search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் அதிகாரம் அமைப்பு"

    தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 6 பேரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.#SterliteProtest
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கடந்த 22-ந்தேதி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கலவரம் தொடர்பாக 126 பேரை போலீசார் கைது செய்தார்கள்.

    பின்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுடன் வெளியூர்களை சேர்ந்த பலர் சேர்ந்து போலீசாரை தாக்கியதால் தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. மேலும் தூத்துக்குடியில் சந்தேகப்படும்படி வெளியூர் நபர்கள் யாரேனும் இருந்தால் இதுபற்றி உடனடியாக அதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.

    மேலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி சந்தேகப்படும்படி திரிந்தவர்களை மடக்கி பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றார்கள். தூத்துக்குடி அண்ணாநகர், பிரைண்ட்நகர் பகுதிகளில் வீடு வீடாக போலீசார் சோதனை நடத்தி ஏராளமான இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டார்கள்.

    மேலும் பலரை சட்ட விரோதமாக காவலில் வைத்ததாக வக்கீல் சந்திரசேகர் என்பவர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ததை தொடர்ந்து வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் போலீசாரால் சட்டவிரோதமாக காவலில் வைத்த 95 பேரை மீட்டார்கள். இது போல பல்வேறு பகுதியில் இருந்தும் இன்னும் பலர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு விடுவிக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

    அவர்களில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேரும் உள்ளனராம். மேலும் பல அப்பாவி இளைஞர்களையும் போலீசார் விசாரணைக்கு என அழைத்து சென்றுள்ளார்கள். அவர்களை போலீசார் எங்கு வைத்துள்ளார்கள் என தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் தவிக்கின்றனர்.

    எனவே அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள்? அவர்கள் கதி என்ன என கண்டறிந்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.#SterliteProtest
    ×