search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முல்லர் குழு"

    அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவிக்கே உலை வைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட வழக்கில் அவரது முன்னாள் உதவியாளர் பால் மானபோர்ட் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. #PaulManafort #Trump
    வாஷிங்டன்:

    கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு ரஷிய உளவுத்துறை உதவியதாக எழுந்த புகார் தொடர்பாக எப்பிஐ அதிகாரி முல்லர் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. 

    இதற்கிடையே, கடந்தாண்டு அதிபர் டிரம்பின் பிரசார குழு தலைவராக இருந்த பால் மனாபோர்ட், உதவியாளர் ரிக் கேட்ஸ் ஆகியோர் உக்ரைனைச் சேர்ந்த அரசியல்வாதி விக்டர் யானுகோவிச், அவரது ரஷ்ய ஆதரவு அரசியல் கட்சியிடமிருந்து பல மில்லியன் டாலர் நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நிதிமோசடி, வங்கி மோசடி, வெளிநாட்டு வங்கிக்கணக்குகளை மறைத்தது உட்பட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதனை அடுத்து, தலா 5  மில்லியன் டாலர் ஜாமீனில் அவர்களை விடுவித்த நீதிமன்றம் வீட்டுக்காவலில் வைத்தது.

    விர்ஜீனியா மாகாணத்தின் அலெக்ஸாண்ட்ரா கோர்ட்டில் நடந்து வந்த பால் மனாபோர்ட் மீதான வங்கி, வரி மோசடி வழக்குகள் மீதான விசாரணை முடிந்ததை அடுத்து, 8 வழக்குகளில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது அதிபர் தேர்தலில் ரஷிய தலையீடு தொடர்பாக விசாரித்து வரும் முல்லர் குழுவுக்கு கிடைத்த முன்னேற்றமாக கருதப்படுகிறது.

    மேலும், மானபோர்ட் மீதான மற்ற 10 வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட வழக்குகளில் குறைந்தது 80 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.


    டிரம்ப் உடன் கோஹன்

    இந்த தீர்ப்பு டிரம்ப் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த அதிர்ச்சி அவருக்கு தீருவதற்குள்ளாக இன்னொரு அதிர்ச்சி டிரம்ப்புக்கு கிடைத்தது. அவரது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் 2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திய நிதி தொடர்பாக சட்டத்தை மீறியதாக மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

    வேட்பாளரின் உத்தரவுக்கு இணங்க தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு தான் இவ்வாறு செய்ததாக அவர் கூறினார். டிரம்புடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு ரகசியமாக பணம் அளித்தது தொடர்பாக கோஹன் இந்த சாட்சியம் அளித்திருந்தார்.

    இந்த வழக்கு விசாரணையில், கோஹன் வரி மற்றும் வங்கி பண மோசடிஉள்பட 8 அம்சங்களில் நடந்த முறைகேடுகளை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால், அவருக்கும் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    மேற்கண்ட இரு சம்பவங்கள் முல்லர் குழுவுக்கு சாதகமாகவும், டிரம்ப்புக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது. இதனால், டிரம்ப்பின் பதவிக்கு ஆபத்து வரலாம் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
    ×