search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்ரோ ரெயில் கட்டணம்"

    மெட்ரோ ரெயிலின் முதல் திட்ட பணிகள் முடிந்ததால் கட்டணம் 10 ரூபாய் வரை குறைவதற்கு வாய்ப்புள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் பிரிவு பணிகள் 2 கட்டங்களாக நடந்தன.

    வண்ணாரப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் வரை ஒரு கட்டமாகவும், சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக மீனம்பாக்கம் வரை செல்ல மற்றொரு கட்டமாகவும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டது.

    சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு- ஆலந்தூர் இடையே முதல் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கியது. 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து ஆரம்பித்தது.

    2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆலந்தூர்- பரங்கிமலை இடையே மெட்ரோ ரெயில் விடப்பட்டது. 2017-ம் ஆண்டு மே மாதம் கோயம்பேடு முதல் நேரு பார்க் வரை மெட்ரோ ரெயில் பாதை விரிவுப்படுத்தப்பட்டது.

    கடந்த ஆண்டு மே மாதம் 18-ந்தேதி நேரு பார்க்கில் இருந்து சென்ட்ரல் வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கியது. அதே தினத்தன்று சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து டி.எம்.எஸ். வரை மெட்ரோ ரெயில் விடப்பட்டது. இப்படி 6 தடவை மெட்ரோ ரெயில் போக்குவரத்து இணைக்கப்பட்டு ரெயில் சேவை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரெயில் வழித்தடம் தயாரானது. கடந்த மாதம் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பிறகு மெட்ரோ ரெயில் இயக்கலாம் என்று சான்றிதழ் வழங்கினார்கள்.

    இதையடுத்து டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் சேவையை வருகிற 10-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். திருப்பூர் கூட்டத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அவர் இந்த போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையின் முதல் திட்டப் பணிகள் முழுமையாக செயல்பாட்டுக்கு வருகிறது.

    இந்த முதல் திட்டப்பணிகள் 14,600 கோடி ரூபாய் செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. தற்போது மெட்ரோ ரெயிலில் அதிகபட்ச கட்டணமாக ரூ.70-ம், குறைந்தப்பட்ச கட்டணமாக ரூ.10-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வண்ணாரப்பேட்டையில் இருந்து மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்குவதால் வடசென்னை பகுதி மக்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். வண்ணாரப்பேட்டையில் 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விமான நிலையத்துக்கு 45 நிமிடங்களில் சென்று விட முடியும்.

    மேலும் வடசென்னை பகுதியில் உள்ளவர்கள் எழும்பூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மிக விரைவாகவும், எளிதாகவும் வந்து செல்ல முடியும். எனவே முதல் திட்டப்பணியின் ஒட்டு மொத்த சேவையும் அமலுக்கு வரும்போது மெட்ரோ ரெயிலில் பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயரும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

    குறிப்பாக வடசென்னையில் இருந்து தென் சென்னைக்கு பணிக்கு வருபவர்களுக்கு மெட்ரோ ரெயில் மிகவும் கை கொடுக்கும். மேலும் விமான நிலையங்களில் இருந்து நகருக்குள் வருபவர்களுக்கும் மெட்ரோ ரெயில் சேவை செலவை குறைக்கும் வகையில் இருக்கும்.

    பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்பதால் கட்டணத்தை குறைக்கலாமா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஏற்கனவே மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு பயணிகள் வலியுறுத்தினார்கள்.

    கோர்ட்டிலும் இது தொடர்பாக வழக்கு நடந்தது. தற்போது முதல் திட்டப் பணிகள் முழுமையாக அமலுக்கு வருவதால் கட்டணத்தை குறைத்தால் மேலும் பயணிகளை கவர முடியும் என்று கருதப்படுகிறது.

    அந்த வகையில் அதிகபட்ச கட்டணமான 70 ரூபாயை 60 ரூபாயாக குறைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதுபோல மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இடையே குறுகிய தொலைவுக்கும் கட்டணம் குறைக்கப்பட உள்ளது. இந்த கட்டண குறைப்பு அமலுக்கு வந்தால் மெட்ரோ ரெயில் சேவை மேலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. #MetroTrain
    மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை பட்டாபிராமை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    மாநகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து 18 கி.மீ. தூரம் உள்ள திரிசூலத்துக்கு ரூ.5 என்றும், 27 கி.மீ. தூரம் உள்ள தாம்பரத்துக்கு ரூ.10 என்றும் மின்சார ரெயிலில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.



    ஆனால் மெட்ரோ ரெயிலில் இதற்கு ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது மின்சார ரெயில் கட்டணத்தைவிட பல மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதையடுத்து மத்திய ரெயில்வே துறையின் செயலாளர், தமிழக தலைமை செயலாளர், மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி கோரிக்கை மனு அனுப்பினேன். அதில், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். மின்சார ரெயில் கட்டணத்தை போல, ரூ.5 மற்றும் ரூ.10 என்று கட்டணமாக குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.

    இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, எனது கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் விஸ்வநாதன் ஆஜராகி வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மனுதாரர் தன்னை அனைத்து உலக எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் என கூறிக்கொண்டு, மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகம் என்று இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

    ஆனால், மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது?, நில ஆர்ஜிதம் மற்றும் மெட்ரோ ரெயில்கள் வாங்க எவ்வளவு செலவு செய்யப்பட்டது? என்ற புள்ளி விவரம் எதுவும் மனுதாரரிடம் இல்லை.

    மேலும், மெட்ரோ ரெயில் இயக்க ஆகும் செலவின் அடிப்படையில், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு நீதிபதிகள், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் அதிகாரியாகவோ அல்லது செலவு தணிக்கையாளராகவோ உட்கார்ந்து கொண்டு கட்டணத்தை நிர்ணயம் செய்ய முடியாது.

    கட்டணம் நிர்ணயம் செய்வது மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதில், தலையிட ஐகோர்ட்டுக்கு குறைந்தபட்ச அதிகாரம் மட்டுமே உள்ளது.

    மேலும், மின்சார ரெயிலை விட, மெட்ரோ ரெயில் நிர்வாகம் பெரும் தொகையை கட்டணமாக வசூலிப்பதால், எந்த வகையில் தன்னுடைய அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது என்று மனுதாரரால் கூற முடியவில்லை.

    மெட்ரோ ரெயில் கட்டணத்தை சரிசெய்யும் வேலை இந்த ஐகோர்ட்டுக்கு கிடையாது. அதனால், வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    ×