search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகர பஸ் கேமரா பொறுத்த திட்டம்"

    விபத்துக்களை தடுக்க மாநகர பஸ்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் திட்டத்தை போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. #TNTransport #Buscamera

    சென்னை:

    சாலை விபத்துக்களில் அரசு பஸ்கள் அதிகளவு சிக்கி பெரும் உயிர் சேதத்தையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. விபத்திற்கு காரணமான டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    மேலும் சாலை விபத்தில் உயிர் இழக்கும் குடும்பங்களுக்கு முதல்- அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது அரசுக்கு பெரும் நிதி செலவினத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இதனால் அரசு பஸ்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் திட்டத்தை போக்குவரத்து துறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

    சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் சென்னையில் பல்லவன் இல்லத்தில் நேற்று நடந்தது. இதில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அதில் சாலை பாதுகாப்புக்கு இன்னும் முக்கியத்தும் கொடுத்து வளர்ச்சிக்கான நடவடிக்கையை போக்குவரத்து கழகங்கள் எடுக்கவும் அதற்கான நிதியை செலவிடவும் முடிவு செய்யப்பட்டது. சாலை விபத்துகளை குறைப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

     


    பஸ்சின் பின்பக்க கண்ணாடி இடதுபுறத்திலும், முன் பகுதியிலும் கேமராவை பொருத்தினால் விபத்திற்கான காரணத்தை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மாநகர பஸ்களில் 75 சதவீத விபத்துகளில் பஸ்சின் முன் பகுதி சேதமடைகிறது. இதற்கு பஸ் டிரைவர்தான் காரணம் என்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    ஒரு சில வழக்குகளில் அரசு பஸ் டிரைவர்கள் மீது எவ்வித விசாரணையும் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னையை பொருத்த வரை இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக ஓட்டிச் சென்று விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். இதனால் அரசு பஸ் டிரைவர்கள் தேவையில்லாமல் பாதிக்கப்படுகின்றனர். விபத்து நடந்த பகுதி அருகில் உள்ள பள்ளி மற்றும் வணிக நிறுவனங்களின் கடைகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சியை வைத்து டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

    பஸ்சின் வெளிப்பகுதியில் கேமரா பொருத்தப்பட்டு இருந்தால் விபத்து எப்படி நடந்தது, விபத்திற்கான காரணம் யார்? என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

     



    அதனால் அரசு பஸ்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தினால் விபத்துக்களை தடுப்பதோடு மட்டுமல்லாமல் தவறு செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று போக்குவரத்து துறை நம்புகிறது.

    சாலை விபத்துகளில் சிக்கும் டிரைவர்கள் மீது துறை ரீதியான சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு 6 மாத காலத்திற்கு அவர்கள் குடும்பம் நடத்தவே கஷ்டப்படுகின்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    விபத்திற்கான காரணத்தை கண்டுபிடித்து உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பஸ்களில் வெளிப்பகுதியில் கேமரா பொருத்துவது நல்லது. சாலை விபத்தில் உயிர் இழந்த குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.69 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.22 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    அரசின் நிதி, விபத்து நிவாரண உதவி என்ற பெயரில் பல கோடி விரையம் செய்யப்படுகிறது. அதற்கு விபத்தினை தடுக்க அல்லது குறைக்க சாலை பாதுகாப்பு நிதியை பயன் படுத்தி கேமராக்களை பொருத்தினால் தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மக்களின் வரிப்பணமும் தேவை இல்லாமல் விரையம் ஆகாது.

    2016-17ம் ஆண்டில் சென்னை மாநகர பஸ்கள் 1665 விபத்துகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த எண்ணிக்கையை குறைத்தாலே அரசுக்கு பல கோடி மிச்சமாகும். டிரைவர்களும் தவறு செய்யாமல் தண்டனைக்கு ஆளாக மாட்டார்கள். #TNTransport #Buscamera

    ×