search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரணம் விசாரணை"

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் 25-ந் தேதி ஆஜராகும்படி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவரின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சசிகலா உறவினர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், போயஸ் கார்டன் இல்லத்தில் வேலை பார்த்த நிர்வாகிகள் என அனைத்து தரப்பினருக்கும் விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியது. சம்மனை பெற்றுக்கொண்டவர்கள் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்து வருகின்றனர்.

    கடந்த 8-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், டாக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் விசாரணை கமிஷனில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். 9-ந் தேதி அப்பல்லோ டாக்டர் சாந்தாராம் விசாரணையில் பங்கேற்றார். இடையில் விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்ட நிலையில் தற்போது வரும் 25-ந் தேதி முதல் மீண்டும் விசாரணை தொடங்க இருக்கிறது.

    அப்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சசிகலா உதவியாளர் கே.பி.கார்த்திகேயன், ஜெயலலிதா தோழியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பதர்சயத் ஆகியோர் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரும் 25-ந் தேதி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை ஆணையத்திடம் தெரிவிக்க இருக்கின்றனர். ஜெயலலிதாவின் பள்ளி தோழி என்பதால் பதர்சயத் ஆணையத்திடம் ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்து தனக்கு தெரிந்த பரபரப்பு தகவல்களை வெளியிடுவார் என்று தெரிகிறது. இதில் சசிகலா உதவியாளர் கே.பி.கார்த்திகேயன் மறு விசாரணைக்காக ஆஜர் ஆகிறார்.

    அதேவேளையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருக்கும் பொன்.மாணிக்கவேலும் முதல் முறையாக விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி, விளக்கமளிக்கிறார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, கடந்த 2012-ம் ஆண்டு பொன்.மாணிக்கவேல் மாநில உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றி உள்ளார். எனவே அவர் அந்த பதவியில் இருந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற விஷயங்கள் குறித்து அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்த இருக்கிறார். எந்தவொரு கருத்தையும் வெளிப்படையாக தெரிவித்து வரும் ஐ.ஜி. பொன்.மணிக்கவேல், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையிலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடுவார் என்று கருதப்படுகிறது.

    இதனை தொடர்ந்து 26-ந் தேதி சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்த இருக்கிறார். அப்போது ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கூடுதல் டி.எஸ்.பி. வீரபெருமாள், கவர்னர் மாளிகை உதவி பிரிவு அலுவலர் ஆர்.சீனிவாசன், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயர் ஆகியோர் நேரில் ஆஜராகி, குறுக்கு விசாரணையின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். இதற்கான சம்மன் அவர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
    ×