search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறுசீராய்வு மனுத்தாக்கல்"

    திருவிதாங்கூர் தேவசம் போர்ட்டு கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் சபரிமலை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்படுகிறது. #Sabarimala #KeralaGovt #DevaswomBoard
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுவை கேரள அரசும் சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் தாக்கல் செய்ய வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

    அதே சமயம் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்றும் கோர்ட்டின் தீர்ப்பை அரசு அமல்படுத்தும் என்றும் முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.

    தேவசம் போர்டு தலைவர் பத்மகுமாரும் தேவசம் போர்டு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று அறிவித்தார். இதனால் ஐயப்ப பக்தர்கள், பந்தளம் மன்னர் குடும்பத்தினர், சபரிமலை தந்திரிகள் போராட்டத்தில் குதித்ததால் சபரிமலை விவகாரம் தீவிரம் அடைந்தது.

    இதனால் கேரள அரசு சார்பில் போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என்று முடிவு எடுத்து விட்டு சமரச பேச்சு நடத்துவதால் எந்த பயனும் இல்லை என்று கூறி பேச்சு வார்த்தையை மன்னர் குடும்பத்தினர் உள்பட அனைவரும் புறக்கணித்து விட்டனர்.

    அடுத்த கட்டமாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம் போர்டு அலுவலகத்தில் சமரச பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 16-ந்தேதி நடந்த இந்த கூட்டத்தில் பந்தளம் மன்னர் குடும்பத்தினர், சபரிமலை கோவில் தந்திரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



    சுப்ரீம் கோர்ட்டில் உடனே மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீது தீர்ப்பும் வரும் வரை ஏற்கனவே உள்ள நடைமுறையை சபரிமலையில் பின்பற்ற வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் வற்புறுத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படாததால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மேலும் சபரிமலை விவகாரத்தில் நடைபெற்று வரும் போராட்டமும் கேரளாவில் தீவிரம் அடைந்தது. இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு எந்த முடிவையும் இந்த பிரச்சினையில் சுயமாக எடுக்கலாம் என்றும் அந்த முடிவை கேரள அரசு ஏற்கும் என்றும் கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்தார்.

    இந்த பிரச்சினையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தயார் என்று தேவசம் போர்டு கூறி உள்ளதை வரவேற்பதாகவும், எந்த பிரச்சினையும் இன்றி ஐயப்பனை பக்தர்கள் வணங்கிச் செல்ல தேவசம் போர்டு எடுக்கும் முடிவை வரவேற்போம் என்றும் அவர் கூறினார்.

    இதுபற்றி தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறும் போது, மாநில அரசு தேவசம் போர்டு முடிவில் தலையிடாது என்று அறிவித்துள்ளது. தேவசம் போர்டு சுயமாக முடிவு எடுக்கலாம் என்பதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.

    இதைத் தொடர்ந்து திருவிதாங்கூர் தேவசம் போர்ட்டு கமிட்டி ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பந்தளம் ராஜ குடும்பத்தினர், சபரிமலை கோவில் தந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்படுகிறது. இதன் மூலம் கேரளாவில் நடைபெற்று வரும் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர். #Sabarimala #KeralaGovt #DevaswomBoard

    ×