search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரமலான் நோன்பு"

    இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்றுவரும் நைஜீரியாவின் கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அபுஜா:

    மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சமஅளவில் வாழ்கின்றனர். நாட்டின் வடபகுதியில் உள்ள சில மாநிலங்களில் மட்டும் இஸ்லாமிய ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களை மீறிய வகையில் செயல்படுபவர்களை கண்டுபிடித்து தண்டிக்க ‘ஹிஸ்பா’ எனப்படும் போலீஸ் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் மாலைவரை காவலில் வைத்து, எச்சரித்து விடுவிக்கப்பட்டனர்.

    முதல்முறை கைதானவர்கள் என்பதால் அவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை. மீண்டும் இதுபோல் செய்து பிடிபட்டால் வழக்கு தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுவீர்கள் என ‘ஹிஸ்பா’ போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இத்தகைய நடவடிக்கை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே. பிற மதத்தினரை ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களின்படி ‘ஹிஸ்பா’ போலீசார் தண்டிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    இறைப்பொருத்தத்தை நாடி, இந்த ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, இம்மையில் மகிழ்ச்சியான வாழ்வைப்பெற்று, நாளை மறுமையில் ‘ரையான்’ என்ற சுவர்க்கத்தை பெறுவோம், இன்ஷா அல்லாஹ்.
    இஸ்லாமிய மாதங்களில், ரமலான் ஒன்பதாவது மாதமாகும். இந்த மாதத்தில், கிழக்கு வெளுத்த நேரத்திலிருந்து, சூரியன் மறையும் வரை நோன்பு நோற்பது, முஸ்லிம்கள் மீது இறைவனால் கடமையாக்கப்பட்டுள்ளது.

    ‘நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்’. (திருக்குர்ஆன் 2:183)

    சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்து மக்களுக்கு வழிகாட்டும் இறைவேதமான திருக்குர்ஆன், நபி (ஸல்) அவர் களுக்கு இறைவனிடமிருந்து அருளப்பட்ட மாதம்தான் இந்த ரமலான் மாதம். இன்னும், ஆயிரம் மாதங்களை விட சிறப்புப் பெற்ற (லைலத்துல் கதர்) என்ற ஒரு சிறப்பான இரவை, தாங்கிக்கொண்டு வருகிறது இந்த மாதம்.

    ‘நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (திருக்குர்ஆன் 97:1-5)

    மற்ற மாதங்களில் செய்யும் நற் காரியங்களுக்கு அந்தச் செயல்களுக்கான கூலி மட்டும் கிடைக்கும். இந்த நோன்பு மாதத்தில் இறைப்பொருத்தத்தை மனதில் வைத்து, நோன்பு நோற்று இரவு, பகல் பாராமல் நற்காரியங்கள் செய்து வந்தால், இறைவனே ஒரு நன்மைக்குப் பத்து மடங்கு கூலி கொடுக்கின்றான். அதனால்தான், அறுவடைக்குக் காத்திருக்கும் விவசாயி போன்று, நன்மையை அறுவடை செய்ய ரமலான் மாதத்தை, உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

    ‘நோன்பு நோற்பவன் தன் உணவையும், பானத்தையும், இச்சையையும் எனக்காகவே விட்டுவிடு கிறான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். ஒரு நன்மைக்குப் பத்து மடங்கு கூலி வழங்குவேன்’ என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)

    மனிதனின் வளமான வாழ்விற்கு உடல் வலிமை எந்தளவிற்கு முக்கியமோ, அந்தளவு அமைதியான வாழ்விற்கு மனவலிமை அவசியப்படுகிறது. மனவலிமை பெற்றவர்களால் மட்டுமே இந்த வாழ்க்கையை முழுமையாகச் சுவைக்க முடியும். மனவலிமை பெறாத மனிதனுக்கு இந்த வாழ்வை முழுமைப்படுத்தும் வாய்ப்புகள் மிகக்குறைவாகத்தான் கிடைக்கின்றன. இன்னும், மனவலிமை பெறாத மனிதன், வாழ்வில் சந்திக்கும் சின்ன, சின்ன பிரச்சினைகளைக் கடந்து போக முடியாமல், தற்கொலையைத் தேர்வு செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

    பொய், சண்டை, மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்படுத்தும் செயல்கள் போன்ற சிறிய, பெரிய பாவங்களை விட்டுத் தவிர்த்துக்கொள்ள ரமலான் நோன்பு பயிற்சி கொடுப்பது நாம் அறிந்த ஒன்று. ஆனால், மனித வாழ்விற்கு அச்சாணியாக மாறும் மனவலிமைக்கும், ரமலான் மாதம் பயிற்சி அளிப்பது, நோன்பை உள்ளாய்வு செய்தால் நமக்குத் தெரியவரும்.

    நோன்பு காலத்தில் (பகல் நேரத்தில்) மற்ற நாட்களில் அனுமதிக் கொடுக்கப்பட்டவைகளை உண்ணாமலும், குடிக்காமலும், மனைவியுடன் உறவு கொள்ளாமலும் தன் உடலைத் தடுத்துக் கொள்ளுதல் வேண்டும். தனக்கு உரிமையான ஒன்று தன்னருகில் இருக்கும் போது, அதனருகில் நெருங்காமல் இருக்கச்செய்வது, மனதிற்கான நோன்பு தரும் உயர்தரப் பயிற்சியாகும். இந்தப் பயிற்சி மனித மனதுக்குள் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது.

    அன்றாடம் புதிய, புதிய பிரச்சினைகள், மனிதனை திசை திருப்புவதால் இந்த உலகில், சந்தோஷ வாழ்விற்கான வழிகள் மிகக்குறைவாகவே இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளை எதிர்நீச்சல் போட்டு நீந்திச்செல்ல, நோன்பு காலத்தில் எடுக்கும் பயிற்சி அவனுக்கு ஊக்கம் தருகிறது. இன்னும் வாழ்வின் மீது எதிர்மறையான எண்ணங்கள் அவனுக்குள் வீரியம் எடுக்காமல் இருக்கவும் இந்தப் பயிற்சி பயன்தருகிறது.

    உலகில் எங்கும், எந்தச் சூழ்நிலையிலும் விரும்பியது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மனமகிழ்வோடு வாழ்வை அமைத்துக்கொள்ள, இந்த நோன்பு மனபலத்தை தருகிறது.

    நன்மைகளை மட்டும் அள்ளிக்கொடுக்கும் மாதமாக மட்டுமில்லாமல், விரக்தி நிலையை அடையாமல் தடுக்கின்றது. மேலும், மனித மனதைப் பக்குவ நிலைக்குக் கொண்டு சென்று, அவன் அமைதியாக தன் வாழ்நாளைக் கழிக்க இந்த ரமலான் மாதம் காரணமாக அமைகிறது.

    அமைதியான வாழ்விற்கு எதிராக வரும் அனைத்துத் தீமை களுக்கும் நோன்பு கேடயமாக மாறி முன் சென்று தடுப்பதால், நபி (ஸல்) அவர்கள் ‘நோன்பு என்பது கேடயம்’ என்றார்கள்.

    சிலநாள் அமாவாசை இருளாகவும், சிலநாள் பவுர்ணமி வெளிச்சமாகவும் மாறக்கூடிய வானம் போன்றுதான் நம் வாழ்வும். இந்த இரு காலச்சூழ்நிலைகளிலும் மன மகிழ்ச்சியாகவும், மன உறுதியுடனும் நாம் வாழ, நமக்கான அழகான கேடயத்தை, இஸ்லாம் நம் கையில் கொடுக்கின்றது. நோன்பு என்ற அந்தக் கேடயத்தை பயன்படுத்தி, நம் வாழ்விற்கு எதிராக வரும் தீமைகளை தடுத்துக்கொள்வோம்.

    இறைப்பொருத்தத்தை நாடி, இந்த ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, இம்மையில் மகிழ்ச்சியான வாழ்வைப்பெற்று, நாளை மறுமையில் ‘ரையான்’ என்ற சுவர்க்கத்தை பெறுவோம், இன்ஷா அல்லாஹ்.

    ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
    இஸ்லாம் விதியாக்கியுள்ள அடிப்படை வழிபாடுகளில் ஹஜ் இறுதியானது ஆகும். உடல்நலமும், வாகன வசதியும், பொருள் வசதியும் உள்ளோர் மீதே இது கடமையாக்கப்பட்டுள்ளது.
    இஸ்லாம் விதியாக்கியுள்ள அடிப்படை வழிபாடுகளில் ஹஜ் இறுதியானது ஆகும். உடல்நலமும், வாகன வசதியும், பொருள் வசதியும் உள்ளோர் மீதே இது கடமையாக்கப்பட்டுள்ளது.

    இறைவனை தரிசிக்க மக்காவிற்கு தான் செல்ல வேண்டுமா? இறைவனை எங்கிருந்தும் தொழலாமே என்பது அர்த்தமுள்ள கேள்வி. ஹஜ் கடமை பல நோக்கங்களை கொண்டது. மற்ற வழிபாடுகளை போலவே ஹஜ்ஜின் முக்கிய நோக்கமும் இறையச்சம், இறை உணர்வு பெறுதல்(தக்வா)ஆகும்.

    நீங்கள் (ஹஜ்ஜுக்காக) வழித்துணை சாதனங்களை கொண்டு செல்லுங்கள். வழித்துணை சாதனங்களில் மிக மேலானவை இறையச்சம் தான் என்கிறது திருக்குர்ஆன் (2:197).

    ஹஜ்ஜின் போது பிராணிகளை பலியிடுகின்றனர். இது குறித்து குர்ஆன் சுறுகையில் பிராணிகளின் இறைச்சியும் இரத்தமும் இறைவனை சென்று சேர்வதில்லை. உங்களின் இறையச்சமே இறைவனை சென்று சேருகின்றது. என்று கூறுகின்றது.

    ஒழுக்கமுள்ள மனிதனை உருவாக்கும் ஒரு வழிமுறையே ஹஜ். ஏக இறைவனுக்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயத்திற்கு வரும் இறைநம்பிக்கையாளர்கள் அதனை கண்டு பரவசமடைகின்றனர். ஹஜ்ஜின் போது அதிகமாக தொழுகின்றர், பிரார்த்தனை புரிகின்றனர். பாவமன்னிப்பு கோருகின்றனர். இவை இறை உணர்வை வலுப்படுத்துகிறது. இது தவிர ஹஜ்ஜின் போது அவர்களிடத்தில் பல கட்டுப்பாடுகளும் உள்ளன. ஹஜ்ஜின் போது இச்சைகளை தூண்டக்கூடிய சொல், செயல் மற்றும் தீவினை, சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது என்று குர்ஆன் பணிக்கிறது(2:197)

    இறை இல்லத்தில் தரிசிக்க வந்துள்ளவர் மானக்கேடான செயல்கள், இச்சைகளை தூண்டக்கூடிய பேச்சுக்களிலிருந்து விலகி இருக்கிறார்கள் எனில் அவர் தம் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் தூய்மையான குழந்தையை போல் அவர் தம் வீட்டுக்கு திரும்புகிறார் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

    ஹஜ்ஜில் செய்யும் அவரது கிரியைகள் ஏக இறைப்பிரசாரத்திற்காக இறைத்தூதர் இப்ராஹீம் (அலை)அவர்களும், அவரது குடும்பத்தினரும் செய்த தியாகங்களை நினைவு கூர்வதாகவே உள்ளன. இது மக்கத்து மண்ணில் நான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் அவது தோழர்களும் உன்னத தியாகங்களை செய்தனர். மக்காவில் ஒவ்வொரு அங்குலமும் இதற்கு சான்று பகரும்.

    ஹஜ்ஜின் போது மக்காவில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இனம், மொழி, நாடு, நிறம் என்ற எல்லைகளை கடந்து உலகக்குடிமகன்களாக ஒரே உடையில் ஒரே முழக்கத்துடன் (தல்பியா) ஒன்று கூடுகின்றனர். மனிதகுலத்திற்கு இஸ்லாம் வழங்கிய சமத்துவக் கோட்பாடு உள்ளூர் பள்ளிவாசலில் தொடங்கி ஹஜ் பயணம் வரை செல்கிறது. எனவே ஹஜ் என்பது வெறும் பயணமும் அல்ல. சடங்கும் அல்ல. அது ஒரு சர்வதேச ஆன்மிக மாநாடாக சமத்துவ மாநாடாக திகழ்கின்றது.

    டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மது, சென்னை.
    ஐந்து வேளை ஆற்றில் குளித்தால் உடலில் எவ்வாறு அழுக்கு இருக்காதோ அவ்வாறே ஐவேளை தொழுவதால் பாவ அழுக்கு மனிதனிடத்தில் இராது என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
    இறைவழிபாடுகளில் தொழுகை முதலிடத்தை வகிக்கிறது. தொழுகை சுவனத்தின் திறவுகோல், இறைமார்க்கத்தின் தூண் என்றும், மறுமையில் கேட்கப்படும் முதல் கேள்வி தொழுகையை பற்றியதாக இருக்குமென்றும், தொழுகை மறுமையில் மனிதனுக்கு ஒளியாக திகழும் என்றும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    ஐந்து வேளை ஆற்றில் குளித்தால் உடலில் எவ்வாறு அழுக்கு இருக்காதோ அவ்வாறே ஐவேளை தொழுவதால் பாவ அழுக்கு மனிதனிடத்தில் இராது என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    இறைவனை வணங்க வாரத்தில் ஒருநாள் போதுமே. அல்லது காலையில் எழுந்த உடனும், இரவில் படுக்கச்செல்லும் முன்பும் அவனை வணங்கினால் போதுமே என்று நாம் எண்ணலாம். ஆனால் தொழுகை எதற்காகக் கடமையாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டால் இக்கேள்வி எழாது.

    நோன்பை போலவே தொழுகையும் ஒழுக்கழுள்ள, இறையச்சமுள்ள மனிதனை உருவாக்க இறைவன் வழங்கியுள்ள ஆன்மிகப்பயிற்சியாகும். மனிதன் தவறிழைக்கக்கூடியவன். அவனுக்கு இடப்பட்ட கட்டளைகளை மறக்கக்கூடியவன். சில வேளைகளில் இறைவனையேகூட மறந்து விடுவான். எனவே அவனுக்கு இறை நினைவூட்டி அவனை ஒரு பொறுப்புள்ள நேர்மையுள்ள மனிதனாக ஆக்கவே தொழுகை விதிக்கப்பட்டுள்ளது.

    மானக்கேடான தீய செயல்களிலிருந்து காக்கவே தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது என்கிறது குர்ஆன்(29:45). நல்ல மனிதனை உருவாக்க வேண்டுமெனில் இறைவன் அவனை கண்காணித்து கொண்டிருக்கின்றான் என்ற உணர்வை உண்டாக்க வேண்டும். தொழுகை அந்த வேலையை செய்கிறது. ஒரு நாளைக்கு ஐந்து முறை இறைவனை வணங்குவதால் எப்போதும் இறை சிந்தனையில் மனிதனை ஆழ்த்தி தவறுகளிலிருந்து மனிதனை காக்கின்றது.

    தொழுகை மனிதனுக்கு மன அமைதியை தருகின்றது. இறைவனை நெருங்கி அவனிடம் முறையிடுவதால் உள்ளம் அமைதி பெறுகிறது. தொழுகையின் மூலம் இறைவனிடம் உதவி கோரும் வாய்ப்பு கிட்டுகிறது.

    தொழுகை சமத்துவம், சகோதரத்துவத்திற்காக இறைவன் செய்த ஏற்பாடாகும். நிறம், குலம், மொழி, செல்வம், அறிவு, அதிகாரம் இவற்றின் அடிப்படையில் எவ்வித பேதமும் இன்றி அனைவரும் ஒரே வரிசையில் நின்று தொழுவதால் சமத்துவம் செயல்படுத்திக்காட்டப்படுகிறது.

    நீங்கள் இறைவனை பார்க்காத போதும் அவனை நேரில் பார்த்துத் தொழுவது போல் தொழுவதே உயர் பண்பயாளனின் நிலை (இஹ்ஸான்) என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

    தொழுகையை அலட்சியாக்குபவர்க்கு கேடுதான் என்ற இறைவசனத்தையும்(107:4) இறைநம்பிக்கையும் இறை நிராகரிப்பையும் பிரித்து காட்டுவதே தொழுகைதான் என்ற நபிமொழியையும் நினைவில் கொண்டு தவறாது தொழுது வாருங்கள். சாக்குபோக்கு சொல்லி தொழுகையில் இருந்து நழுவி விடாதீர்கள்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    அறக்கொடைகள் வழங்குவதை ஊக்குவிக்கும் இஸ்லாம் கஞ்சத்தனத்தை கடுமையாக சாடுகின்றது.
    அறக்கொடைகள் வழங்குவதை ஊக்குவிக்கும் இஸ்லாம் கஞ்சத்தனத்தை கடுமையாக சாடுகின்றது.

    மனிதன் பல காரணங்களுக்காக கஞ்சத்தனம் புரிகின்றான். வறுமை வந்துவிடுமோ என்ற அச்சம், மேலும் மேலும் பொருளைச் சேகரிக்க வேண்டும் என்ற பொருளாசை உலகின் மீது கொண்ட மோகம், வாரிசுகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்ற கவலை, சமூக அக்கறையின்மை, எனது உழைப்பை மற்றவர்களுக்கு நான் ஏன் தர வேண்டும் என்ற சுயநலம்  இப்படிப் பல காரணங்களுக்காக மனிதன் கஞ்சத்தனம் புரிகின்றான்.

    மனிதனின் இந்தக் கஞ்சத்தனத்தை போக்க இறைவனும், இறைத்தூதரும் பல அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளனர்.

    “அல்லாஹ் தனது அருளிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர்கள் கஞ்சத்தனம் புரிகின்றார்களோ அவர்கள் அதனைத் தமக்கு நல்லது என எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு மிகவும் கெட்டதாகும். தமது கஞ்சத்தனத்தின் மூலம் அவர்கள் சேமித்து வைத்தவை எல்லாம் மறுமைநாளில் அவர்களின் கழுத்தில் விலங்காகப் பூட்டப்படும்.”(3:180)

    “அவன் பொருளைச் சேகரிக்கின்றான். மேலும் அதனை எண்ணி எண்ணி வைக்கின்றான். அவன் கருதுகின்றான், தன்னுடைய பொருள் தன்னிடம் என்றென்றும் நிலைத்து இருக்கும் என்று. அவ்வாறன்று! சிதைத்துச் சின்னாபின்னமாக்குகின்ற ஓரிடத்தில் (நரகத்தில்) அவன் வீசியெறியப்படுவான்.”(104:2&4)
    மேற்கண்ட இறைவசனங்கள், பிறருக்கு கொடுக்காமல் சேகரித்து வைத்திருக்கும் செல்வம் அவனுக்கு கேடு விளைவிக்கும் என்று எச்சரிக்கிறது.

    கஞ்சத்தனமும், பேராசையும் ஒரு இறைநம்பிக்கையாளரிடம் ஒன்றாய் இருக்காது என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல்: நஸாயீ)
    “கஞ்சத்தனத்திலிருந்து விலகி இருப்பவர்களே வெற்றியாளர்கள்” என்ற இறைவசனம் (64:16) கஞ்சத்தனத்திலிருந்து விலகி இருக்கும் மனிதனை அது இழப்பிற்கு இட்டுச் செல்லாது, மாறாக வெற்றிக்கே இட்டுச் செல்லும் என்பதை உணர்த்துகிறது.

    தான் சம்பாதிக்கின்ற அனைத்தையும் இவ்வுலகிலேயே மனிதன் அனுபவிக்க முடியாது. இறப்பிற்கு பின் கொண்டு செல்லவும் முடியாது. தனது வாரிசுகளுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு பிறருக்கு வழங்கலாம். எனவே மனிதர்கள் குறுகிய எண்ணத்திலிருந்து விலகி, தாராள சிந்தனை உடையவர்களாக மாறும் போது இவ்வுலகின் நிலை மாறும். வறுமை ஒழியும். வளம் பெருகும். கஞ்சத்தனத்தை கைவிடுங்கள். பகுத்துண்டு பல்லுயிர் ஓங்கச் செய்யுங்கள்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    ரமலான் பாவமன்னிப்புக்குரிய மாதமாகும். பாவமன்னிப்பு எந்த மாதத்திலும், எந்த நாளிலும், எந்த நேரத்திலும் கோரலாம். ஆனால் சில குறிப்பிட்ட தினங்களில், நேரங்களில் பாவமன்னிப்பு கேட்க அதிகம் வலியுறுத்தப்படுகிறது.
    ரமலான் பாவமன்னிப்புக்குரிய மாதமாகும். பாவமன்னிப்பு எந்த மாதத்திலும், எந்த நாளிலும், எந்த நேரத்திலும் கோரலாம். ஆனால் சில குறிப்பிட்ட தினங்களில், நேரங்களில் பாவமன்னிப்பு கேட்க அதிகம் வலியுறுத்தப்படுகிறது. “ரமலானில் பாவங்கள் அதிகம் மன்னிக்கப்படுவதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்”.

    பாவமன்னிப்பு பற்றிய இஸ்லாத்தின் கோட்பாடுகளை அறிவது அவசியம். முதலில் எது பாவம் என்பதை அறிய வேண்டும். “ஆதத்தின் சந்ததிகள் (அதாவது மனிதர்கள்) தவறிழைக்கக்கூடியவர்களே! என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    தவறிழைப்பது மனித இயல்பு. அதே வேளையில் தவறுகளை உணர்ந்து, திருந்தி வாழும் இயல்பும், வலிமையும் மனிதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. நன்மை தீமை பற்றிய தெளிவான வழிகாட்டுதல்கள் இறைத்தூதர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. இறைவன் கண்காணிக்கின்றான் என்ற எச்சரிக்கையும் அவனுக்கு விடப்பட்டுள்ளது.

    எனவே தவறுகளிலிருந்து தன்னைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு இருந்தும் தன்னை திருத்திக்கொள்ளவில்லை என்றால் அதுவே பாவமாகும். பாவமென்பது வேண்டுமென்றே செய்வது. மீண்டும் மீண்டும் செய்வது, தவிர்த்திருக்க வாய்ப்புகள் இருந்தும் செய்வது ஆகியவற்றை குறிக்கும்.

    பாவங்கள் இரண்டு வகைப்படும்.

    1) இறைவனுக்கு எதிராகச் செய்யப்படும் பாவங்கள்: இறைவனை மறுத்தல், இணை வைத்தல், இறைக் கட்டளைகளை மீறுதல், இறைவனுக்கு நன்றி செலுத்த மறுத்தல் என்பன இதில் அடங்கும்.

    2) மனிதர்களுக்கு எதிராக செய்யப்படும் பாவங்கள்: கரத்தாலும், நாவாலும் பிறருக்கு தீங்கிழைத்தல், லஞ்சம், வரதட்சணை, மோசடி, வன்முறைகள் போன்றவை இதில் அடங்கும்.

    இறைவனுக்கு எதிராக செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு கோர வேண்டும். மனிதர்களுக்கு எதிராக செய்த பாவங்களுக்கு பாதிக்கப்பட்ட மனிதர்களிடத்தில் மன்னிப்பு கோர வேண்டும். உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும்.

    “அக்கிரமம் செய்தவர், அதனால் பாதிப்புக்கு உள்ளானவருக்கு உரிய இழப்பீட்டை செலுத்தாதவரை (பறித்த உரிமைகளை திருப்பித் தராதவரை) இறைவன் அவர்களை தண்டிக்காது விடமாட்டான்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    நம்மை அறியாது நாம் செய்த சிறு பாவங்கள், நோன்பு, தொழுகை போன்ற வழிபாடுகள் மூலம் மன்னிக்கப்படுகின்றன. பெரும்பாவங் களைப் பொறுத்தவரையில், அவற்றுக்கு பாவமன்னிப்பு கோரும் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    ‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்’. (2:183)
    ரமலான் நோன்பு புனிதம் மிக்கது; மனிதம் மிக்கது. பசி என்றால் என்ன என்பதை அனைவருக்கும் புரியவைப்பது; சுய உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் அடக்கிவைப்பது; சுய கட்டுப்பாட்டுடன் நாம் வாழக்கற்றுக் கொள்வது... என பல்வேறு படிப்பினைகளை கற்றுத்தருவது தான் இப்புனித நோன்பு.

    ‘ரமலான்’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘கரித்தல்’, ‘எரித்தல்’, ‘பொசுக்குதல்’ என பல பொருள்கள் உண்டு. இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி, அஸ்தமனம் வரை உண்ணாமல், பருகாமல் இருந்து, முறையாக பிரார்த்தனைகள் செய்து, ஏழைகளுக்கு வாரிவழங்கி, இறைவன் வகுத்த கடமைகளை செய்வதன் மூலம் நமது பாவக்கறைகளை போக்கிவிடலாம்.

    இந்த மாதத்தில் தான் சர்வதேசத்திற்கும் வழிகாட்டியான சங்கைமிகு திருக்குர்ஆன் இறங்கப்பெற்றது என்பதால், இந்த ரமலான் மாதம் எத்தகைய சிறப்பு மிக்கது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

    ரமலான் மாதத்தின் சிறப்பு குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமலான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப் போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று)விடவும்.

    அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை (கொடுக்க) விரும்பவில்லை. மேலும் (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒருமாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்’. (திருக்குர்ஆன் 2:185)

    நோன்பு என்பது மனிதர்களை சிரமப்படுத்துவதற்காக வந்த ஒன்றல்ல. மனிதர்கள் அனைவரும் ஈருலகிலும் சிரமம் இல்லாமல் வாழ்வதற்காக அல்லாஹ்வால் உருவாக்கப்பட்ட ஒன்று தான் இந்த ரமலான் நோன்பு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருமாதத்திற்கு முன்பிருந்தே நோன்புக்கு தயாராகி விடுவார்கள் என்பது நபிமொழியாகும்.

    மனிதர்களுக்கு கடமையான இந்த நோன்பு குறித்த திருக்குர்ஆன் வசனம் வருமாறு:

    ‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்’. (2:183)

    நோன்பு நமக்கு மட்டும் கடமையாக்கப்படவில்லை. நமக்கு முன் வாழ்ந்த சமூகத்தினர் மீதும் இந்த நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது என்பதை இந்த வசனத்தின் மூலம் நாம் அறியலாம். மேலும், இந்த நோன்பின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன் என்ன என்பதையும் இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது.

    அதாவது, இந்த நோன்பின் மூலம் நாம் இறையச்சம் உடையோராக ஆகலாம். ரமலான் மாதத்தில் நாம் கடைப்பிடிக்கும் இந்த நோன்பு நம்மை இறையச்சம் மிக்கவர்களாக மாற்றும் சிறப்பு மிக்கது என்பதை இதன்மூலம் நாம் அறியலாம்.

    மனித வாழ்வு சிறக்க இறையச்சம் மிக அவசியம். அந்த அற்புதமான இறையச்சத்தை இந்த நோன்பு நமக்கு வாரிவாரி வழங்குகிறது. ரமலான் நோன்பின் மூலம் அந்த இறையச்சத்தை நாம் பெறலாம் என்றால், அதை பயன் படுத்திக்கொள்வது தானே புத்திசாலித்தனம்.

    இறையச்சம் இல்லாமல் செய்யப்படும் எந்த பிரார்த்தனைகளும் இறைவனிடம் ஏற்கப்படுவதில்லை. மேலும் இறையச்சம் உள்ளவர்களுக்குத் தான் நேர்வழியில் வாழும் வாய்ப்பும் கிடைக்கும். இதன் மூலம் இறையச்சமற்ற எந்த ஒரு செயலும் வீண் என்பதை எளிதாக நாம் புரிந்து கொள்ளலாம்.

    இறையச்சம் என்பது அல்லாஹ்வை அஞ்சுவது மட்டுமல்ல. அவன் விதித்தவைகளை ஏற்று நடக்க வேண்டும், அவன் விலக்கியவைகளை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும்.

    அப்படி நடக்கும் போது தான் கட்டுப்பாடு என்பது நமக்குள் உருவாகும். ஒருவனுக்கு சுயக்கட்டுப்பாடு வந்து விட்டால் அவனை எந்த துன்பமும் அணுக யோசிக்கும். அந்தக் கட்டுப்பாடு நமக்கு வர உதவுகிறது இந்த புனித ரமலான் நோன்பு.

    உடலின் ஆசைகளையும், உயிரின் ஆசைகளையும் நோன்பு நிச்சயம் தடுத்து நிறுத்தும். அதற்கு முதலில் நாம் நமது நோன்பை இறைவன் வகுத்த வழியில் கடைப்பிடிக்க வேண்டும். சும்மா பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் அல்ல நோன்பு. இறைவன் காட்டிய வழியில் நோன்பை கடைப்பிடிப்பது தான் சிறப்பு மிக்கது.

    இதனால்தான், ‘நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலிகொடுப்பேன்’ என்கிறான் அல்லாஹ்.

    இந்த பாக்கியம் நோன்பாளிகளுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    அத்தகைய சிறப்பு மிக்க ரமலானைப் போற்றுவோம், இறைவன் காட்டிய வழியில் நோன்பிருந்து இறையச்சத்தைப் பெறுவோம்.

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3. 
    ×