search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாத்தளை முத்து மாரியம்மன் கோவில்"

    இலங்கை நாட்டில் முக்கியமான அம்மன் திருக்கோவில், மலையகத் தமிழர்களான இந்திய வம்சா வழியினரின் காவல் தெய்வம், என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோவில்.
    இலங்கை நாட்டில் முக்கியமான அம்மன் திருக்கோவில், மலையகத் தமிழர்களான இந்திய வம்சா வழியினரின் காவல் தெய்வம், இருபத்தியோரு நாள் விநாயகர் சஷ்டி லட்சார்ச்சனை நடைபெறும் கோவில், மாசியில் பிரம்மோற்சவம் காணும் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோவில்.

    தல வரலாறு :

    கி.பி. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிழைப்பு தேடிய இந்தியத் தமிழர்கள், தலைமன்னார், அரிப்பு துறைமுகம் வழியே இலங்கை வந்தனர். காட்டுவழியில் பெரும் துன்பப்பட்டு, கால்நடையாகவே இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் மாத்தளையில் இருந்து சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து மலையகத் தோட்டங்களுக்குச் சென்றனர். இவர்களின் கடினஉழைப்பே இன்றைய மலையகத்தின் செழிப்பாக காட்சி தருகின்றது.

    அவர்களது, தாய்நாடான இந்தியாவையும், வழிபடும் தெய்வங்களையும் பிரிந்து வந்த ஏக்கம் இவர்களை வாட்டியது. இந்நிலையில், இவர்களில் ஒரு அடியாரின் கனவில் அன்னை முத்துமாரி தோன்றினாள். ‘உங்களின் குறை தீர்க்க நான் ஊரில் உள்ள வில்வ மரத்தடியில் தோன்றியுள்ளேன். எனக்கு கோவில் எழுப்பி வழிபட்டு வாருங்கள். நான் உங்களை காவல் தெய்வமாகக் காத்தருள்வேன்’ என்று கூறி மறைந்தாள்.

    இதை அனைவரிடமும் கூறி மகிழ்ந்த அடியார், அன்னை அடையாளம் காட்டிய இடத்திற்குச் சென்றனர். அங்கே சிறிய வடிவில் அன்னையின் சிலை வில்வ மரத்தடியில் இருந்தது. மகிழ்ச்சி அடைந்த அனைவரும் அன்னைக்கு சிறுகுடில் அமைத்து வழிபட்டு வந்தனர். இவளே முத்துமாரி அம்மனாகப் போற்றப்படுகின்றாள்.

    கி.பி. 1852-ம் ஆண்டு சுப்புப்பிள்ளை என்பவர் தன் பொருட்செலவில் இடம் வாங்கி அதனை கோவிலுக்கு தானமாகக் கொடுத்தார். இவருக்குப்பின் பல வணிகர்கள், செல்வந்தர்கள், நகரத்தார் போன்றோரின் ஒத்துழைப்போடு திருக்கோவில் வளர்ச்சிக்குப் பாடுபட்டனர். கி.பி. 1960-ம் ஆண்டு புதிதாக கருவறை எழுப்பப்பட்டு, முதலாவது குடமுழுக்கு விழா இனிதே நடந்து முடிந்தது.

    108 அடி ராஜகோபுரம் :


    இவ்வாலயத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகத் திகழ்வது, விண்ணை முட்டி நிற்கும் 108 அடி உயர ஒன்பது நிலை ராஜகோபுரம். சுதைச் சிற்பங்கள் நிறைந்த இந்த கோபுரம், நம் கண்களுக்கு விருந்தாகவும் வியப்பூட்டும் விதமாகவும் அமைந்துள்ளன. இந்த ராஜகோபுரம் வடக்கு திசையில் இருந்து நம்மை வரவேற்கிறது. ஆலயத்திற்குள் உள்ளே விநாயகர், முருகப்பெருமான், சண்டேஸ்வரி, முத்து மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர், மகாவிஷ்ணு, துர்க்கையம்மன், சரஸ்வதி, லட்சுமி, நவக்கிரகங்கள் சன்னிதிகள் ஒருங்கே அமைந்துள்ளன.

    ஆலயத்தின் நடுநாயகமாக அன்னை மாத்தளை முத்துமாரியம்மன் கிழக்கு முகமாக எளிய வடிவில் ஒளி வீசும் வடிவங்கொண்டு அருளாசி வழங்குகின்றாள். இந்திய வம்சாவளி தமிழர்களின் காவல் தெய்வம் இவளே என்று எண்ணும் போது நம் மெய்சிலிர்க்கிறது.

    மாத்தளை முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை முத்துமாரியம்மன் தேவஸ்தான பரிபாலன சபை என்ற அமைப்பினால் திறம்பட நிர்வகிக்கப்பட்டு வருகிறது.



    இவ்வாலயம் ஆன்மிகப் பணியோடு நிறுத்திக்கொள்ளாமல், இந்தப் பகுதிவாழ் மக்களின் சமூக முன்னேற்றத்திற்கும் பேருதவி புரிந்து வருகிறது. சமயம் சார்ந்த அறப்பணிகள், இயல், இசை, நாடகம், நூல்கள் வெளியீடு இவற்றோடு நூலகம், ஞாயிற்றுக்கிழமை சமய வகுப்புகள், பள்ளிக்கூடம், தமிழ்தட்டச்சுப் பயிற்சி, தையல்வகுப்பு, கம்ப்யூட்டர் வகுப்பு என அனைத்தையும் இலவசமாகக் கற்றுத் தருகிறது.

    இவ்வாலயம் 1983-ல் ஏற்பட்ட இனக் கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. கலைநயம் மிக்க ஐந்து தேர்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. என்றாலும், அனைவரும் பெரும் முயற்சியின் காரணமாக, ஐந்து சித்திரத் தேர்கள் 1993-ல் மீண்டும் உருவாகி தேரோட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றது.

    அலுவிஹாரை :

    மாத்தளை நகரின் வடக்கில் பேதிஸ்த மன்னனால் எழுப்பப்பட்ட ‘அலுவிஹாரை’ பதிமூன்று குகைகளைக் கொண்டதாகும். இதன் பெருமையை கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் குறிப்புகள் எடுத்துரைக்கின்றன. இங்குதான் திரிபீடகம் என்ற ஓலைச்சுவடி நூல், கி.மு. முதலாம் நூற்றாண்டில், வலகம்பாகு மன்னன் காலத்தில் எழுதப்பட்டது.

    கொடுங்கோல் மன்னன் ராஜசிங்கன் காலத்தில் பவுத்த குருமார்கள் இந்த அலுவிஹாரையில் தஞ்சமடைந்தனர். அதோடு பவுத்த நூல்களைப் பாதுகாக்கும் இடமாகவும் இது விளங்கியிருக்கிறது. ஐரோப்பியர் ஆட்சியில் இக்குகை சேதப்படுத்தப்பட்டது. என்றாலும், கண்டிமன்னன் விஜயராஜ சிங்கன் காலத்தில் (கி.பி.1739-1747) புனரமைக்கப்பட்டது. இலங்கை அரசு இக்குகையினைப் புனித பிரதேசமாக அறிவித்துள்ளது. பதிமூன்று குகைகளில் சிலவற்றை மட்டுமே தற்போது காணமுடியும்.

    பெயர்க்காரணம் :


    மாத்தளை திருத்தலமானது, இலங்கை நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலமாகவும், புராதனமான நகரமாகவும், முக்கியத்துவம் பெற்ற நகரமாகவும் விளங்குகின்றது. கஜபாகு மன்னன் காலத்தில் சோழநாட்டில் சிறைபிடிக்கப்பட்ட பெருங்கூட்டம், மாத்தளை பகுதியில் தான் குடியமர்த்தப்பட்டனர். பெருங்கூட்டத்திற்கு சிங்களத்தில், ‘மஹாதலயக்’ என்று பெயர். இதுவே மருவி, ‘மாத்தளை’யானதாகக் கூறுவர்.

    அமைவிடம் :

    இலங்கையின் மத்திய மாகாணத்தின், மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து வடகிழக்கே 154 கி.மீ., கண்டியில் இருந்து வடக்கே 24 கி.மீ., தொலைவில் மாத்தளை நகரம் உள்ளது. இக்கோவிலின் பின்னணியில் அழகிய மலையும், அதன் மீது முருகன் கோவிலும் இருக்கின்றன. நகரைச் சுற்றி அமைந்துள்ள மலைகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. 
    ×