search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முறையான கட்டிடம்"

    முறையான கட்டிடம் இல்லாமல் புழல் பகுதியில் இயங்கும் பள்ளிக்கூடத்தை இழுத்து மூடவும், அங்கு படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிக்கூடங்களுக்கு மாற்றவும் கல்வி அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், சசிகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை, புழல் அருகேயுள்ள கன்னடப்பாளையத்தில் ஸ்ரீ சரவணா வித்யாலயா நர்சரி பள்ளி விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறது. அங்கு முறையான கட்டிடங்கள் இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் சீட்டில் பள்ளிக்கூடங்கள் இயங்குகிறது. இதுகுறித்து அரசுக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், கும்பகோணம் பள்ளி தீ விபத்தை போல மற்றொரு சம்பவம் நடந்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா? கட்டிடமே இல்லாத பள்ளியை நடத்துவதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர், இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த வாரம் நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தொடக்க கல்வி இயக்குனர் ஏ.கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் ஆஜரானார்கள். அவர்கள், இந்த பள்ளிக்கூடத்துக்கு ஏற்கனவே விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.

    அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அந்த பள்ளியை மூடவும், அங்கு பயிலும் மாணவர்களை அருகில் உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றவும் உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத கல்வித்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். #tamilnews
    ×