search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டை விலை நிர்ணயம்"

    முட்டைக்கான விலையை நிர்ணயம் செய்ய தமிழக அரசு தனிக்குழு அமைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதில் 10 நாளில் முடிவு எடுப்பதாக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. #TNGovernment #EggPrice
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அக்ரம் என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்து உள்ளார். அந்த வழக்கில் அவர் கூறி இருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கோழி முட்டை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை கடந்த 25 ஆண்டுகளாக செய்து வருகிறேன்.



    பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு திட்டத்துக்கு, தமிழக அரசு நாள் ஒன்றுக்கு பல லட்சம் முட்டைகளை கொள்முதல் செய்து வருகிறது. ஆனால், இந்த முட்டைக்கு விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு என்ற தனியார் அமைப்புதான் நிர்ணயம் செய்கிறது.

    இந்த குழு, 1982-ம் ஆண்டு தனியார் முட்டை நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட்டது. ‘என் முட்டை, என் விலை, என் வாழ்க்கை’ என்ற வாசகத்துடன் உருவாக்கப்பட்ட இந்த குழு, நாடு முழுவதும் பல ஆயிரம் உறுப்பினர்களை கொண்டு உள்ளது.

    விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் நெல், கரும்பு உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்கிறது. அதுபோல, கோழி முட்டைக்கும் தமிழக அரசே விலையை நிர்ணயம் செய்யவேண்டும் என்று கூறி கடந்த ஜூலை 17-ந் தேதி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஒரு முட்டையின் உற்பத்தி செலவு ரூ.2.75 ஆகும். ஆனால், ஒரு முட்டையின் விலை ரூ.4.50 என்று இந்த அமைப்பு நிர்ணயம் செய்கிறது. இதனால், முட்டை வியாபாரிகள் எல்லாம் அதிக லாபத்தை சம்பாதிக்கின்றனர்.

    எனவே, முட்டைக்கு நியாயமான விலையை நிர்ணயம் செய்ய ஒரு குழுவை அமைப்பதற்கு, தமிழ்நாடு கால்நடை, பால் மற்றும் மீன்வளத்துறையின் முதன்மை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், “வழக்குதாரரின் கோரிக்கை மனுவை 10 நாட்களுக்குள் பரிசீலித்து தகுந்த முடிவினை தமிழக அரசு மேற்கொள்ளும்” என்று உத்தரவாதம் அளித்தார்.

    இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.  #TNGovernment #EggPrice
    ×