்சர்தாம் கோவிலுக்குள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரிக்‌ஷா தொழிலாளியின் மகனான சமீர்கான் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். அவர் பாகிஸ்தானின் கெய்ஷ்- இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் அப்போது குஜராத் முதல்- மந்திரியாக இருந்த மோடியை கொலை செய்யும் திட்டத்துடன் வந்ததாகவும் போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    ஆனால் நீதிபதி எச்.எஸ். பெடி விசாரணை அறிக்கையில் இது போலி என் கவுண்டர் என்றும், அவர் போலீஸ் லாக்கப்பில் இறந்து இருக்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த போலி என்கவுண்டர் தொடர்பாக 3 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், போலி என்கவுண்டர்களில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், ரூ.14 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்துள்ளார்.
    ×