search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரீசா ஹென்ரிக்ஸ்"

    கண்டியில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் அறிமுக வீரரின் சதத்தால் 78 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கண்டியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் ஹசிம் அம்லா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    டி காக் 2 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து அறிமுக வீரரான ரீசா ஹென்ரிக்ஸ் களம் இறங்கினார். இவர் ஹசிம் அம்லா உடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அம்லா 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    ரீசா ஹென்ரிக்ஸ் 89 பந்தில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். அதன்பின் வந்த டுமினி 90 பந்தில் 92 ரன்னும், மில்லர் 47 பந்தில் 51 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது.

    பின்னர் 364 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. அந்த அணியின் வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க 45.2 ஓவரில் 285 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தனஞ்ஜெயா டி சில்வா அதிகபட்சமாக 84 ரன்கள் சேர்த்தார்.



    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் லுங்கி நிகிடி 4 விக்கெட்டும், பெலுக்வாயோ 3 விக்கெட்டும் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா மூன்றிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன.
    ×