search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன் விற்கும் கேரள மாணவி"

    மீன் விற்கும் கேரள மாணவியை சமூக வலைத்தளத்தில் பலர் கிண்டல் செய்ததையடுத்து, அவர் தனக்கு யாருடைய தயவும் தேவையில்லை என கூறியுள்ளார். #StudentSellingFish #Hanan
    கொச்சி:

    கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஹனன் என்ற 21 வயது மாணவி, தொழுப்புழாவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் பகுதி நேரமாக மீன் விற்று தனது அன்றாட செலவை சமாளிப்பதுடன், குடும்ப செலவிற்கும் உதவுகிறார். இவரது வாழ்க்கை தொடர்பாக மாத்ருபூமி நாளிதழில் சிறப்பு கட்டுரை வெளியானது. வீடியோவும் வெளியானது. இந்த கட்டுரை மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பரவி பலரது பாராட்டையும் ஆதரவையும் பெற்றது.

    ஆனால் ஒரு சிலர் இதை போலி செய்தி என்று கூறி தாறுமாறாக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யத் தொடங்கினர். எனினும், அவர் படித்த கல்லூரியின் முதல்வரும், தெரிந்தவர்களும் ஹனன் குறித்து நாளிதழில் வந்த செய்தி உண்மைதான் என்று ஆதரவுக் கரம் நீட்டினர். இதையடுத்து, மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணந்தனம், மாணவிக்கு ஆதரவாக தனது பேஸ்புக்கில் பதிவிட்டார். அதில், கடினமான வாழ்க்கைக்கு எதிரான போராடி வரும் ஹனனை இப்படி தூற்றுவதை நிறுத்துங்கள் என்று கூறி, விமர்சித்தவர்களை வாயடைத்துள்ளார்.

    இந்நிலையில், நெட்டிசன்களின் விமர்சனங்களால் வேதனை அடைந்த ஹனன், விமர்சனம் செய்தவர்களை கைகூப்பி தன்னை நிம்மதியாக இருக்க விடும்படி கண்ணீர்மல்க கூறியுள்ளார்.



    ‘உங்களிடம் இருந்து எனக்கு எந்த உதவியும் தேவையில்லை. தயவு செய்து என்னை தனியாக விடுங்கள். எனது அன்றாட தேவைக்காக என்னால் இயன்ற வேலையை செய்ய விடுங்கள். படிப்பைத் தொடர்வதுடன் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பதுதான் என் முக்கிய நோக்கம்.’ என கூறியுள்ளார் ஹனன்.

    இதற்கிடையே, ஹனனின் கதையைக் கேள்விப்பட்ட திரைப்பட இயக்குனர் அருண் கோபி, தனது அடுத்த படத்தில் ஹனனுக்கு வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார். இந்தப் படத்தில் மோகன்லால் மகன் பிரணவ் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த இயக்குனரையும் நெட்டிசன்கள் விட்டு வைக்கவில்லை.  #StudentSellingFish #Hanan
    ×