search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறுவாழ்வுக்கான கொள்கை"

    நாட்டின் தலைநகரான டெல்லியில் நாள்தோறும் இரு சிறார்கள் பாலியல் வன்முறைக்கு இரையாகும் நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்கான கொள்கை வகுக்கப்படவேண்டும் என குரல் எழும்பியுள்ளது. #policyforrehabilitation
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் 8 மாத குழந்தை அவரது உறவினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாள். அதைத்தொடர்ந்து 10 வயது சிறுமி, மதரஸாவில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக 10 வயது சிறுமியின் தந்தை கூறுகையில், ‘சம்பவம் நடந்து 1 மாதம் ஆகியும், இன்னும் அவள் வீட்டை விட்டு வெளியேறவே பயப்படுகிறாள். அவளுக்கு மருத்துவர்கள் மூலம் அறிவுரைகளும் வழங்கப்பட்டன. ஆனால், அவளால் அந்த சம்பவத்திலிருந்து மீள முடியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

    டெல்லி போலீசாரின் அறிக்கையின் படி, கடந்த 4 மாதங்களுக்குள் தினசரி 2 சிறார்கள் பாலியல் இச்சைக்கு இரையாக்கப்படுகிறார்கள்.

    இதுதொடர்பாக டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மலிவால் கூறுகையில், ‘பெற்றோர்களுக்கும் இதுபோன்ற சூழ்நிலைகளை கையாள்வது குறித்து தெரியவில்லை, அவர்கள் குழந்தைகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள், இதன்மூலம் சிறுகுழந்தைகள் குழப்பம் அடைகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.

    மேலும் ‘காவல்துறையினரும் அவர்களது வேலைப்பளு காரணமாக இந்த விஷயத்தில் முழு கவனம் செலுத்த முடியவில்லை, பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மறுவாழ்வுக்கான கொள்கைகள் வகுக்கப்படவேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வழக்கறிஞரும் குழந்தைகள் உரிமை தொடர்பான ஆர்வலருமான அனந்த் குமார் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிச்சயம் மறுவாழ்வு கொள்கை வகுக்கப்பட வேண்டும், ஆலோசகர் அமைக்கப்பட வேண்டும் ஆனால் ஒரு சில வழக்குகளில் வெறும் ஆலோசகர் மட்டுமே அந்த குழந்தைக்கு போதுமானதாக இருக்காது’ என தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், ‘பாதிக்கப்பட்டவர்களின் தேவைக்கேற்ப உதவும் வகையில் மறுவாழ்வுக்கான ஆலோசனை சட்டம் அல்லது திட்டம் அமைய வேண்டும்’ எனவும் தெரிவித்தார்.

    இதன்மூலம், தினந்தோறும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படும் குழந்தைகளின் வாழ்வை சீரமைக்க மறுவாழ்வு கொள்கை அமைக்கப்பட வேண்டும் என்ற குரல் எழும்பியுள்ளது.

    12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #policyforrehabilitation
    ×